Wednesday, August 03, 2005

மாற்றம்......?

வரிச்சுத் தடிகள் உடுத்து
வடலிப் பனையோலை சுமந்து
நிற்கும்
என் சிறிய சமையல் அறையில்
எனக்கு அத்தனை பிரியம்.

வேலைக்குச் செல்லும் என் கணவன்
பள்ளி செல்லும் என் பிள்ளைகள்
ஆனாலும்....
காலைப் பொழுதுகள்
மின்னடுப்பில் சமைக்கும்
என் அம்மாவுக்கு இருப்பது போல்
ஓட்டமும் நடையுமாய்
என்றுமே இருந்ததில்லை.

முதல் நாள் பொழுதில்
நான் குழப்பி விட்டவைகள்
அதனதன் ஒழுங்கில் அமர்ந்திருக்கும்
கரி மூடிய கேத்தல்...
அடிப்பிடித்த சோற்றுப்பானை...
பால் காய்ச்சும் சட்டி...
சுத்தமாய் துலங்கியிருக்கும்
சாம்பல் அகற்றி
மூட்டுவதற்கு வாகாய்
சுள்ளித் தடிகளுடன்
அடுப்பு
என் வரவுக்காய் காத்திருக்கும்

சமயலறையின் சுத்தம் தொடர்பாய்
அந்தச் சுத்தத்திற்குரியவன்
என்மீது வைத்திருக்கும்
ஆழமான பற்றுதல் தொடர்பாய்
எனக்குள் எப்போதும் வியப்பு...
அடுப்பு மூட்டுவது மட்டும்
எனக்குரியது என்ற
அவனின்
ஆழமான நம்பிக்கையுட்பட-------
மார்கழி, 1998

No comments: