Friday, March 07, 2014
எப்படி வந்தது?
பெண்ணுக்கு விடுதலை
பெரும்படிப்பால் தான் என்றபோது
பெருமையுடன் பட்டங்களை
எண்ணத் தொடங்கினேன்
பெண்மைக்குள் பொதிந்திருக்கும்
பேராற்றல்களை
பெரும் பெரும் புத்தகங்களின்
சொல்லாட்சிக்குள் தேடினேன்
கீழுழைப்பைக் கற்றுக்கொடுத்த
முதலாளியத்தின் சுரண்டல்களை
பெண்விடுதலை என முழக்கமிட்டோர் கூட்டத்தில்
முண்டியடித்து முன்னணியில் வந்தேன்
அரசியலில் அதிசயம் படைத்தோருக்கும்
அதிசயமாய் அரசியலில் நுழைந்தோருக்கும்
பேதம் புரியாது அத்தனை பேரையும்
பெருமைமிகு பெண்மணிகள் பட்டியலில்
தேடித் தேடிச் சேர்த்தேன்
ரஷ்ய மண்ணில் ஒரு கொலன்ரோயை
காலனித்துவ சாம்ராஜ்யத்தின் இரும்புப் பெண்மணியை
இஸ்ரவேல் பெற்ற கோல்டா மேயரை
இந்திய மண்ணில் நேருவின் புதல்வியை
இந்த மண் பெற்ற உலகின் முதற் பெண் பிரதமரை
தேடித் தேடிப் படித்தபோது
கிடைக்காத நிறைவும் பெருமையும்
இவளிடம் மட்டும் எப்படி வந்தது?
ஏழ்மையுடன் எதிர்நீச்சல் போடும்
எழுத்தறிவின்மையை சமாளிக்கும்
எவரதும் ஆதரவற்றதன்மையை சகித்துக் கொள்ளும்
'கைநீட்டுதல்'கௌரவக் குறைவு என்று
தனது காலில் நிமிர்ந்து நிற்கும் இத்துணிவை
கைக்கெட்டிய தூரத்தில் தரிசித்ததனாலா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment