Wednesday, February 05, 2014
காத்திருப்பு
நாளின் பெரும்பொழுது
என்னை
திட்டித் தீர்ப்பதிலேயே கழிகின்றது
நடக்குமுன்னரே பறக்கும் மனத்தை
முடிவெடுக்கு முன்னரே ஆட்டிவிடும் தலையை---
சொற்களை முந்திவிடும் பார்வையின் வீச்சை---
கட்டும் வல்லமை போதாமல்
கவலை விரவி நிற்கிறது
எதிரியின் எல்லைக்குள்ளேயான
வேவுப் புலியின் நகர்வை------
காவலரண் மீதிருக்கும்
மூட மறந்த விழிகளின் கூர்மையை---
குறி பொருத்திய துப்பாக்கி விசைவில்லில்
பதிந்திருக்கும் விரல்களின் உறுதியைப் போல்
ஒரு மனத்தை
அது அவாவி நிற்கிறது.
காத்திருக்கின்றேன்
என்னை எனக்கு உணர்த்திய ஏதோ ஒன்று
என்னை நான் ஆளவும் உதவும்
என்ற
அசைக்க முடியாத நம்பிக்கையுடன்.....
ஆகஸ்ட் 1996
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment