Sunday, September 11, 2005

உயிர்க் கூடொன்றுள் உறுதியாய் ஒரு வீடு

அவளுக்குள் இருக்கும்
அந்த வீடு
அப்பனின் சீதனமோ
ஆத்தாளின் முதுசமோ அன்று
அது......
அவளே அவளுக்காய்
அவளே கட்டியது.
அழகு நிறைந்தது
அளவில் பெரியது
எனினும்.....
எளிமையானது
எவரையும் ஈர்ப்பது.



மெத்தப் படித்தவர்
மேதினிக்காகாதவர்
செப்படி வித்தையில்
தேர்ந்த விற்பன்னர்
திரிசங்கு சொர்க்கமாய்
தினமும் திரிபவர்
ஏட்டுப் படிப்பதில்
கோட்டை விட்டவர்

ஏனென்று கேட்கவும்
நாதியற்றவர்
அத்தனை பேரும்
எத்தனமின்றி
எப்போதும் நுழைய
ஏற்றத் தாழ்வின்றி
எவருடனும் அமர
அன்பெனும் தேனீர்
அளவின்றி அருந்த
அறிவெனும் அமுதை
தெளிவுடன் புசிக்க
அளவறிந்து பழக
ஆறுதலாய் உரையாட
அளவில் பெரிதாய்
வரவேற்கும் அறையொன்று.



சம்பாசனைச் சந்தையில்
சகஜமாய் கிடைக்கும்
சங்கதி அனைத்தையும்
தனியனாய் தரம் பிரித்து
வேண்டியது எடுத்து
வேண்டாதது தவிர்த்து
அழுகல் நீக்கி
அழுக்கைத் துடைத்து
அறுசுவை உணவாக்கி
அடுத்தவருக்குக் கொடுக்க
அழகாய், அடக்கமாய்
அடுக்களையும் அதற்குண்டு.



அவனும் அவளும்
அவர்களின் வாரிசும்
அடுத்தவர் இடைஞ்சலின்றி
அமைதியாய் பள்ளிகொள்ள
குடும்ப உலகமதில்
குது}கலமாய் விளையாட
நாளுபேர் அறியாமல்
நாலும் கதைக்க
தொந்தரவின்றி
அந்தரங்கம் பேச
பள்ளியறை யொன்றும்
பாங்காய் அதற்குண்டு.



அடுத்தவர் அறியாமல்
அடிக்கடி வந்துபோக
தனிமையில் தன்னை
கூறுபோட்டு ஆராய
அறிந்தவர் கருத்தனைத்தும்
ஆழமுடன் பகுத்துணர
கற்பனை வானில்
களிப்புடன் சிறகசைக்க
அவளுக்கே அவளுக்கென
அந்தரங்க அறையொன்று
அடக்கமாய் அதற்குண்டு.



அப்பனின் ஆக்கிரமிப்பில்
ஆத்தாளின் அறிவீனத்தில்
அடுத்துப் பிறந்தவரின்
அசண்டையீனத்தில்
தேடுவாரின்றி
தினந்தினம் வரண்டு
காரைக்கும் நெருஞ்சிக்கும்
தொட்டவுடன் முகஞ்சுருக்கும்
தொட்டாற் சுருங்கிக்கும்
கட்டின்றி உள்நுழையும்
கட்டாக் காலிகளுக்கும்
களமாய் இருந்த
அவளது நிலத்தில்
இப்படி வீடெழுப்ப
எப்படி முடிந்ததோ...?



கட்டற்ற காணிக்கு
பட்டறிவால் வேலியிட்டு
கண்டவரும் நுழையாமல்
கண்ணியத்தால் கதவுசெய்து
முற்போக்குத் தனத்தால்
முட்கள் அகற்றி
தன் மான உணர்வே
நல் உரமாக
கண்ணுங் கருத்துமாய்
மண்ணைப் பண்படுத்தி
பக்குவமாய் அதை
பசுந் தோட்டமாக்கி
அறிவு வேட்டையில்
அங்கங்கே கிடைத்ததெல்லாம்
அடித்தளமாய் அமைய
வாழ்க்கைப் பாதையில்
விழுத்திய கற்களெல்லாம்
கற்சுவராய் எழும்ப
தன்னம்பிக்கையால் ஒரு
வன் கூரையிட்டு
இத்தனை உறுதியாய்
இல்லம் எழுப்பிவிட்டாள்.



தன்னினிய தாய் மண்ணை
அன்னியனின் கணைகள்
சன்னமாய் துளைத்தபோதும்
அங்கத்தை இழந்துவிட்டு
அவலத்தை சுமந்தபோதும்
தளராது நின்று
இத்தனை உறுதியாய்
தன் வீட்டைக் காத்த அவள்
இப்போதும் கூட
சக்குப் பிடிதத்து வரும்
சமுதாய சகதிதனில்
சரிந்து விடுமோ....?
வக்கிர மனங்களின்
துக்கிரிப் போக்கினால்
ஆட்டங் காணுமோவென
நித்தங் கலங்கி
கண்ணும் கருத்துமாய்
காக்கும் பணியதில்
நாளும் பொழுதும்
வாழ்வே அதுவாக.......

1 comment:

சோதிதாசன் said...

”ஏற்றத் தாழ்வின்றி
எவருடனும் அமர
அன்பெனும் தேனீர்
அளவின்றி அருந்த
அறிவெனும் அமுதை
தெளிவுடன் புசிக்க
அளவறிந்து பழக”---------விரும்புகிற அன்பான மனமொன்றே இந்த வீடாக படிமம் ஆகிறது. வாழ்வில் தோல்விகளை கண்டு சோர்ந்து விடாது தன்னை தானே சுய விசாரணைக்குட்படுத்தி அழகான வாழ்வை அமைத்துக்கொள்கிற மனது அன்பை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள அறிவொடு உரையாட கவலைகளை மறந்து துாங்க மொத்ததில் வாழ்வை பயனுள்ளதாய் வாழ தயாராகிவிட்டமனது ---இந்த மன நலம் ஒரு கொடையல்லவா. அப்படி ஒரு வீட்டை நாமும் கட்டவேண்டும் முடியுமா?