Wednesday, February 05, 2014
வீட்டுக்கொரு நூலகம்
வாசிப்புச் சூழல்
ஈழத் தமிழ்ச்சமூகத்திற்கு வீட்டு நூலகம் என்பது புதியதொரு கருத்துநிலையல்ல. மத்தியதர வர்க்கத்தின் வீடுகளிலுள்ள மிகப் பெரிய அலுமாரி(கள்) புத்தக அலுமாரி(களா)கவே இருந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததொன்று. அறிவுச் சமூகமென்று உலகளாவிய ரீதியல் பெயரெடுப்பதற்கு வெறும் கடிவாளக் கல்வியில் மட்டும் தங்கியிருந்திருக்க முடியாது. அதற்கும் மேலாக சுயதேடலால் வழிப்படுத்தப்பட்ட சமூகமாகவே தமிழ்ச் சமூகம் தன்னை இனங்காட்டியிருக்கிறது. ஈழத்து அறிஞர்கள் ஒவ்வொருவரும் நூற்குவியலுக்குள் தான் தமது வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்திருக்கின்றனர் என்பதை அவர்கள் நூலகங்களுக்கு வழங்கிய புத்தக அன்பளிப்புகள் சிலசமயம் அலுமாரிகளுடன் கூடிய புத்தக அன்பளிப்புகள் சான்று பகர்கின்றன. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட போர்கால சூழலும் தகவல் தொழில்நுட்பத்தின் ஆக்கிரமிப்பும் புத்தகக் கலாசாரத்தை ஈழத்தமிழ்ச் சமூகத்திடமிருந்து வெகுவாகவே அந்நியப்படுத்தியிருக்கிறது. இது வீட்டுக்கொரு நூலகம் என்கிற கருத்துநிலையை சுலோகமாக்கி ஒவ்வொரு வீட்டுக்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கசப்புடன் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.
ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கு சமூகம் இன்றியமையாதது. மரபு, வயது, பயிற்சி, சூழல் என்பன மனித உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. தனிமனித அபிவிருத்தியை கருத்தில் கொள்ளும் எந்தவொரு சமூகமும் தனிமனித அபிவிருத்தியின் ஆதாரமான குடும்பம் என்ற அமைப்பின் பங்கைப் புறக்கணித்து தனிமனித அபிவிருத்தியைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது.. கல்வி, சமூகமயமாக்கம், குழந்தை பராமரிப்பு என்பவற்றில் குடும்பம் என்பது பிரதான பங்காற்றுகின்றது. பிறப்பால் விலங்காக இருக்கும் மனிதன் மனிதனாக வார்க்கப்படுவது குடும்பம் என்ற அச்சில் தான.; மனிதன் சந்திக்கின்ற முதலாவது உறவான தாய் சேய் உறவு மனிதனுக்கு தன்னுணர்வையும், தன்னைச் சுற்றியுள்ள கூட்டாளிகளின் உறவு சமூக உணர்வையும் தோற்றுவிக்கிறது. சமூகத்தின் வளம், சமூகத்தின் மரபு, சமூகத்தின் தேவைகள், சமூகத்தின் சூழல் என்பவற்றின் அடிப்படையிலேயே மனிதனின் முன்னேற்றம் தங்கியுள்ளது. குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள் அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை' எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று மனித வாழ்க்கையில் குடும்பமும் சுற்றுப்புறச் சமூகமும் வகிக்கும் பங்கை தெளிவாகக் காட்டுகிறது
எனவே கல்வி தொடங்கவேண்டிய இடம் குடும்பம். பார்த்துச் செய்தல் குழந்தையின் பிரதான பண்பு என்பதனால் தேடல் உணர்வுக்கான களம் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. காலைப் பேப்பர் படிக்காது விட்டால் பொழுதே புலர்வதில்லை என அங்கலாய்க்கும் அப்பாமார்கள், வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினருக்குத் தேனீர் கொடுக்கவேண்டும் என்ற அந்த அவசரத்திலும் கூட தண்ணீர் கொதிப்பதற்கிடையில் சீனி சுற்றி வந்த பேப்பர் துண்டில் என்ன இருக்கின்றது என்று; பரபரப்புடன் கண்களை மேயவிடும் அம்மாக்கள், பரீட்சை அவசரத்தின் மத்தியிலும் கையில் புதிதாக அகப்பட்ட கதைப்புத்தகத்தை பள்ளிப் பாடப்புத்தகத்துக்குள் மறைத்து வைத்து வாசிக்கும் அக்காக்கள், நாட்டு நடப்புப்பற்றி அலசிக்கொண்டிருக்கும் 'எல்லாம் தெரிந்தவர்கள்' குழாம் ஒன்று தமக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பின்றித் திணறிக்கொண்டிருக்கும்போது, தேனீர் கொடுத்துவிட்டுத் திரும்பும் சாக்கில் இரத்தினச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தீர்வைக் கொடுத்துவிட்டுப்போகும் குறுகிய காலப் பள்ளிவாழ்க்கைக்குரிய அன்ரிமார்கள் என்று குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வாசிக்கும் உணர்வைச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் விதைத்து விடுகின்றனர். எனவே வாசிக்கும் சூழல் என்பது மிக முக்கியமான காரணி. எனவே ஒவ்வொரு குடும்பத்தவரும் வீட்டு நூலகத்தின் தேவையை உணருதல் அவசியமானது.
வாசிப்பு-அபிவிருத்தியின் ஒரு அலகு
முப்பது ஆண்டு கால போரின் வடுக்களைச் சுமந்து நிற்கும் இன்றைய எமது சமூக உறுப்பினர் ஒவ்வொருவரதும் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தை அபிவிருத்தி. 'சிறந்த கல்வி, உயர்ந்த போசாக்கு, சுகாதாரம், குறைந்த வறுமை, சுத்தமான சூழ்நிலை, மக்கள் யாவருக்கும் சம சந்தர்ப்பம் கிடைத்தல் அதிகளவு தனிமனித சுதந்திரம், செழிப்பான கலாசார வாழ்க்கை அனைத்தும் ஒன்றிணைந்ததுதான் அபிவிருத்தி. அபிவிருத்தியின் முக்கிய அம்சமாகக் கருதப்படுவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி ஆகும். 'எதிர்கால தலைமுறையினர் தமது சொந்தத் தேவைகளை தாமே பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றலின் மீது தாக்கம் எதையும் ஏற்படுத்தாது இன்றைய தலைமுறையினரின் தேவைகளை நிறைவுசெய்து வைக்கும் அபிவிருத்திச் செய்முறையே நிலைத்து நிற்கும் அபிவிருத்தி'. இத்தகைய அபிவிருத்தியானது குறிப்பிட்ட காலப்பகுதிக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தலைமுறையினருக்கும் மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை மாதிரியாகக் கருதப்படவில்லை என்பதைக் குறித்துநிற்கிறது.
அறிவின் வழி மனித அபிவிருத்தி
மேற்குறிப்பிட்ட கருத்துநிலைகளின் மையப் பொருள் மனிதன் என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தேசங்களின் உண்மையான செல்வம் மக்களே என்பதை அடிப்படையாகக் கொண்டு மக்களின் தெரி;வுகளை விரிவடையப்பண்ணுவதனூடாக முழுமையான வாழ்வுக்கு அவர்களை இட்டுச் செல்வதை நோக்காகக் கொண்டது. அது மக்களின் இயலாற்றலைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டது. மக்களின் உடல் நலம் தொடக்கம் பொருளாதார அரசியற் சுதந்திரம் ஈறாக மக்களின் நன்நிலை என்ற கருத்துநிலையை இது உள்ளடக்குகிறது. அபிவிருத்தியை இந்தவகையில் நோக்குதல் மனிதசமூகத்திற்குப் புதியதொன்றல்ல. அபிவிருத்தியின் இறுதி இலக்கு மக்களின் நன்நிலையே என்பதை அரிஸ்ரோட்டில் முதற்கொண்டு இன்றுவரை மெய்யியலாளர்கள், பொருளியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். 1998 இல் நோபல் பரிசை வென்றெடுத்த இந்திய பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென்னின் பார்வையில் அபிவிருத்தி என்பது பொருளாதார குறிகாட்டிகளினால் அளவிடப்படும் ஒன்றல்ல. அது மக்களின் நன்நிலை என்ற கருத்தை வலியுறுத்துவது.. எந்தவொரு அபிவிருத்தி முயற்சியின் இலக்கு மனிதனே. அபவிருத்திக்கான கருவியும் மனிதனே. அபிவிருத்தியின் கர்த்தாவும் மனிதனே. மனிதனுக்காக மனிதனைக் கொண்டு மனிதனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளே அபிவிருத்தியைத் தரும்.
ஆளுமை மிக்க மனித சமூகத்தின் பலம் அறிவு எனச் சொல்லப்படுகின்றது. பலம் என்பது இயற்கை வளத்தாலோ, பணபலத்தாலோ அளவிடப்படுவதில்லை. உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு. கண்டவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை எனப் புலன்களால் பெற்ற அறிவை புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மை கண்டு, புதிய கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மேலும் ஆய்வுசெய்து, சரிபார்த்து, கோட்பாடு கண்டு, சட்டமாக்கி உலகை வழிநடத்தும் ஆற்றலைப் பெறுவதற்கு அறிவு சார் சிந்தனை அவசியமாகும்.. அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்குப் பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற, தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்துபட்ட வாசிப்புத் திறனே. வாசிப்பதன் மூலமோ, கேள்வி ஞானத்தினாலோ நாம் பெறும் தகவலை தகவலாகவே வைத்திருக்காது அறிந்து கொண்டவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஆராய்ந்து செல்லும் போதுதான் 'அறிவு' எமக்குள் ஊறும். இதையே 'கற்றனைத்து ஊறும் அறிவு' , 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' ஆகிய குறள்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
வாசிப்பின் வழி தனிமனித அபிவிருத்தி
மனித அபிவிருத்தியில் தனிமனித அபிவிருத்தி தனித்து நோக்கப்படவேண்டியதொன்று. தனிமனிதனின் வளர்ச்சியின் கல்விக்கு அதிகூடிய பங்குண்டு. கல்வி பற்றி கீழைத்தேய சிந்தனையாளர் மகான் அரவிந்தரது கருத்துக்களை தனிமனித விருத்திக்கான அடிப்படையாகக் கொள்வது இங்கு பொருத்தமானது. கற்பித்தலின் முதலாவது கொள்கை எதையுமே யாருக்கும் கற்றுத் தர முடியாது. ஒரு மனிதனுள் ஏற்கனவே மறைந்து கிடக்கும் அறிவைத் தான் அவருக்குப் போதிக்க முடியுமேயன்றி அப்படி இல்லாத எதனையும் அவருக்குப் பயிற்றுவிக்க முடியாது. ஆசிரியர் தனது ஞானத்தை மாணவருக்குள் செலுத்துவதும் அவருள் கிடக்கும் அறிவை வெளியே கொண்டுவருவதும் இல்லை. மாறாக அறிவு புதைந்திருக்கும் இடத்தை மாணவருக்குச் சுட்டிக் காட்டி மேற்பரப்பிற்கு அதை இயல்பாக எப்படி வரவழைப்பது என்பதை அறிவுறுத்தலே ஆசிரியரது பணி. மாணவரின் வயது மட்;டத்துக்கு அமைய ஆசிரியரின் உதவி கூடிக் குறையுமேயன்றி பயிற்சி முறையில் மாற்றமிருப்பதில்லை. கற்பித்தலின் இரண்டாவது கொள்கை ஒரு மனது எவ்வாறு வளர வேண்டும் என்பதை அந்த மனதையே தீர்மானிக்க விடுவது. ஆசிரியரோ பெற்றோரோ தாம் விரும்பிய வடிவத்தில் குழந்தையைச் செதுக்க முடியாது. செதுக்கவும் கூடாது. அது காட்டுமிராண்டித் தனம். ஒரு பிறவி தனக்கே உரிய சுயதர்மத்தைக் கைவிடும்படி வற்புறுத்துவது அந்த ஜீவனுக்கு இழைக்கப்படும் நிரந்தரத் தீங்காகும். மூன்றாவது கொள்கை நமது முனைப்பு அருகிலிருப்பதிலிருந்து தொலைவிலிருப்பதற்குப் போகும் முயற்சியாக இருக்க வேண்டும். எமது முனைப்பு தற்போது என்னவாக இருக்கிறதோ அதில் தொடங்கித்தான் என்னவாக இருக்க வேண்டுமோ அந்த நிலைக்குச் செல்ல வேண்டும். நமது தற்போதைய பாரம்பரியம், தற்போதைய சுற்றுப்புறச் சூழல், எமது நாடு, எமக்கு ஊட்டமளிக்கும் எமது மண், நாம் சுவாசிக்கும் காற்று, நாம் காணும் காட்சிகள், கேட்கும் ஒலிகள், எமக்குப் பழக்கமாகிப் போன வழக்கங்கள் அனைத்துமே எமது இயல்பிற்கு அடித்தளமாக உள்ளன. இந்த அடித்தளத்திலிருந்து தான் மனிதனது கல்வி தொடங்க வேண்டும். அவருக்கு இயல்பாக அமைந்துள்ள வார்ப்பிலிருந்து தான் வேலையைத் தொடங்க வேண்டும். புதிய கருத்துக்களை முன் வைக்கலாமேயன்றி வற்புறுத்தக் கூடாது.
மேற் குறித்த கருத்திலிருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடியது பாடசாலைக் கல்வி மட்டும் தனிமனித அபிவிருத்திக்குப் போதுமானதல்ல. அதைவிட ஒருபடி மேற்சென்று சுயகற்றலில் ஒவ்வொரு மனிதனும் ஈடுபடுதல் மிக அவசியம் என்பது இங்கு தெளிவாகிறது. சுயகற்றலை எங்கிருந்து தொடங்கலாம்? சுயகற்றலின் மிக மிக அடிப்படையான அம்சம் பரந்துபட்ட வாசிப்பு. இது தொடங்க வேண்டிய இடம் வீடு. வீட்டு நூலகத்தை வடிவமைப்பதற்கான வழிமுறைகள் எவை? பின்வரும் அம்சங்கள் வீட்டு நூலகத்தை வடிவமைப்பதில் பின்வரும் அடிப்படை அம்சங்களையாவது கடைப்பிடித்தல் மிகமிக அவசியமானது.
நூல்களின் தேர்வு
வீட்டு நூலகத்தின் அடிப்படை அம்சம் தரமான நூல்களின் தேர்வு.
நூல்கள் தொகையாலோ தரத்தோலோ அதிகரித்துச் செல்லும் தன்மை இல்லாத ஒரு காலப்பகுதியில், நூல்கள் புனிதமானவை என்ற கருத்துநிலை மேலாதிக்கம் செய்த ஒரு காலப்பகுதியில் நூல்கள் அனைத்துமே அறிவுப் பொக்கிசங்களாகவே இருந்தன. கோவில்கள் மடாலயங்களில் பேணிப்பாதுகாக்கப்பட்ட எத்தனையோ பதிவேடுகளை இதன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். நூல்களின் தொகை விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலும் நூல் உருவாக்கத்தில் நீண்டகால அறிவும் அனுபவமும் பிரயோகிக்கப்பட்ட ஒரு காலத்திலேயே நூலைத் தேர்ந்து கற்க வேண்டும் என்ற பொருள் தரும் 'கல்வி கரையில கற்பவர் நாள் சில, மெல்ல நினைக்கிற் பிணி பல - தௌ;ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, பாலுன் குருகிற றெரிந்து' என்கிற அடிகளை மிகப்பழமை வாய்ந்த இலக்கண நூலான நாலடியார் தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது. அதாவது நீருடன் கலந்துள்ள பாலை அன்னம் எவ்வாறு பிரித்துப்பருகுகின்றதோ அவ்வாறே நூல்களின் சாரத்தைக் கிரகிக்க வேண்டும் என்கிறது. நூல் அழகுகள் மட்டுமன்றி நூல் குற்றங்களையும் பட்டியலிட்டிருக்கிறது தொல்காப்பியம்.
ஆனால் இன்றைய உலகம் அப்படிப்பட்டதல்ல. நிமிடத்துக்கு மில்லியன்கணக்கில் உருவாகும் இன்றைய நூல் உலகில், கணனி அறிவே நூலுருவாக்கத்துக்குப் போதுமானது என்ற கருத்துநிலையில் இருக்கும் சமூகத்தில் குப்பைக்குள் குன்றிமணியைத் தேடிப் படிக்கவேண்டிய நிர்ப்பந்தம் வாசகனுக்கு உண்டு.
'தரமான புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு அரிய கலை. தரமற்ற புத்தகங்களை ஈவிரக்கமில்லாமல் நிராகரிப்பது அதைவிடப் பெரிய கலை. நம்மை ஏமாற்ற வீசப்படும் தந்திர வலைகளுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு மிக மேலான புத்தகங்களைத்தேடி, அவற்றைப் படைத்திருக்கும் உன்னத ஆசிரியர்களைத் தேடி நாம் செல்ல வேண்டும் என்கிறரர் எழுத்தாளர் சுந்தரராமசாமி.
'அரிசியில் கல்லைக் கலந்துவிட்டால் பிரித்துவிடலாம். ஆனால் அறிவிலே நஞ்சைக் கலந்துவிட்டால் பிரிப்பது கடினம். எனவே நூல்தேர்வு கருத்தில் கொள்ளப்படவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்கள் நூலகங்களுக்கு கிடைக்க வழிசெய்யப்படவேண்டும்' என்கிறார் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா.
எந்தவொரு நூலும் அது கொண்டுள்ள கருத்தின் அடிப்படையில் புத்துயிர் தருவது, தகவலைத் தருவது, உயிர்ப்பூட்டுவது என மூவகைப்படுகிறது. உண்மையோ பொய்யோ நல்லதோ தீயதோ படிப்பவருக்கு ஒரு புதிய உணர்வை, புதுவித எழுச்சியை, புதுவித கிளர்ச்சியை, பொழுதுபோக்கு உணர்வைத் தருபவை புத்துயிர் தரும் நூல்கள் எனப்படும். புத்துயிர்ப்பு உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ இருக்கலாம். அப்பட்டமான உண்மையிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட ரோல்ஸ்ரோயின் புத்துயிர்ப்பு, மக்சிம்கோர்க்கியின் தாய், லியோன்யூரிஸின் எக்ஸ்சோடஸ் இவ்வகையைச் சார்ந்தது. சமூகத்தின் வாழ்நிலையைப் பிரதிபலிப்பவை தான் இலக்கியங்கள் என்ற உயரிய கருத்துநிலையிலிருந்து இம்மியும் வழுவாமல் படைக்கப்படும் எந்தவொரு இலக்கியமும் புத்துயிர்தரும் என்றவகையில் கவிதை நூல்கள், நாடக நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கியங்களும், ஓவியம், சிற்பம், போன்ற கலைத்துவ ஆக்கங்களும் புத்துயிர் தரும் நூல்களின் வகைக்குள் உள்ளடக்கப்படுபவை. இவை தவிர ஆன்மீக ரீதியில் வாசிப்பவருக்கு அமைதியையும் நிறைவையும் தருகின்ற ஆன்மீக நூல்களையும் புத்துயிர் தரும் நூல்களுக்குள்ளே உள்ளடக்கலாம். பழம்பெரும் இலக்கியங்களான புராண இதிகாசங்கள், திருமுறைகள் போன்றவை இவ்வகைக்குள் உள்ளடங்கும்.
வரலாறு, அரசியல், புவியியல் போன்று எடுத்துக் கொண்ட பொருட்துறை தொடர்பாக பொதுவான தகவலை உள்ளடக்குபவை தகவலைத் தரும் நூல்கள் எனப்படும். இவை குறிப்பிட்ட பொருட்துறையில் எழுதப்படும் தனிப்பொருள் நூல்களாகவோ, கல்வித்தேவையைப் பூர்த்தி செய்யும் பாடநூல்களாகவோ, ஆய்வுக்கு உதவும் அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், பருவ இதழ்கள் போன்ற அடிப்படை நூல்களாகவோ, அதுவுமன்றி தேவைப்பட்ட உடனேயே குறிப்புகளை வழங்கும் உசாத்துணை நூல்களாகவோ இருக்கலாம்.
இவை இரண்டையும் தவிர பொருளாதார தத்துவத்தை புகுத்திய அடம்ஸ்மித்தின் 'தேசங்களின் செல்வம்', பொதுவுடமைத் தத்துவத்தை தந்த கார்ல்மாக்ஸின் 'மூலதனம்', உயிரின உருவாக்கத்தை விளக்கிய டார்வினின் 'பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு', மக்கள் தொகைப் பிரச்சனையை விளக்கிய மால்தசின் 'மக்கள் தொகைக் கோட்பாடு', மனித மனத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டிய சிக்மண்ட் பிராய்டின் 'மனித மன சிந்தனை', போன்ற மனிதனின் அறிவைத் தூண்டுகின்ற, சிந்திக்க செய்கின்ற, மனிதனையும் சமூகத்தையும் முன்னேற்றுகின்ற உயிர்ப்பூட்டும் நூல்கள் எம்மிடம் மிகவும் குறைவே. சத்திய வாழ்க்கையை எடுத்தியம்பிய அரிச்சந்திரன் கதை, அதர்மத்துக்கும் தர்மத்துக்குமிடையிலான யுத்தத்தில் தர்மமே வெல்லும் என்பதை உணர்த்தும் பாரத இராமாயணக் கதைகள் இவ்வகைக்குள் உள்ளடக்கப்படக்கூடியவை. அதிலும் இந்த மூன்று அம்சங்களும் ஒருங்கு சேர அமைந்திருக்கும் அற்புத வாய்ப்பு ஒரு சில நூல்களுக்கே அமைந்து விடுகின்றது. ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
நூல்களின் இருப்பு
வீட்டு நூலகத்தைப் பராமரிக்கும் ஒவ்வொருவரும் அதற்கென நூல் வரவுப் பதிவேடு ஒன்றை வைத்திருத்தல் அவசியமானது. வீட்டு நூலகத்திற்கு நூல் வந்தடையும் கால ஒழுங்கில் இது 1,2,3--- என தொடரிலக்கத்தைப் பெறும். நூல் பெறப்பட்ட திகதி, நூலுக்கான வரவுப்பதிவெண், படைப்பாளர்; பெயர், நூலின் தலைப்பு, வெளியிடப்பட்ட இடம், வெளியீட்டாளர் பெயர், வெளியிடப்பட்ட ஆண்டு, பதிப்பு விபரம், நூல் பெற்றுக் கொள்ளப்பட்ட முறை, அன்பளிப்பாயின் நூலை வழங்கியவர் விபரம், நூலின் பக்க அளவு, விலை, மேலதிக குறிப்புகள் போன்ற விபரங்களை நூல் வரவுப் பதிவேடு கொண்டிருக்கும்;. இதற்கு ஒரு ஊசு கொப்பியே போதுமானது. இதன் இரட்டைப்பக்கங்களில் ஒரு பக்கத்தை நூல் வரவுப்பதிவெண், நூலாசிரியர் பெயர், நூலின் தலைப்பு ஆகிய விபரங்களுக்கும் அடுத்த பக்கத்தை ஏனைய விபரங்களுக்கும் ஒதுக்கலாம். இந்த இரட்டைப்பக்கங்களில் ஒரு நூலுக்கு ஒரு வரி என்ற அடிப்படையில் 30 நூல்கள் பதிவது கணக்கெடுப்பிற்கு இலகுவானது. எக்காரணங் கொண்டும் ஒரு நூலுக்கு வழங்கப்படும் வரவுப்பதிவெண்;ணை இன்னோர் நூலுக்குப் பயன்படுத்தக்கூடாது. விலக்கப்படும் நூலுக்கான விபரம் மட்டும் வரவுப் பதிவேட்டின் குறிப்புப்;; பகுதியில் பதியப்பட வேண்டும். இதன் மூலம் ஓரு நூலகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இற்றை வரைக்கும் நூலகம் பெற்றுக் கொண்ட மொத்த நூல்களைக் கணக்கிடவும் நூலகத்தில் எந்த நூல்கள் அதிக பாவனையில் இருந்தன என்பதை மதிப்பிடவும், எவ்வளவு நூல்கள் பாவனை காரணமாக அழிந்தன என்பதை மதிப்பிடவும் இத்தகைய செயல்முறை உதவும்.
நூல்களின் ஒழுங்கமைப்பு
வீட்டு நூலகத்தின் அடுத்த முக்கிய அம்சம் அதன் ஒழுங்கமைப்பு. நூலகப் பகுப்பாக்கம் அறிவின் திறவுகோல் எனப்படுகின்றது. ஆவணங்களை அதற்குரிய ஒழுங்கில் அடுக்கி வைக்கும் ஆற்றல் பெற்ற எவருமே அதன் அமைவிடத்தை இலகுவாக அறிந்திருப்பது மட்டுமன்றித் தேவைப்படும் போது எவ்வித நேரவிரயமுமின்றி அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதனால் நூலகப் பகுப்பாக்கமானது ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான மிகச் சிறந்த அடிப்படையாகக் கருதப்படுகின்றது. ஒத்த தன்மைகளின் அடிப்படையில் தர்க்க ரீதியிலான ஒழுங்கில் பொருட்களை, குறிப்பாக ஆவணங்களை அவற்றுக்குரிய சரியான இடத்தில் ஒழுங்குபடுத்தலே பகுப்பாக்கம் எனப்படுகிறது.
ஆரம்பத்தில் பத்து நூல்களுடன் வீட்டு நூலகத்தை ஆரம்பிக்கும் போது கூட இந்த ஒழுங்கமைப்பைக் கருத்தில் கொள்வது பயன்தரத்தக்கது.
ஏனெனில் தமிழ்ச்சமூகத்தின் நூலுருவாக்கத்தில் அதிக இடத்தை நிரப்புபவை இலக்கிய நூல்களும் சமயம் சம்பந்தப்பட்ட நூல்களும். வீட்டு நூலகம் வெறுமனே இலக்கிய சமய நூல்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுவிடுதல் கூடாது. சுயகற்றல் என்பது வெறும் கதைப்புத்தகங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதொன்றல்ல. வீட்டு நூலகத்தின் நூற்தொகுதியானது ஆரம்பத்தில் மேற்குறிப்பிட்ட துறைசார்ந்த நூல்களுடன் தொடங்கப்பட்டாலும் காலப்போக்கில் உலகிலுள்ள பாடத்துறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு நூலாவது இருக்குமாறு சமவிகித சேகரிப்புக் கொண்டதாக இருத்தல் அவசியமானது. அறிவுப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்துறைகளையும் வீட்டு நூலகத்தில் பரந்த பொருட்புலங்களின்கீழ் ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதலுக்கு இந்த ஒழுங்கமைப்பு உதவும். ஓவ்வொரு துறை சார்ந்த நூலுக்கும் ஒரு வகுப்பெண்ணை ஒதுக்குவதன் மூலம் இவற்றை எண்வரிசையில் ஒழுங்குபடுத்தலாம். உலகமெங்கும் நூல்களை ஒழுங்குபடுத்துவதற்கென பின்பற்றப்படும் தூயி தசமப் பகுப்புத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட வகுப்பெண்கள் வளையடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருக்கின்றன.
• முதனிலை அறிவியல்கள் ( Preliminary Sciences) : அறிவு ஆக்கம் (001) நூல் அறிவியல்(002) கணினி அறிவியல் (004) நூல்விபரப்பட்டியல்கள் (010) நூலகவியல் (020), பொதுக் களஞ்சியங்கள்(030), நிகழ்வுத் தொகுப்புகள்(030), பொதுப் பருவ வெளியீடுகள்(050), நிறுவனங்கள்(060), ஊடகவியல்(070), பொதுக் கட்டுரைகள்(080) அரும்பொருளகவியல்(090) மக்கள் தொடர்பு(659.2) போன்ற பிரதான துறைகளும்; அவற்றின் உப துறைகளும் இதில் உள்ளடங்கும்.
• இயற்கை அறிவியல்கள் (Natural Sciences): கணிதவியல்(510), வானவியல் (520), பௌதிகவியல்(530), இரசாயனவியல் (540), புவிச்சரிதவியல் (550), சமுத்திரவியல் (560) உயிரியல்(570), தாவரவியல் (580), விலங்கியல்(590) போன்றன இதில் உள்ளடங்கும்.
• பிரயோக அறிவியல்கள் (Applied Sciences): மருத்துவம்(610) பொறியியல்(620) தொழினுட்பம்(620) விவசாயம்(630) மனைப் பொருளியல்(640) முகாமைத்துவம்(650) பொது நிர்வாகம்(350) பயன்படு கலைகள்(700) என்பன இதில் உள்ளடங்கும்.
• சமூக அறிவியல்கள் (Social Sciences) : சமூகவியல்(301), அரசியல்(320), பொருளியல்(330);, சட்டவியல்(340) கல்வியியல்(370), புவியியல(910), வரலாறு(910), நாட்டாரியல்(398), வர்த்தகம்(380) ஆகியன இதில் உள்ளடங்கும்.
• மானுட அறிவியல்கள் (Human Sciences): உளவியல்(150), நுண் கலைகள்(700), இலக்கியம்(800), தமிழ் இலக்கியம்(810), ஆங்கில இலக்கியம்(820), தமிழ்க்கவிதை(811), தமிழ்நாவல்(813), மொழி(400), சமயம்(200), இந்து சமயம்(230), கிறிஸ்தவ சமயம்(270) தத்துவம்(100), சோதிடம்(133.5), போன்றவை இதில் உள்ளடங்கும். நுண்கலைகளில் கட்டிடக்கலை(720), சிற்பக் கலை(730), சித்திரம்(740), ஓவியம்(750), ஒளிப்படக் கலை(770), திரைப்படக்கலை(793), வளையாட்டு(796), இசை(780), மட்பாண்டக் கலைகள்(738) போன்றன முக்கியமானவை.
இலக்கியம் என்ற தலைப்பில் உலக இலக்கியங்கள் அனைத்தும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு இலக்கியமும் கவிதை, நாடகம்,புனைகதை, சிறுகதை, கட்டுரை, கடிதம், சொற்பொழிவு ஆகிய உருவப் பிரிவுகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றது.
நூல்களின் பௌதிக தயாரிப்பு
வகுப்பெண்ணையும் ஆசிரியர் பெயரின் முதல் மூன்று எழுத்துக்களையும் நூலின் முதுகுப் புறத்தில் 1.25 நீளமான வட்ட வடிவமான அல்லது முட்டை வடிவமான லேபலில் ஒட்டுதல், நூலின் முன் அட்டைப் பகுதியில் உட்புறத்தில் இடது பக்க மேல் மூலையில் 3'ஒ2.5' அளவுள்ள தாளில் நூலகத்தின் பெயர், வகுப்பு எண், நூல் சேர்வு எண் போன்ற விபரங்கள் உள்ளடக்கப்பட்ட. உரிமைப்பத்திரம் ஒட்டுதல், நூலகத்தின் முகவரியும் இலட்சினையும் கொண்ட முத்திரையை ஒட்டுதல் என்பன இதில் உள்ளடங்கும். வீட்டு நூலகத்திலுள்ள இருப்புப் பதிவேடானது நூல்களை விடய ஒழுங்கில் ஒழுங்குபடுத்துவதில்லை. அதேசமயம் நூல் இறாக்கைகளில் ஒழுங்குபடுத்தப்படும் நூல்கள் விடய ஒழுங்கிலேயே ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த விடய ஒழுங்கிலுள்ள நூல்களை இலகுவாக எடுக்க விரும்பின் நூல் வரவுப் பதிவேட்டிலுள்ள விபரங்களை 3 அங்குல அகலமும் 5 அங்குல நீளமும் கொண்ட மட்டைகளில் எழுதி அதனை அகரவரிசையில் ஒழுங்குபடுத்தி பராமரிப்பின் தேவைப்படும் நூல்களை இலகுவாக எடுக்கலாம். இம்முறை பட்டியலாக்கம் என அழைக்கப்படுகிறது. வீட்டு நூலகத்தினர் தம்மைச் சுற்றியுள்ள சமூக உறுப்பினர்களுக்கு நூல்களை இரவல் கொடுக்க விரும்பின் அதற்கென நூலின் முன்பகுதியில் அல்லது கடைசிப் பகுதியில் உள்ள பறக்கும் தாளில் திகதித் தாள் ஒட்டுவதன் மூலம் நூலை இரவல் வழங்குவதற்குத் தயார்படுத்தலாம். மேற்கூறிய வேலைகள் பூர்த்தியானவுடன் நூல்கள் நூல் இறாக்கைகளில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
நூல்களின் ஆரோக்கியம்
நூல்களை வெறுமனே வாங்கி அலுமாரிகளின் அடுக்கிவிட்டால் மட்டும் போதாது. மனித உடலுக்கு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதோ நூல்களுக்கும் அதன் ஆரோக்கியம் முக்கியமானது. இன்றைய உலகின் பெரும்பாலான நூல்கள் காகிதத்தால் உருவானவை. மழை, வெப்பம், மனிதர்கள், மிருகங்கள், பூச்சி புழுக்கள் போன்;ற அனைத்தினாலும் வலிமையாகப் பாதிக்கப்படக்கூடியவை. நூல்களுக்கு ஏற்படும் நோய்களில் குறிப்பிடத்தக்கது இராமபாணம், கறையான், கரப்பான் பூச்சி போன்ற பேருயிரிகளினால் ஏற்படுவது. இவற்றைத் தடுப்பதற்கான இலகு வைத்திய முறைகளில் ஒன்று.
வசம்பு, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை ஆகியவை தனித்தனி இரு பங்குகளும் மிளகு, கராம்பு என்பன தனித்தனி ஒரு பங்கும் கலந்து இடித்துத் தூளாக்கிய பின்னர் கண்ணறைத் துணியொன்றில் ஒரு மேசைக் கரண்டி வீதம் வைத்து அதன் மேல் சூடம் சிறிதளவு வைத்துப் பொட்டலம் போன்று கட்டி நூல் இறாக்கை ஒன்றுக்கு ஒரு பொட்டலம் வீதம் நூல்களுக்குப் பின் பக்கம் வைத்து விடுதல் வேண்டும். இதனுடைய பாவனைக் காலம் மூன்று தொடக்கம் ஆறு மாதங்கள் ஆகும். இதனைத் தொடர்ந்து பின்பற்றுதல் கண்டிப்பாகக் கூடாது. ஒரு மழைக்காலத்தின் பின்னர் இந்த முறையைக் கைக் கொள்ளலாம். வேப்பிலை, புகையிலை, புங்கமரம், நொச்சியிலை, போன்றவற்றை நிழலில் காய வைத்து இறாக்கைகளின் பின்புறம் வைக்கலாம். நூலுருவற்ற சாதனங்களான ஓலைச்சுவடிகள், தற்கால இலத்திரனியல் சாதனங்களுக்கு பின்வரும் முறைகளைக் கையாளலாம்.
ஒளிப்படங்களை அமிலத்தன்மையற்ற தாளுறைகளில் பாதுகாத்தல், செவிப்புலப்பதிவுகள் கோணலாவதைத் தடுப்பதற்கு வெப்பமான இடங்களிலிருந்து தூர வைத்தல், ஒலி நாடாக்களும் கிராமபோன் தட்டுக்களும் அதற்குரிய தாளுறைகளில் போடப்பட்டு நிலைக்குத்து வடிவில் கோவைப்படுத்தப்படல், காந்தப் பொருட்களுக்கருகில் இவற்றை வைப்பது தவிர்க்கப்படல், தொலைபேசி மணி காந்தப் புலங்களை உருவாக்குவதனால் வட்டுகளுக்கருகில் இவை வைக்கப்படுதலைத் தவிர்த்தல், வட்டுக்களை வளைத்தலோ துளை உள்ள இடத்தில் விரல்களால் தொடுதலோ தவிர்க்கப்படல், சேமிப்புப் பேழைகளில் சூரிய ஒளி படுதலைத் தவிர்த்தல், எண்ணெய் வகைகளோ, எக்ஸ்ரே கருவிகளோ வட்டுக்களின் பதிவுகளை அழித்துவிடும் என்பதால் அவற்றைத் தவிர்த்தல், கணினி வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு காலத்துக்குக் காலம் வைரஸ் அகற்றும் புதிய செய்நிரல்களை கொள்வனவு செய்தல் போன்றவற்றின் மூலம் நூலுருவற்ற சாதனங்களைப் பாதுகாக்கலாம்.
நூல்களின் பயன்பாடு
'குறிக்கோள் இலாது கெட்டேன்' என்றவாறு எதுவித நோக்குமில்லாது நூல்களை வாசிப்பதில் பயனில்லை. நோக்கத்தோடு வாசிக்கும்போது தான் எமக்கு வேண்டியவற்றை நூல் எங்களுக்குக் காட்டும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது புத்தகங்களுக்கும் பொருந்தும்' என்ற நாடறிந்த நாடகாசிரியர் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் மேற்கண்ட வரிகள் வாசிப்புக்கு நோக்கம் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படும் என்பது புத்தகங்களுக்கும் பொருந்தும்' என்ற நாடறிந்த நாடகாசிரியர் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் மேற்கண்ட வரிகள் வாசிப்புக்கு நோக்கம் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது.
'சில நூல்கள் ருசிக்கப்படவேண்டும். சில விழுங்கப்படவேண்டும். இன்னும் சில சப்பிமென்று சமிக்கச் செய்யப்பட வேண்டும். என்ற புகழ்பெற்ற தத்துவமேதை பிரான்சிஸ் பேகனின் மேற்கண்ட வரிகள் நூல்களை எப்படிப் படிப்பது என்ற அம்சத்தை மிக ஆழமாக கோடிட்டுக் காட்டுகின்றன.
வாசிப்பு அனுபவத்தை வார்த்தைகளில் வரைய முயற்சி செய்யலாம். வாசிக்கத் தொடங்குமுன்பு மனசுக்குள் ஒரு உலகம் இருக்கிறது. உயிரோடும் சுறுசுறுப்போடும் இயங்கும் புற உலகம் போல் இதுவும் இன்னொரு உலகம். மரபு, நம்பிக்கை, லட்சியங்களால் உருவாகும் உலகம். வாசிக்க வாசிக்க வாசிக்கப்படுகின்ற விடயம் மனசில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு கரைந்துகொண்டே இருக்கிறது. மன உலகத்துக்கும் வாசிப்புக்குமான உறவு இது. இந்த உறவு தான் வாசக அனுபவத்தை உன்னதமாக்கவோ அருவருப்பாக்கவோ செய்கிறது என்கிறார் தினமணி தமிழ்மணி இதழில் கட்டுரையாளர் பாவண்ணன்.
நூல்களின் பயன்பாடு என்பது மிக முக்கியமான அம்சம். தமிழ் அறிஞர்களின் வீடுகள் வீட்டு நூலகமாக மட்டுமன்றி சிலசமயம் நூற்கிடங்குகளாகவும் இருந்திருக்கின்றன. நூல்கள் நூல் இறாக்கைகளில் மட்டுமன்றி கதிரைகள், மேசைகள், திண்ணைகள் என்று காணுமிடமெங்கும் சிதறிக் கிடப்பதும் இவர்களின் வீடுகளுக்கு வரும் விருந்தினர்கள் சிலசமயம் இருப்பதற்கு இடமின்றித் தவிப்பதும் கண்கூடு. இத்தகைய வீட்டு நூலகங்களில் நூல்களின் பயன்பாடு பற்றி பேசுவதற்கு இடமில்லை. அதேசமயம் நூல் அலுமாரிகள் காட்சிப் பெட்டிகளாகக் கருதி வரவேற்பறையில் அதனை அழகாக அடுக்கி அதனை ஒரு தடவையாவது பயன்படுத்தாது பாதுகாக்கும் வீட்டு நூலகங்களும் எம்மிடையே கணிசமாக உண்டு என்பதையும் நாம் மறந்துவிடல் ஆகாது. இவற்றைப் பயன்படுத்துவது மட்டுமன்றி எப்படிப் பயன்படுத்துவது என்பதும் நாம் அறிந்திருக்கவேண்டியதொன்று.
'வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு'
தொகுப்பு
நூலக விழிப்புணர்வு நிறுவகம்
05-11-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment