Thursday, August 18, 2005

கடைத்தேற வழி எங்கே------?

ஆரம்பம் அதிவிஷேசம்;
மூன்று வருடங்கள்------- சமாதானத்துக்கான கதவு திறக்கப்பட்டு.-------- அகலத் திறந்தது என்னவோ ஏ 9 பாதை மட்டுமே. உலகின் அறிவியல் தொழினுட்ப வளர்ச்சி தொடர்பான அறிவு எதுவுமின்றி 15ம் நு}ற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரமையுடன் வன்னி வாழ் மக்கள். உலகின் வேகமும் விவேகமும் கண்ணுக்கு அப்பட்டமாகத் தெரிந்தும் என்ன--? தமிழனுக்குச் ~சகல விதத்திலும் ~ உதவி புரியவும் ஒத்தாசையாக இருக்கவும் அரசுக்கு விருப்பம். ஆனாலும் நினைத்ததையெல்லாம் அள்ளிக் கொண்டு வர ~இவன்கள்~ விடுகிறான்களில்லையே என்ற எரிச்சல், ஆவேசம், ஆத்திரம், குரோதம் யாழ் மக்களிடம்---- யாருடையதைக் கேட்பது ? யாருக்குக் கட்டுப்படுவது? என்ற இரண்டுங்கெட்டான் நிலையில் கிழக்கு வாழ் மக்கள்----. 2002 ஏப்ரலில் சமாதானத்தின் கதவுகள் திறந்ததாக நினைத்துக்கொண்டு ஏ 9 பாதை திறக்கும் வரை வடக்குக்கிழக்கின் யதார்த்தநிலை இதுதான்.

ஏ 9 பாதை திறந்ததும்------ யுத்தம் என்ற கொடிய அரக்கனின் கோரப்பிடிக்குள்ளிருந்து மீண்டு விட்ட நிம்மதி அனைத்து மனங்களிலும். எமதர்மனின் வாசற்கதவு இறுக்கி அடைக்கப்பட்டு விட்டது என்ற ஆசுவாசம் மக்களிடம்-----. அபிவிருத்திக்கான கதவு திறக்கப்பட்டுவிட்டதான மகிழ்வு பொருளாதார மேம்பாட்டில் அக்கறை கொண்டவர்களிடம்--- ஆய்வு முயற்சிகளுக்கான அடிப்படைகளைத் தரும் உலக ஆய்வுகள் இங்கு வந்திறங்குவதில் இனியென்ன தடை என்ற இறுமாப்பு ஆய்வாளர்களின் மனதில்---- எலி வளை என்றாலும் தனி வளையில் குடியிருக்கும் கனவு அப்பாக்களின் மனதில்--- வளவுத் தடியில் அடுப்பெரிக்கலாம், இளம் தேங்காய் துருவிக் குழல் பிட்டு அவிக்கலாம் என்ற பேராவல் அம்மாக்கள் மனதில்---- தம்மூர்ச் சுடலையிலேயே ஆறடி மண்ணைத் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற ஆறுதல் அப்பு ஆச்சிகளின் மனதில்--- உலகத்து இன்பங்கள் ஊர்க்கோடிக்குள் அனுபவிக்கலாம் என்ற குது}கலம் இளசுகள் மனதில்---- எமக்கு வேண்டியது கிடைக்கும் வரை எங்கிருந்தால் எமக்கென்ன என்று எதையுமே ஆழமாக யோசிக்காமல் சிறகடித்துத் திரியும் நிலையில் சின்னஞ்சிறுசுகள்; ;---

இன்று வரைக்கும் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மக்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம், கொழும்பு, திருகோணமலை போன்ற பகுதிகளிலிருந்து இத்தகைய மனநிலைகளுடன் யாழ் மாவட்டத்துக்குள் நுழைந்திருக்கின்றனர். யாழ்ப்பாணத்தக்குள்ளேயே அடிக்கடி மாறி மாறிக் குடியிருக்கும் 16,000 குடும்பங்களும் இதற்குள் உள்ளடங்குவர்.

இன்றைய யாழ் நகர் --------

குடும்ப ரீதியில் பார்க்கும் போது, பக்கத்து வீட்டானைப்பார்த்து தமது வீட்டையும் மதிலையும் இடித்து இடித்துப் புதுப்புதுத் தினுசுகளில் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது. வேலி போடுகின்றோமோ இல்லையோ புதிய விதமாக இரும்புக் கேற் போட்டேயாகவேண்டும் என விரதமிருப்பவர்கள் மிக அதிகம். புலம்பெயர் உறவகள் கொண்டு வந்து அன்பளிப்புச் செய்யும் கணினிகளில் பெரும்பாலானவற்றை அறிவுத்தேடலுக்கு உதவும் வகையில் பாவிக்கும் அறிவு இன்றி சீடீக்களைப் பயன்படுத்தித் திரைப்படங்கள் பார்க்கும் தொலைக்காட்சிகளாகப் பயன்படுத்துகின்றனர் எம் மக்கள். குடும்பங்களை முழுநேரம் தமக்குள் சிறைப்படுத்தி வைத்திருக்கும் சின்னத் திரைகள் மனித உறவுகளையும் தொடர்பாடல்களையும் தொலைது}ரம் விலகிச் செல்ல வைத்திருக்கின்றன. வீட்டுக்கு வருபவர்களை ~ஒரு வாய் தேத்தண்ணி குடியுங்கோ~ என வற்புறுத்தித்தன்னும் உபசரிக்கும் விருந்தோம்பல் மெல்ல மெல்ல விடுபட்டுப் போகின்றது. புதிதாக வீட்டுக்குள் வந்திறங்கியிருக்கும் குளிர்சாதனப் பெட்டி குளிர்கால இரவுகளிலும் கூட தேத்தண்ணிக்குப் பதிலாகச் சோடா கொடுத்து உபசரிக்கும் விசித்திர மரபை உருவாக்கியிருக்கிறது.
தீப்பெட்டிக்கு வேலை கொடுக்காது முதல் நாள் தணலில் அடுத்தநாள் காலை அடுப்பு மூட்டும் தமது சாமர்த்தியத்தை எண்ணித் தாமே பெருமைப்பட்டுக்கொள்ளும் அம்மாக்களை மாலை ஐந்துமணியுடன் சமையல் கட்டை இழுத்து மூடப்பண்ணும் வல்லமையை எரிபொருள் விலையேற்றமோ மின்சார வெட்டோ சாதிக்காத அளவுக்குச் சின்னத்திரை சாதித்திருக்கின்றது. குழந்தையைப் பெறுதல், அவர்களின் பசியை ஆற்றுதல் போன்றவற்றை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு ~என்ரை பிள்ளை தங்கப்பவுண்~ என்ற அறுதியான முடிவில் பிள்ளைகளின் எண்ணங்கள், அவர்களது நண்பர்கள், அவர்களின் போக்கு வாக்கு எதையும் நோண்டாத அப்பிராணி அம்மாக்களாக, சமைத்துப்போடுவதே தம் ஒரே பணியெனச் சமையல் கட்டே சகலதுமாய் இருந்த அம்மாக்கள் படிக்கும் தன் பிள்ளைகளுக்குச் சின்னத்திரை எத்தகைய தாக்கத்தை விளைவிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவின்றி சமையல்கட்டின் கணிசமான நேரத்தைச் சின்னத் திரைக்கு மாற்றியிருக்கின்றனர். தொலைக்காட்சித் தொடர்களின் இடையில் சேர்க்கப்படும் விளம்பர நேரங்களைக் கூட வீணடிக்க விரும்பாது, கச்சிதமாகக் கணித்து வேறொரு அலைவரிசையில் காண்பிக்கப்படும் இன்னொரு தொடரைப் பார்ப்பதற்கு அந்த நேரத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு அம்மாக்களிடம் தேர்ச்சி கூடியுள்ளது. தொடர்கள் பார்க்கும் நேரம் குழம்பாமல் இருப்பதற்காக கோவில் கும்பிடும் நேரத்தைக்கூட மாற்றியமைத்திருக்கன்றனர் சில அம்மாக்கள் என்றால் நம்ப முடிகிறதா?. படிக்கும் பொறுப்புணர்வைக் கணிசமாகக் கொண்டிருந்துங் கூட, சற்று நேரம் சின்னத் திரையின் முன் தாமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தாது என்று தமக்குத்தாமே சமாதானம் கூறிக்கொண்டு அல்லது ~அதையும் இதையும்~ தன்னால் கொண்டிழுக்கமுடியும் என நம்பிக் கொண்டு ~றிமோட் கொன்றோல்~ இல் உலகை வலம் வரும் நிலையில் பிள்ளைகள் மட்டுமல்ல அம்மாக்கள், அம்மம்மாக்கள் கூட. பொழுதுபோக்குச் சாதனமான தொலைக்காட்சி கல்வியாகவும் மாணவனை வடிவமைக்கும் கல்வி பொழுதுபோக்காகவும் மாறிவிடுமோ என்ற அச்சம் ஆரோக்கிய சமூகத்துக்காக ஏங்கும் மனித மனங்களில் புகுந்துள்ளது.
மாணவர்களைப் பரீட்;சைக்குத் தயார்படுத்தும் பொறுப்பைத் தாமே தனிய ஏற்றுக்கொண்ட தோரணையில் தனியார் கல்விநிலையங்கள். தனது நிலையை, தனது சூழலின் நிலையை, நாட்டின் நிலையை, தனது இலக்கை, பெற்றோர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது புரிந்து கொள்ள விரும்பாத அளவில் அதற்குள் சிறைப்பட்டிருக்கும் இளைய சமுதாயம். ஆங்கில வகுப்புக்களைத் து}க்கிச் சாப்பிட்டுவிட்டதோ என எண்ணுமளவிற்குக் கணிணிப் பயிற்சி நிலையங்கள். 2003ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பதிவிலுள்ள தனியார் கணினிப் பயிற்சி நிலையங்கள் மட்டும் 3630 ஆகும். து}ரத்து உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஆரம்பத்தில் தொலைபேசிக்கடைகளால் நிரம்பி வழிந்த யாழ்ப்பாணம் இன்று கையடக்கத் தொலைபேசிகளினால் நிரம்பி வழிகின்றது. வகுப்பறைகள், நு}லகங்கள், கூட்டங்கள், மரண வீடுகள் போன்ற அமைதி காக்கும் இடங்களுக்காவது கையடக்கத் தொலைபேசியின் இயக்கத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் அடிப்படை நாகரீகத்தைக் கூட கைகழுவிவிட்ட அவலம் எம்மிடம். அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போன்று மரண நிகழ்வின் ஒப்பாரி ஓலங்களுக்கு மத்தியிலுங் கூட விடாமல் தொடரும் தொலைபேசி ஊடான துக்க விசாரிப்புகளும் அழுது குளறி ஆற்றல் இழந்து சோகத்தால் துவண்ட நிலையில் இருக்கும் கணவனை இழந்த மனைவியை, பிள்ளையை இழந்த தகப்பனைக் கூட தொலைபேசிக்கூடாக அழு என்னும் அன்புக் கட்டளைகளும், நேரடியாகத் துக்கம் அனுஷ்டிக்க வருபவர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. போக்குவரத்துக்கு வீதிகளை அகலப்படுத்தியே ஆகவேண்டிய இக்கட்டான நிலையை வாகனங்களின் அதிகரிப்பு ஏற்படுத்தியிருக்கின்றது. மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார், லொறி உட்பட 2000ம் ஆண்டில் பதினாலாயிரத்துச் சொச்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை தற்போது இருபத்திஐயாயிரத்துச் சொச்சமாக உயர்ந்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிள்களின் தொகையே மிக அதிகம். தனியார் பஸ்களுக்கு மினைக்கெடும் எண்ணத்தை இளசுகள் அறவே விட்டுவிட்டார்களோ என எண்ணும் அளவிற்கு மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை. 2000ம் ஆண்டு 11592 ஆக இருந்த யாழ்ப்பாண மோட்டார் சைக்கிள்களின் தொகை 2003ல் இருமடங்காகி 23065 ஆக உயர்ந்திருப்பதைப் புள்ளிவிபரக் கையேடு உறுதிப்படுத்துகின்றது. விடலைத்துடிப்பும் வேகமும் மோட்டார் சைக்கிள்களில் உருவேற ஒதுங்கிப்போகின்றவர்களின் தலைவிதி கூட இவர்களின் கரங்களில் தான். 2003ல் மட்டும் 1632 வீதி விபத்துகள் இடம் பெற்றுள்ளன. தகவல் தொழினுட்ப உலகத்துக்குள் கணிசமாக மூழ்கிவிட்ட நிலை கிராம நகரமா அல்லது நகரக் கிராமமா என வரையறுக்க முடியாத சிறுசிறு கிராமங்களுக்கே என்றால் மாநகரைச் சொல்லவும் வேண்டியதில்லை.

சான்றோனாக்குவது எங்கனம்?
~அதிகரித்து வரும் உள்நாட்டு வெளிநாட்டுக் குளிர்பானங்கள், இனிப்புப்பண்டங்கள், நவீனபாணியிலான பாடசாலைப் பைகள், சப்பாத்து, உடுபிடவை மாத்திரமன்றி ஆடம்பர சொகுசு பஸ்கள், மோட்டார் கார்கள் போன்ற யாவும் பிள்ளைகளின் மனங்களில் அதிக ஆசையை விதைத்துள்ளன. வெளிநாடுகளிலிருந்து வரும் உறவினர்கள் கொடுக்கும் அன்பளிப்புகள் எமது பிள்ளைகளையும் ஆசை என்ற வலைக்குள் சிக்க வைத்துள்ளன. ~எனது நண்பனின் மாமா வெளிநாட்டிலிருந்து கம்பியூட்டர் கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்திருக்கிறார். எனக்கும் வாங்கித் தா இல்லாது போனால் நான் பள்ளிக்குப் போகமாட்டன்~ என அடம்பித்து அழுதுபுரளும் பிள்ளையைச் சமாதானப்படுத்துவதே பெரும்பாடாக உள்ளது. சினிமாவிலுள்ளதைப் பொழுதுபோக்காகக் கருதாது அதிலுள்ளனவற்றை - அதே நடிப்புப்பாணி, அதே வார்த்தைப் பிரயோகங்கள், அதே தோற்ற அமைவு என்பவற்றை - நடைமுறைப்படுத்த வெளிக்கிட்டு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதப்படுவதும் அடிபடுவதும்---- வீட்டுச் சுமை, தொழில் களைப்பு என்பவற்றுடன் உழைக்கும் அனைத்தையும் கல்வி என்ற மூலதனத்தக்குள் போடும் எம் போன்ற குடும்பங்களுக்கு அக் கல்வியும் பாழாகும் நிலையில் இப்படிப்பட்ட நிம்மதி தேவைதானா என்று சிந்திக்கும் அளவுக்கு நிலைமை படுமோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

வெறும் 10 ஏ, 9 ஏ எடுக்கும் 0ஃடு உம் இ 3 ஏ எடுக்கும் யுஃடு உம் எனக்கு வேண்டாம். குப்பி விளக்கில் கற்று ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் மரியாதை செலுத்தி, பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னரும் தனக்குக் கற்பித்த ஆசிரியரைத் தெய்வமாக மதிக்கும் மாணவனாகத் தான் எனது பிள்ளை இருக்க வேண்டும். ஒழுக்கமுள்ள, தன்னலமற்ற, கட்டுப்பாடான, அன்பான, இலட்சியம் நிறைந்த, பொருளாதாரத்தில் மேம்பட்ட ஒரு சமூகத்தின் உருவாக்கத்துக்கு இத்தகைய மாணவன் தான் முதுகெலும்பாக முடியும். யுத்த காலத்தில் எங்கே எமது பிள்ளைகளை இழக்க நேரிடுமோ என்ற பயம் மட்டும் தான். வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்பட்டால் வீட்டை மறந்து வேலையில் ஈடுபடுமளவிற்கு தமது வேலைகளை ஓர் ஒழுங்கான முறையில் அமைதியாக மேற்கொள்ளவும் தாம் என்ன செய்யவேண்டும் என்பதை தாமே தீர்மானித்து நடக்கக்கூடிய சுய ஆற்றலும் அதிகமாகக் காணப்பட்டது. இன்று பிள்ளைகளின் உயிரைப் பாதுகாக்க முடியும் என்ற ஒன்றைத் தவிர சமூகத்திற்குப் பயன்படக்கூடிய பிள்ளையாக அவர்களை வளர்க்க முடியுமா------ ?

என ஆதங்கப்படுகின்றார்.. முறையே ஆண்டு பத்து, ஆண்டு ஆறு, ஆண்டு மூன்று வகுப்பில் படிக்கும் மூன்று குழந்தைகளின் தாய்.
இவரின் ஆதங்கம் நியாயமானது தான். ஆனாலும் முன்பைப் போன்று பிள்ளைகள் ஆசிரியரையோ பெற்றோரையோ மதிக்காத தன்மைக்குப் பிள்ளைகளை மட்டும் குறை சொல்ல முடியுமா என்ற வினா எழுகிறது. நிரம்பிய கல்வி, ஆழமான அறிவு, விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பாங்கு, உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல், தேசிய நோக்கம் முதலிய பல கருத்துக்களுக்கு இடந் தந்து நிற்கும் புலவர் மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளையின் ~ஆசிரியர் என்பவர் சூழ்ந்த பார்வையுடையவர்~ என்ற சொல்லுக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் மாறிவரும் புதிய உலகுக்கு ஏற்ப தம் அறிவுத் தளத்தை செப்பனிடாத ஆசிரியர்கள் எங்கே? ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விமேல் கேள்வியால் துளைத்தெடுக்கும் மாணவப் பருவத்தின் மதிப்பைப் பெற்றுக்கொள்வது எங்கனம்?

புதிய கலாச்சாரம்--?
பாதை திறப்பின் பின்னர் தம்முடன் தற்போது தாம் தங்கியிருக்கும் சூழலின் கலாச்சாரத்தையும் சேர்த்துக் கொண்டு வரும் புலம் பெயர் உறவுகளின் நடை உடை, பாவனை மட்டுமன்றி அவர்களின் பழக்கவழக்கங்களும் இங்குள்ளவர்களுக்கு அடிப்படையற்ற புதிய கலாச்சாரம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பதன் பிரதான வெளிப்பாடு மற்றவர்களை விடவும் இளைய சமுதாயத்தையே பெரிதும் பாதித்திருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
~வீட்டுக்குப் பொய் சொல்லிவிட்டு நண்பர் நண்பிகள் சேர்ந்து யாழ் குடாநாட்டுக்குள்ளேயே சுற்றுலாச் செல்வது. பிறந்த நாள் விழாவை குளிர்பான நிலையங்களில் பெரும் எடுப்பில் கொண்டாடுவது எங்களிடம் இப்போது தோன்றியிருக்கும் புதிய கலாச்சாரம். இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாவது பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் பெற்றோர்கள் தான் என்பதை எம்மில் மிகக் குறைந்த அளவினரே உணர்கின்றோம். பொருளாதார நிலையில் பின் தங்கிய பெற்றோரின் பிள்ளைகள் தமது நண்பர்களின் முன்னே தாம் கொண்டு செல்லும் சிறு பரிசுப் பொருள் பரிகசிக்கப்படுவதை விரும்பாது நண்பர்களின் நிலைக்கேற்ப உயர் பரிசுப் பொருள் வாங்கித் தருமாறு பெற்றோரை நிர்ப்பந்திக்கின்றனர். பரிசுப் பொருள் மட்டுமன்றிக் குளிர்பான நிலையங்களில் பிறந்த நாள் விழா என்ற பெயரில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் நாம் எதை நோக்கிப் போகின்றோம் என்ற குழப்பத்தையே ஏற்படுத்துகின்றது. சனப்புழக்கம் மிக்க யாழ் நகருக்குள் இருக்கும் பிரபல்யம் மிக்க குளிர்பான நிலையங்களை விட நல்லு}ர் கோவிலின் பின்புறம் இருக்கும் ஒரு குளிர்பான நிலையம் பள்ளி மாணவர்களின் கொண்டாட்டத்துக்குப் பொருத்தமான இடமாக அவர்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் எதுவெனப் புரியவில்லை.
வீட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான கையடக்கத் தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டு பிடித்து அவர்கள் அனுப்பும் செய்திகள் பெற்றோரிடம் எம்மைப் பற்றிய தேவையற்ற சந்தேகத்தை உருவாக்கி வீட்டை அல்லோல கல்லோலப்படுத்துகின்றன. எதிர்த்தால் வீதியில் போகமுடியாது.
ஆண்களும் பெண்களும் இணைந்து கல்வி கற்கமுடியாத நிலை பாடசாலையில் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆகக் குறைந்தது பத்து நிமிடங்களே வகுப்பு நேரத்தில் அமைதி காக்கப்படுகின்றது. ஆசிரியர்களுக்கே கொச்சைத்தனமாகப் பகிடிவிடும் அளவுக்கு நிலைமை மிகச் சீர்கெட்டுப் போகின்றது. நேருக்குநேர் தம்மைக் கேலி செய்தாலும் கூட ஏன் என்று கேட்க ஆசிரியர்கள் பயப்படுகின்றனர். சிவப்புக்கோடு அடித்து பள்ளிப்படிப்புக்கே முற்றுப்புள்ளி வைக்கும் வல்லமை இவர்களுக்கு இருக்கும் போது இவர்கள் ஏன் பயப்படுகின்றனர் என்று தெரியவில்லை. பாடசாலையில் காது கொண்டு கேட்கமுடியாத வக்கிரமான வார்த்தைகளை அள்ளி வீசும் அதே மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் மட்டும் சிறு சிரிப்புடன் ஒதுங்கிப்போய்விடுகின்றனர்.. எங்களுடைய முழக்கல்வித்தேவையையும் தனியார் கல்வி நிலையங்களே வடிவமைக்கின்றது. பணத்தைக் கொடுக்கின்றோம் கல்வியை பெறுகின்றோம் அவ்வளவு தான். பாடசாலையில் கிடைக்கக்கூடிய ஒற்றுமை உணர்வு, கூட்டு முயற்சி, அனுசரித்துப் போகும் தன்மை விளையாட்டின் மூலம் கிடைக்கககூடிய விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, கலை நிகழ்ச்சிகள் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய உருவாக்கத் தன்மை போன்றவற்றின் இழப்பு எமக்கு ஏற்பட்டுள்ள பாரது}ரமான இழப்பு ~

என ஆதங்கப்படுகின்றார் உயர்தர வகுப்புப் பள்ளி மாணவி ஒருவர்.

குறிப்பாக 2002ன் பின்னர் யாழ் குடாநாட்டில் விஸ்தரிக்கப்பட்ட சக்தி ரீவியின் வரவு சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வன்முறைகளின் நிலைக்களன்களாகவும் ஆபாசங்களின் உச்ச நிலைகளாகவும் அமையும் திரைப்படங்கள் மாணவர்கள் மத்தியில் விபரீத எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. திறந்த போக்குவரத்துக் காரணமாகப் பலதரப்பட்டோரும் குடாநாட்டினுள் சுதந்திரமாக உலா வருகின்றனர். போதை வஸ்துப் பாவனை, குடி, சிகரெட் பாவனை எமது மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல பாடசாலை மாணவர்களிடமும் அதிகரித்திருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மிக அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் ~தேவையான சகல வசதிகளுடனும்~ விடுதி ஒன்று இயங்குகின்றது. இதுபற்றிய நியாயமான கவலையை எழுப்புபவர்களிடம் பல்கலைக்கழகத்து விரிவுரையாளர் அறையில் நடப்பதைவிட பெரிதாக எதுவும் நாம் இங்கு செய்யவில்லை என தங்களது செயற்பாட்டுக்கு நியாயமும் சொல்கின்றனர் இவர்கள். கட்டுப்படுத்தப்படாத அளவில் திரைப்படங்களின் வரவானது மாணவர்களைக் ஹீரோக்களாக்கி அவர்கள் மூலம் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது. என்றுமில்லாதவாறு பத்திரிகைச் செய்திகளில் வாள்வெட்டுகள், குழுமோதல்கள், ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் சமூகத்தில் அதிகரித்துச்செல்வதும், குறிப்பாகக் குழு மோதல்கள் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டமையும் எதிர்கால சமூகத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது~

என ஆதங்கப்படுகின்றார் பல்கலைக்கழக மாணவி ஒருவர்.

மேம்பாடு இதுவல்ல
புலம் பெயர் உறவகளினால் எமது பொருளாதார வளம் மேம்பட்டுள்ளது தான். மேல்வர்க்கத்தினரை எதிர்க்க வழியின்றி அவர்களிடம் தங்கி வாழும் நிலையில் கூலிகளாக, அடிமை, குடிமைத் தொழில் செய்பவர்களாக, படியில் மாத்திரம் நின்று கையேந்தும் நிலையில் தமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளையும் மேல் வர்க்கத்தினரிடம் வேலைக்கு விட வேண்டியவர்களாக இருந்த எம்மவரை வெளிநாட்டு வருமானம் அடிமைத்தொழில் செய்வதிலிருந்து விடுவித்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்மையை மறுக்க முடியாது. மேல்வர்க்கத்தினரின் காணிகளை வீடுகளைக் கூட விலை கொடுத்து வாங்குமளவிற்கு, அவர்களின் உறவுகளைக் காதலித்துத் திருமணம் செய்யுமளவிற்கு, கூலிக்கு வேலை செய்வதை மறுக்குமளவிற்கு, பரம்பரைத் தொழிலையே கைவிடும் நிலைக்கு எம்மவர் முன்னேறியிருப்பதும் மகிழ்வுக்குரியது தான். என்றாலும் கல்வியை மேம்படுத்தும் போக்கைவிட, வாழ்க்கைக்கு வேண்டிய வழிகளை அறியும் அறிவை அடைவதைவிட வீடு வாங்குதல் அல்லது உடைத்துக் கட்டுதல், ஆடம்பர நகைகள்;, நவீன உடைகள் களிப்பூட்டும் சுற்றுலாக்கள் என்று அர்த்தமற்ற செலவுகளிலேயே இவ்வளம் வீணாகின்றது. இந்த வளர்ச்சி நிலையானதொன்றல்ல. அர்த்தம் பொதிந்ததுமல்ல.

அறிவை வைத்துத்தான் ஆளை அளவிட வேண்டுமேயன்றி வீட்டை வைத்தல்ல--- கல்விக்குரிய மதிப்பை, தொழிலுக்குரிய மதிப்பை பெறும் வகையில் உழைக்க வேண்டும். கஷ்டப்பட்டுப் படித்து சொந்தமாக உழைத்து சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்தும் கூட நல்ல நாள் பெருநாள்களில் திடீர் பணத்தால் வேஷம் கட்டி நிற்கும் இவர்களின் தரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கூனிக் குறுகி மூலையில் ஒதுங்கி ஒதுக்கப்படவேண்டியிருக்கிறதே~
என அங்கலாய்க்கிறார் பின்தங்கிய சமூகத்திலிருந்து படித்து முன்னுக்கு வந்து பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்திலும் இpருக்கும் குடும்பப் பெண் ஒருவர்.

சமாதானத்தின் கதவுகள் அறிவுத்தேடலை இந்தளவுக்கு விரிவுபடுத்த உதவக்கூடியதா என இங்கு வருகை தரும் புலம் பெயர் உறவுகளோ அன்றி வெளிநாட்டுப் பயணிகளோ மூக்கில் விரலை வைக்கும் அளவுக்குக் கிராமங்களின் கோடிப்புறங்களில் கூட முளைத்திருக்கும் இணைய மையங்கள் உண்மையில் அறிவுப் பசியாற்றும் மையங்களாகத் தொழிற்படுவதை விடவும் கிளி ஜோசியம் பார்ப்பதற்கும், அரட்டை அடிப்பதற்கும், ஆபாசப்படங்கள், சினிமாப் படங்களைப் பார்ப்பதற்கும், மலினமான கட்டுரைகளைப் படிப்பதற்குமே பயன்படுத்தப்படுகின்றது. 30 அல்லது 40 ரூபா கொடுத்துப் பயன்படுத்தும் இணைய மையங்களிலிருந்து அதி உச்சப்பயன்பாட்டைப் பெறும் ஒரே வழி நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள், திரைப்படங்கள் போன்றவற்றை உடனுக்குடன் சீடீக்களில் பதிவு செய்து அல்பங்களாக அவற்றை வீட்டில் அடுக்கிவைப்பது தான் என இளைய தலைமுறையினர் கருதுகின்றனரோ என எண்ணத் தோன்றுகின்றது. கருவியாக மட்டுமே கணினியைப் பயன்படுத்திய மனித சமூகம் தகவல் யுகம் ஒன்றிற்குள் காலடி எடுத்து வைத்த கையுடனேயே கணினியைப் பயன்படுத்திக் கடிதம் அனுப்பவும், வர்த்தகம் செய்யவும், உடனுக்குடன் உலகின் எந்த மூலையிலும் நடக்கும் சம்பவங்களை அறிந்து கொள்ளவும் இயலக் கூடிய நிலைக்கு வளர்ந்து நிற்கின்றது என்பதும், எமக்குத் தேவையான ஒரு நு}லைத் தேடுவதற்குக் கால் கடுக்கப் பேரூந்துக்குக் காவல் இருந்து, வேர்த்து விறுவிறுக்க நு}லகத்துக்குள் நுழைந்து, அங்கு தேடிக் களைத்து, அங்கே இல்லாத போது இன்னொரு நு}லகத்துக்கு அலைந்து--- சிரமப்படாது ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே நாம் விரும்பிய எதுவாயினும் - அறிவியல் ஆக்கங்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், அரிய நு}ல்கள், குழந்தை இலக்கியங்கள், புகழ் பெற்றவர்களின் வாழ்க்கைச் சரிதங்கள், எரிமலை, கல்கி, குமுதம் போன்ற சஞ்சிகைகள், உதயன், புதினம், வீரகேசரி போன்ற பத்திரிகைகள் - அவற்றை எமது விருப்பப்படி பார்க்க, படிக்க, குறிப்பு எடுக்க, விரும்பினால் ஒளிப்படப் பிரதி எடுத்துக் கொண்டு செல்ல, பல தகவல்களை ஒலி, ஒளி வடிவில் பயன்படுத்த, பி.பி.சி தமிழோசைச் செய்தியை கேட்க, ரி.ரி.என், தமிழ், தீபம், சிகரம், சக்தி போன்ற தொலைக்காட்சிச் சேவைகளைக் கண்டு களிக்க- முடியும் என்பதும் வாசிப்புப் பழக்கம் குறைந்த, நு}லகப் பக்கமே எட்டிப் பார்க்காத ஒரு சமூகத்திற்குத் தெரிவதற்கு நியாயமில்லைத் தான்.

வழி உண்டா?
சமூக ரீதியில் நோக்கும்போது, சமாதானத்திற்கான கதவு திறந்த பின்னர் வீடு கட்டுமானத்தில் சர்வதேச நிறுவனங்கள் கணிசமாகச் செலவழித்திருக்கின்றன. புனரமைப்பு எனப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தில் மொத்தமாக உள்ள 512 குளங்களில் 53 குளங்கள், சிறிதும் பெரிதுமாக 42 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. எரிந்த வடுக்கள் எதுவும் தெரியாமல் 20 மில்லியன் செலவழித்துக் கச்சிதமாகப் பூசி மெழுகப்பட்டிருக்கிறது யாழ்ப்பாணப் பொதுநு}லகம். 4.3 மில்லியன செலவழித்து சாவகச்சேரியில் புதிய பல்பொருள் அங்காடி கட்டப்பட்டிருக்கிறது. அதையும் விட அதிகமாக அதாவது 7 மில்லியன் செலவழித்துக் கல்வியங்காட்டிலுள்ள பழைய சந்தையும் 3 மில்லியன் செலவழித்துக் குருநகரின் சந்தையும் புனரமைக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயம் சொந்தக் காணியில் குடியேறும் நம்பிக்கையை இன்னும் தக்க வைத்துக் கொண்டு நலன்புரி நிலையங்களில் இன்றும் மக்கள் அடிப்படை வசதி எதுவுமின்றிச் சிரமப்படுகின்றனர். 2003ம் ஆண்டுப் புள்ளி விபரங்களின் படி யாழ்ப்பாணத்திலுள்ள 70 நலன்புரி நிலையங்களில் கிட்டத்தட்ட 2138 குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. வாழ்க்கைக்கான அத்திவாரம் இடப்பட வேண்டிய முன்பள்ளிகள்; இன்றும் தற்காலிக ஆசிரியர்களையே கொண்டுள்ளது. இங்குள்ள 659 முன்பள்ளிகளில் படிக்கும் 22128 குழந்தைகளுக்குப் படிப்பிக்கும் 1109 ஆசிரியர்களில் 1100 பேர் இன்றும் தற்காலிக நியமனத்திலேயே இருக்கின்றனர்.

எனவே அபிவிருத்தி என்பது என்ன? வெறும் கட்டிட உருவாக்கமா? அல்லது கட்டிடப் புனரமைப்பா? மனித விழுமியங்கள் அனைத்தையும் அடக்கம் செய்து விடும் ஊடக வளர்ச்சியா? அபிவிருத்தி என்பதன் உண்மையான கருத்தை அடிக்கொருதரம் படித்தவர்கள் நினைவில் மீட்க வேண்டிய அவசியம் மிக அவசரமானதும் அவசியமானதுமானதொன்று.

அனைத்துக் கதவுகளையும் இறுகப் பூட்டிய பின்னரும் சிறுசத்தத்துக்கும் அடிக்கொருதரம் திடுக்கிட்டு எழும்பிப் பயத்துடனும் சஞ்சலத்துடனும் வாழும் இந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சைக்கிளைக் கூட பூட்டாது அப்படியே வெளியில் விட்டுவிட்டு நிம்மதியுடன் து}ங்கிய அந்தப் பழைய சூழலுக்குத் திரும்புவது சாத்தியமா என அங்கலாய்க்கின்றனர் சிலர். வெளிநாட்டிலிருந்து சரமாரியாக வந்திறங்கும் இனிப்புப் பண்டங்கள், குளிர்பானங்களால் ஏற்படும் தேவையற்ற ஆசைகளை விடவும் முடியாமல் குறைந்த வருமானத்தில் அவற்றை வாங்கவும் முடியாமல் அல்லலபடும் மனதுக்கு தீர்வு கிடைப்பது எப்போது என மனம் குமைகின்றனர் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து ஆடம்பரச் செலவுகளை அறவே நீக்கி தெளிந்த நீரோடை போன்ற மனதுடன் உள்ளதுக்குள் உயர்வாய் வாழ விரும்புவோர். மின்சார வெட்டு அமுலில் இருந்த காலத்தில் விளையாட்டு, வீட்டு வேலைகளில் கவனம், உறவுகளுடன் நல்ல தொடர்பைப் பேணிய, மனிதனை மனிதனாக வாழவைப்பதே கல்வி என்பதை உணர்ந்து படிக்க வாய்ப்பளித்த அந்தப் பழைய சூழலுக்குப் போக மாட்டோமா என ஏங்குகின்றனர் மக்களைச் சான்றோர் என மற்றவர் வாயால் கேட்க ஆசைப்படும் பெற்றோர்கள். இந்தத் தனிமனித ஆசைகள் எல்லாம் சமூக ஆசைகளாக மாறும் காலம் ஒன்று இருக்குமாயின் இந்த அங்கலாய்ப்புகளுக்குச் சிலசமயம் வழி பிறக்கலாம்.

3 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

மிகவும் யதார்த்தமான, காலத்துக்கு அவசியமான பதிவு ஸ்ரீ.

-மதி

வசந்தன்(Vasanthan) said...

இண்டைக்குத்தான் இந்தப் பக்கத்தைப் பாத்தன்.
நல்லாயிருக்கு.
அவசியமான பதிவு.
கொஞ்சம் பத்திகள் பிரிச்சு போட்டா வாசிக்க இலகுவாயிருக்கும்.

யாழ்ப்பாண நிலமை சரியான கவலையாத்தான் இருக்கு.
புள்ளிவிவரங்களோட நல்லதொரு கட்டுரை.
ஒப்பீட்டளவில 95 க்கு முதலிருந்த நிலையில கல்வியோ விளையாட்டோ இப்ப இல்லையெண்டத் ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.
வசதிகள் மட்டுமே ஒரு சமூகத்தை வளர்க்காது எண்டது உண்மை.

நிறைய எழுதுங்கோ.

Srikanthaluxmy said...

அன்புடன் வசந்தன்,

உங்கள் கருத்துக்கு நன்றி. எனது எழுத்துக்களுக்கு ஆதாரமே அடுத்தவர்களின் நிர்ப்பந்தம்தான் எனவே இனியும் எழுதுவேன். கட்டுரைகள் சஞ்சிகைகளுக்கென எழுதப்பட்டவை. எனவே நீளமாக இருப்பது தவிர்க்க முடியாதது. அவற்றை வலைப்பதிவுக்கு ஏற்ற வகையில் பிரித்துப்போடுவதுதான் சிரமமாக இருக்கின்றது. எனினும் முயற்சிக்கிறேன். அடிக்கடி ஊக்குவிப்புத் தாருங்கள்.

சிறி.