பெண்மைக்குள் பொதிந்திருக்கும் பேராற்றல் - 2
கரங்கள்.....
கண்ணின் மணிகளை விடவும் காத்திரமானவை.............
பெண்ணென்று பிறந்துவிட்டால்.... இவை
இம்மண்ணில் பெரிதும் வேண்டப்படுபவை.
கருவறை திறந்து மண்ணுக்கு வந்தபோது
பெற்றவள் மனதைப்
பெரும் வேதனைக்குள்ளாக்கிய
துன்பக் கரங்கள் இவை....
மருதாணி இட்டு நக அழகு பார்க்கவோ
கொக்கான் வெட்டிக் குதூகலித்து மகிழவோ
கைநிறைய அள்ளி வளமாய் வாயில் போடவோ
வாய்ப்புகள் சிறிதுமற்ற வறுமைக் கரங்கள் இவை...
இன்னும்.. இன்னும் என்று கேட்டு
கைநிறைப்பவரை இன்று கண்டாலும்
இளமைப்பருவத்து இயலாமை கண்ணுக்குள் நிழலாட
ஏங்கித் தவிக்க வைக்கும் இயலாமைக் கரங்கள் இவை....
ஆரத் தழுவி... ஆசையுடன் தூக்கி ஏந்தி
உச்சி மோந்து உணர்வுடன் முத்தமிட
இடங்கொடுக்காத
மூட்டுக்கள் அற்ற கரங்கள் இவை....
உள்ளம் வெம்பி உருகிப் பெருக்கெடுத்து
வெளித்தள்ளும் கண்ணீரை
துடைக்கும் வலுவற்ற
துர்ப்பாக்கியக் கரங்கள் இவை....
மங்கைப் பருவத்தின் எண்ணச் சிறைக்குள்
இழுத்துப் போர்த்திக்கொண்டு
இனிய கனவுகள் காண்பதற்குத்
தடைக்கல்லாக இருந்திட்ட
வேதனைக் கரங்கள் இவை....
'வறுமையும் வலுக்குன்றிய தன்மையும் உலகப் பொதுவுடமை.
பெண்ணென்று பிறந்துவிட்டால் நித்தம் அது வதைச்சாலை...
பின்... இதிலென்ன புதுமை'
வறுமை அறியாமை, வலுக்குன்றிய தன்மை அத்தனையும் இணைந்த உலகப் பொதுக்குறியீடு இவள்.. இவளிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?
வறுமை இவளைத் துரத்துகின்றது....
வசதியின்மையோ சுகாதாரக் குறைவுக்குக் கதவு திறக்கிறது...
அறியாமையின் அவசரம் சுத்தத்துக்குக் கதவு மூடுகின்றது...
காப்பற்ற இச்சிறுகுடில் உதிரம் உருக்கி சிறுகச் சேர்க்கும்
உணவுப் பொருட்களையே ஊர்த் திருடரிடம் தொலைக்கிறது.
பின் என்னதான் இருக்கிறது இவளிடம் கற்றுக்கொள்ள...?
துன்பச்சுமை அழுத்தித் துவண்டு சரிகையில்
தூக்கி நிறுத்தித் துணிவு தந்திட்ட வியத்தகு கரங்கள் இவை !
இரத்தலே இவளது தலைவிதி என்று ஏற்றுக்கொள்ளும்
உலகப் பொதுநிலையை உடைத்தெறிந்து
முழுமை உடலுக்கன்று. அது உள்ளத்துக்கே என்று
செய்து காட்டும் உயர்ந்த கரங்கள் இவை !
ஒன்றல்ல இரண்டல்ல...
ஒன்பது உயிர்களுக்குப் பின்வந்த கடைக்குட்டி என்றாலும்
அங்கம் குறைந்தவர்களின் ஆரம்பப் பள்ளியைக்கூட
எட்டிப்பார்க்கவிடாத வறுமைச்சூழலுக்குள் அகப்பட்டுப்போனாலும்...
உருக்குலைந்து உணவுக்குக் கையேந்தி
உறவுகளுக்குச் சுமையாகிப் போகாமல்
உழைத்து உண்ண உதவிடும் உன்னத கரங்கள் இவை !
'கைபிடிக்க' தகுந்த கரம் இதுவோ? என்று எட்ட விலத்தியபோது
அன்புக் கணவனையே அருமைத்தங்கைக்கு
அர்ப்பணிக்கச் செய்திட்ட அனுதாபக் கரங்கள் இவை !
துணைவனாய் மாறித் துயர் தீர்த்தவன்,
ஊன்றுகோலாய் நின்று உதவி செய்தவன்,
உயிர் நீத்தபோது
தளர்ந்து போகாமல் நிமிர்ந்து நின்று
தனதும் தனது உயிர்களதும் உதரத்து நெருப்பைக்
குளிர்விக்கும் ஆற்றல் பெற்ற அற்புதக் கரங்கள் இவை !
முடியாது என்று முடிவாய் விலக்கிய பணியெல்லாம்
தாய் என்ற தகுதியைப் பெற்ற கையுடனே
தடுப்புச் சுவர்களை உடைத்தெறிந்து
சவால்களுக்கு முகங் கொடுத்த நிமிர்வுக் கரங்கள் இவை !
பெரிய பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும்
இச் சின்னச் சின்னக் காரியங்களை
இலாவகமாக நிறைவேற்றும் அதிசயக் கரங்கள் இவை !
மனிதம் நிறைந்த இம் மண்
சிறிதளவாவது குளிர்விக்க உதவட்டும் !
இவ்வுயிர்களின் உதரத்து நெருப்பை...
சிறிதளாவது காட்ட உதவட்டும் !
பள்ளிப்பருவத்து இனிமைகளை...
சிறிதளவாவது குறைக்க உதவட்டும் !
இக் குஞ்சுக் கரங்களின் வேதனையை....
சிறிதளவாவது கட்டியெழுப்ப உதவட்டும் !
வாழ்க்கை மீதான இவளது பிடிப்பை...
No comments:
Post a Comment