Thursday, May 11, 2017

கல்வி

சுயகற்றலுக்கு வாய்ப்பளிக்கும் நூலகங்களில் மையம் கொள்ள வேண்டிய இலங்கையின் கல்வித்துறை  பின்லாந்தின் கல்விமுறை தரும் புதியசிந்தனை

இலங்கையின் அபிவிருத்திச் சூழலில் சமூக செயன்முறையின் முக்கிய அம்சமாக கல்வி காணப்படுவதுடன்; பாடசாலைகள் சமூகத்தில் முக்கியமான அங்கமாகக் காணப்படுகின்றன. மாணவரிடையேயான பல்வகைப்பட்ட ஆற்றல்களும், திறன்களும் பாடசாலையினூடாக விருத்தி செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் மாணவர்களிடையே வளர்த்தெடுக்கப்படவேண்டிய அறிவுத் திறன, சிந்தனைத் திறன், தொடர்பாடற் திறன், தொழினுட்பத் திறன், ஊடகத்திறன், கணித அறிதிறன், செயலாக்கத் திறன் போன்ற முக்கிய திறன்களின் வரிசையில் அண்மைக் காலங்களில் மிக முக்கியமாக அதிகம் பேசப்படுகின்ற பதமாக தகவல் அறிதிறன் காணப்படுகின்றது. இது தேவையான தகவலைக் கண்டறிதல், மீளப்பெறல், பகுப்பாய்வு செய்தல், பயன்படுத்தல் முதலிய திறன்களின் தொகுதியாக அமைகின்றது.

ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும்  தேவையை முன்னிட்டு ஒரு மொழியின் அடிப்படையை மட்டும் கற்றுக் கொள்வதன் மூலம் வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான ஆற்றல் என்று பொருள் கொள்ளப்பட்ட எழுத்தறிவு அல்லது அறிதிறன் என்ற தனிப்பதமானது பொருட்துறைகளை நன்கு விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல், தகவலை நன்கு விளங்கிக் கொற்வதற்கும் தொழில்நுட்பக்கருவிகளை நன்கு கையாள்வதற்குமான ஆற்றல் என்ற விரிந்த வரைவிலக்கணத்தைக் கொண்ட தகவல் அறிதிறன் என்ற கூட்டுப்பதமாக அண்மைக் காலங்களில் வளர்ச்சியடைந்திருக்கின்றது. இந்நிலையில் மாணவர்களின் தகவலறிதிறன் மேம்பாட்டில் கல்விக்கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு' (OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில்  தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for International Students Assessment என்று பெயர். குறித்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகளிடையே பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. இந்நாட்டின் கல்விக்கொள்கையின் இரகசியம் உலகக் கல்வியியலாளர்களின் புருவத்தை உயர்த்தி விட்டிருக்கிறது. 'அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?' என அவர்களை எட்டிப்பார்க்க வைத்திருக்கிறது.
பின்லாந்து குடியரசு வட ஜரோப்பா கண்டத்தில் ஆர்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 338,424 சதுர கிலோ மீட்டர்கள். இதன் தலைநகர்: ஹெல்சிங்கி பல்லாயிரக்கணக்கான ஏரிகளும், காடுகளும், தீவுகளும் மற்றும் சதுப்பு நிலம் கொண்ட நாடாக விளங்குகிறது. எண்ணிலடங்கா ஆறுகள் நாடு முழுவதும் ஓடுவதால் சதுப்பு நிலங்கள் ஏராளம் உள்ளன. 2015 அனுமான கணக்கெடுப்புப்படி இந்நாட்டினர் மொத்தம் 5,483,424 பேர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் ஃபின் இனத்தவர்கள். ஃபின்னிஷ் மற்றும் ஸ்வீடிஷ் ஆகியவை ஆட்சி மொழிகளாக உள்ளன.  அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகமான நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா' என அழைக்கப்படுவதும் பின்லாந்துதான்.
பின்லாந்தின் தேசிய நூலகம் ஹெல்சிங்கியில் அமைந்துள்ளது. மொத்தக்குடித்தொகையான ஜந்தரை மில்லியன் மக்களுக்கும் தலா எட்டுநூல்கள் என்ற வகையில் சுமார் 40 மில்லியன் நூல்கள் பல்வேறு நூலகங்களிலும் பாதுகாக்கப்பட்டுள்ளன. 837 பொதுநூலகங்கள் 166 நடமாடும் நூலகங்கள்  58 நிறுவன நூலகங்கள் ஒரு கடலில் மிதக்கும் நூலகம் என சுமார் ஆயிரத்துக்குமேற்பட்ட நூலகங்களைக் கொண்ட பின்லாந்தை 'நூலகங்களின் தேசம்' என சர்வதேச நூலகச்சங்கங்களின் சம்மேளனம் (IFLA) வர்ணித்துள்ளது.

பின்லாந்தில் ஏழு வயதிலிருந்Nது ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. அதுவரை சுயதேடலுக்கான சுதந்திரம் அக்குழந்தைக்கு வழங்கப்படுகிறது. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்கு அடிப்படைக் கல்வியாகிறது. குழந்தை தனது தகவற்சூழலிலிருந்தே தனக்கு தேவைப்படும் தகவலைக் கண்டறிவதற்கு முனைகிறது. இப்படிநிலையிலே குழந்தையின் தகவலறிதிறன் இயல்பாக முளைவிடத்தொடங்குகிறது.

இத்தகைய கல்விச்சூழலை இலங்கையின் இன்றைய கல்வி;ச்சூழலோடு ஒப்பிடும் போது இலங்கையின் கல்விக்கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை உணரப்படுகிறது. பரீட்சை நோக்கிலான வகுப்பறைக்கல்வியில் அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என்ற இலங்கையின் தற்காலக் கல்விக்கொள்கையை வேரோடு பிடுங்கி எறியும வகையிலமையும்; பின்லாந்தின் சுயதேடல் நோக்கிலான சுதந்திரக்கல்வி இலங்;கையில் நூலகங்களின் நுழைவாயிலை அகலத்திறந்து வைத்திருக்கிறது.

எங்கள் பண்டைய கல்விமுறையில் ஏழு வயதில் குருகுலக்கல்விக்குச் சென்றும் திண்ணைப்பள்ளிக்கும் சென்று கற்றதைப்போல ஏழு வயதில பள்ளிக்குச் செல்லும் பின்லாந்துக் குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அண்ணளவாக ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறையில் தன்னிச்சையாக வளர்கிறது. பாடசாலை இயங்கும் நேரம் இலங்கைப் பாடசாலைகளைப் போலன்றி மிக மட்டுப்படுத்தப்பட்டது.  அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கிறது. படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். நூலகத்திற்குச் சென்று விரும்பியதைக்கற்கலாம். இதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வில்; பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது.
இலங்கையில் வலுவான சமூகத்தின் உற்பத்தி மையங்களாகக் காணப்படும் பாடசாலைகள் பரிட்சைக்கான தயார்ப்படுத்தும் பொறிமுறை முனையங்களாக தம்மை தற்காத்துக்கொள்வதில், பெறுபேறுகளில் போட்டியிட்டுக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இதன் விளைவாக மாணவரிடையே பிணக்குகள் அதிகரிக்கும் மனஅழுத்தம் போதைப்பாவனை என்பவற்றுடன் பாடசாலை இடைவிலகலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆனால் பின்லாந்தின் கதை வேறு. அங்கு 13 வயது வரை தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை பரீட்சைகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை. தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் இல்லை. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வுகள் அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். சுயதேடல் நோக்கிலான கல்விக்கு அனுகூலமான பாடசாலை நூலகங்கள் இருந்தும் வாசிக்க வாய்பபளிக்காத இலங்கையின் பாடப்புத்தகக் கல்வி மாணவர்களின் சுயசிந்தனைத்திறனை மழுங்கடிக்கிறது.
இலங்கையில் இலவசக்கல்வி என்ற பெயரில் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி புகட்டப்படுகின்ற போதிலும் அதில் தனியார் துறையின் செல்வாக்கு மிகுதியாகவே காணப்படுகிறது. தனியார் பாடசாலைகள் சர்வதேச பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புக்கள் என நீளும் கல்வியை வைத்துப் பணமீட்டும் நடைமுறைகள் இலங்கைக் கல்விமுறையில் இன்னமும் பிரியாத வரமாக வளர்ந்து செல்கின்றன. பின்லாந்தில் தனியார் பாடசாலை முறை கிடையாது. அங்கு கல்வி என்பது முழுமையாக  அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும் அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது. அதனால்; பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்.
இலங்கையில் ஆசிரியப்பணி என்பது பட்டதாரிகளுக்கான அடிப்படை வேலை வாய்ப்பாக அதிக எண்ணிக்கையில் அரசியல் தலையீடுகளைக் கொண்ட சேவைப்புலமாக இனங்காண முடிகிறது. குறிப்பாக ஆசிரிய பயிற்சிக்கலாசாலைகளில் பயிற்சிபெறாத சான்றிதழ்ப் பட்டதாரிகள் பாடத்தேர்ச்சிக்கும் கற்பித்தற்துறைக்கும் பொருந்தாத  ஆசிரிய நியமனங்கள் என நீளும் குறைபாடுகளிடையே அவர்களின் நடத்தைக்கோலப்பிறழ்வுகளால் மதிப்பிழக்கும் இலங்கை ஆசிரியத்தொழில் போல அல்லாமல் பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியமாக உள்ளது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
பின்லாந்தில் மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வௌ;வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பது. குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது. நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ். தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் நெகிழ்ச்சியற்ற தரமான முயற்சிகள் தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
பெரும்பாலான இலங்கைப்பாடசாலைகள் மாணவர்களின் குடும்ப உறவிலோ உளநலனிலோ அக்கறைத்தன்மையை வெளிப்படுத்த இயல்பாகவோ அல்லது தற்செயலாகவோ தவறிவிடுகின்றன. வகுப்பறைகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை உள்வாங்;கி ஆசிரியர்களை அவதிப்பட வைக்கின்றன. ஆனால் பின்லாந்தின் போக்கு வித்தியாசமானது. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். பிள்ளைகளின் மன வளர்ச்சியைக் குன்றச்செய்யும் முறையிலான  குறை கூறுதல், அவர்கள் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற பழக்கங்கள் இங்கில்லை.  எனவே மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.
பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. அதற்கு அவர்கள் அடக்கமாகக் கூறும் பதில் ;, 'பின்லாந்து கல்வி முறைதான் உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது ஏனெனில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது' என்பதே அவர்களின் பதில். தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது மதிக்கத்தக்க மனநிலை.
இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. வாசிக்க கற்றுக் கொடுங்கள். நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள். குழந்தைகளுடன் அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள். வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள். முதலில் நாம் மாற வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும். பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!. சுயகற்றலுக்கும் சுதந்திரக்கல்விக்கும் வாய்ப்பளித்து வாசிப்பால் உயர்ந்த புதிய தேசத்தினைக் கட்டியெழுப்புவோம்.

No comments: