Friday, August 12, 2011

குழந்தைகள் உலகமும் ---

குழந்தைகள் உலகமும் 
மனித நடத்தைக் கோலங்களும்


குழந்தைகள் உலகம் - உலகத்தின் சந்தோசங்கள் யாவும் பரிணமிக்கும் உலகம், கவலை, வெறுப்பு சந்தேகம், வஞ்சகம், சூது போன்ற மனித பலவீனங்கள் சட்டென ஆக்கிரமிக்க முடியாத உலகம். மனித மனத்தின் தேடல்களின் பிறப்பிடம் சுறுசுறுப்பு, குறும்பு, துருவி ஆராயும் ஆர்வம் என்ற தனித்துவ பண்புகளின் இருப்பிடம் சொல்லிக்கொடுத்து கற்பவற்றை விட கண்ணால் பார்த்து கற்பவைகள்தான் இவ்வுலகில் அதிகம். இங்கு ஏற்படும் மனப்பதிவுகள் கல்லில் எழுத்துப் போல் அழியாவரம் பெற்றவை. 

குழந்தைகள் உலகம் கவலையே அறியாதது. குதூகலமும் களிப்பும் நிறைந்தது. ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், நல்லவன், கெட்டவன் என்ற வேறுபாடுகளே அதற்குத் தெரியாது. ஒற்றுமை உணர்வும் பரஸ்பர அன்பும் கொண்டது. அன்பை அளவுக்கு அதிகமாக வாரி வழங்குவது போன்றே தானும் அடுத்தவர் அன்புக்காக அளவுக்கதிகமாக ஏங்குவது.

குழந்தைகள் உலகம் மிகவும் சின்னஞ்சிறியது. பெரியவர்களாகிய நாம் இவ்வுலகில் நுழைவது என்பது மிகவும் கடினமானதொன்று குழந்தைகளிடம் இயல்பாகவே காணப்படும் அன்பு, பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடிப்பு யதார்த்தத்தை அறியும் ஆவல் போன்ற பண்புகள் எதுவுமே சிதைக்கப்படாமல் இவ்வுலகிற்குள் நுழைவது என்பது சாத்தியமானதா? என்ற அங்கலாய்ப்பும் ஆதங்கமும் ஏற்படுத்திய உந்துதல் இவ்வுலகை சற்று கூர்ந்து அவதானிக்கச்செய்தபோது ஏற்படுத்திய மன அதிர்வுகள்தான் இத்தரிசனங்கள்.

தரிசனம் 1

'அம்மா தம்பி எனக்கு விஸ்கற் தரமாட்டானாம்' இது 8 வயது குமணனின் ஏக்கம் தொனிக்கும் குரல்.

'அவற்றை படிப்பின்ரை வள்ளல்லை அவருக்கு விஸ்கற்'

'தம்பி முதலாம் பிள்ளையாம் அது தான் வாங்கிக் கொடுத்தது' ' நீ முதலாம் பிள்ளையாய் வந்தால் உனக்கும் வாங்கித்தரலாம்'. இது தாய் மாதவியின் குரல்.

பிஸ்கற் மட்டுமல்ல வீட்டில் சமையல் விருப்பமான இனிப்புப் பண்டங்கள் வெளியில் உலாத்து எல்லாமே இளையவன் ரமணன் விருப்பப்படிதான். இத்தனை செல்வாக்கும் அவனுக்கு இருக்கக் காரணம் வகுப்பில் முதலாம் பிள்ளையாக இருத்தல் என்ற தாயின் அபிலாசையை நிறைவேற்றியமைதான்.

திறமைக்கு அதிக கவனம் கொடுத்த அந்தத் தாய்மை பகிர்ந்துண்ணும் பழக்கத்தை மட்டும் தனது பிள்ளைக்கு கற்றுக் கொடுக்க மறந்தது ஏன்? அன்பையும் மனித நேயத்தையும் வளர்க்க வேண்டிய தாய்மை அந்தஸ்து எனும் போர்வைக்குள் ஏன் முடங்க வேண்டும்?.

எனக்குத் தா என்று அழுது அடம்பிடித்து தனக்குரியதை மூத்தவன் பெற்றிருந்தால் இங்கு கலங்க வேண்டிய தேவை இல்லை. அல்லது குழந்தைமைக் குணங்களில் ஏதோ ஒன்றாவது அவனிடம் இருந்தாலும் வருந்த வேண்டியதில்லை. ஆனால் அந்த முகம் என்ன சொல்கிறது?.

ஆழமான அமைதியும் ஏக்கமும் விரவிக் கிடக்கும் அந்தத் தளிர் அப்படி ஒன்றும் மொக்கன் இல்லை. வகுப்பில் பத்துக்குள் வருவான். பள்ளிக்கூடத்தில் போடும் புள்ளிகள் திறமையை நிர்ணயிக்க முடியுமா?. வெரித்தாஸ், பி.பி.சி என்றால் எங்கிருந்தாலும் ரேடியோ முன்வந்து செய்தி கேட்பவன். மை முடிந்த ரெனோல்ட் பேனையில் ' ஏவுகணை' விடத் தெரிந்தவன்.யார் எது கொடுத்தாலும் தம்பிக்கு கொடுத்து தின்பவன். விழுந்து அடிபட்டு அழும் பக்கத்து வீட்டுச் சிறுவனை சமாதானப்படுத்தி சிரிக்க வைப்பவன். விளையாட்டு, பேச்சு என்று எல்லாவற்றிலும் முன்னுக்கு நிற்பவன் மொக்கன் என்றா அந்தத் தாய்மை நினைக்கிறது. தனது அலுவலக நண்பர்கள் முன் பெருமையடித்துக் கொள்வதற்கு அந்தக் குணங்களை விடவும் ' முதல் இடம்' என்ற முத்திரை அவசியமாய்ப் போய்விட்டதா?.

தரிசனம் 2

பக்கத்து வீட்டுப் பூமணியின் இரண்டு வயது மாறனுக்கு கொஞ்ச நாளாய் உடல், உள நிலையில் கோளாறு. இரவில் தூக்கம் அடியோடு இல்லை. சிரித்து விளையாடிக்கொண்டு இருப்பவன் திடீரென வீரிட்டுக் கத்துவான். பயத்தில் தேகம் பதறும். எதைக்கண்டு இப்படிப் பதறுகிறான் என்று எல்லோருக்கும் ஒரே கவலை.

'அம்புலி' யைக் காட்டி சோறு தீத்தும் தந்திரம் இவனிடம் மட்டும் நடக்கவில்லை. நிலவைக் கண்டாலே வீரிட்டுக் கத்தத் தொடங்குவான். அதுவும் வளர்பிறை தொடங்கிவிட்டால் இது ஒரு பிரச்சனை அன்பாகச் சொல்லி அரவணைத்துக் கேட்டும் எதுவுமே விளங்கவில்லை கடைசியில் மிரட்டியும் தூங்க வைக்க முயற்சித்தாகிவிட்டது.

நடு இரவு 'அம்மா யன்னலை மூடுங்கோ' பயத்தில் குளறிய குரல். யன்னல் ஊடாக பூரண நிலவு ஒளி உமிழ்ந்து கொண்டிருந்ததை பார்த்த பூமணிக்கு நிலைமை விளங்க யன்னலை மூடிவிட்டு குழந்தையை அணைத்துக் கொண்டவள் நிலா நிலா ஓடி வா எனக் குதூகலிக்கும் குழந்தை இப்படி அலறக் காரணம் என்ன? என்பது புரிய மறுக்க யோசனையுடன் கிடந்தாள். சில நிமிடம் கழிந்த பின் அம்மா நாளைக்கும் இப்படி பரா லைற் வருமே மெல்ல காதில் கிசுகிசுத்தான் குழந்தை. 

பரா லைற் அடிக்குது ஆமி வரப்போறான் என்று அலறித்துடித்து இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் பூமணியும் அவள் மகன் மாறனும் அடங்குவர். இடப்பெயர்வின் அவலம் மிக மோசமாக அவனைப் பாதித்துவிட்டது. 

தரிசனம் 3

கீதாவின்ரை வீட்டுக்கு விளையாடப் போகவேண்டாம் என்று நிஷாந்திக்கு அம்மா எத்தனை தரம் சொன்னனான்.

'ஏன் போகக்கூடாது அம்மா?' ஆண்டு இரண்டு படிக்கும் நிஷாந்தியின் கேள்வி இது. அவையளோடை நாங்க பழகிறது இல்லை அவை எங்கடை ஆக்கள் இல்லை, அவையளோடை பழகிறது எங்களுக்கும் அப்பாவின் உத்தியேகத்திற்கும் கௌரவமில்லை.

காலையில் தனக்கும் தாய்க்கும் நடந்த உரையாடலை நிஷாந்தி மறந்து விட்டு சாப்பிட்டதும் விளையாட ஓடிப்போய்விட்டாள்.


தகப்பனின் தொழில் இதுதான் என்று அறுதியிட்டு கூறமுடியாத ஏழை கீதா. ஆனால் உயர்வு தாழ்வு என்ற பேதம் இந்த இளம் தளிர்களுடன் ஊடுருவ முடியாத பருவம் இது. விளையாட்டு....  அது ஒன்றுதான் அந்த மனங்களை ஆக்கிரமித்து நிற்கும்  பருவம்.   கீதாவின் குடிசை முன்னின்ற வேப்பமரத்து முன்றலில் அவர்களின் விளையாட்டு தொடர்ந்தது. திடீரென கையில் பூரவசம் கம்புடன் ஆவேசமாக வந்த நிஷாந்தியின் அம்மா 'உன்னை எத்தனை தரம் சொன்னான் அந்தச் சனியங்களோடை விளையாட வேண்டாமென்று. அடித்து இழுத்துக் கொண்டு தாய் போக ஏன் விளையாடக் கூடாது என்ற காரணம் கொஞ்சம் கூட தெரியாததால் இரு இளம் தளிர்களும் பரிதாபம் ....   விளிகள் கக்க நின்றன.

தரிசனம் 4

இடப்பெயர்வின் அவலம் மட்டுமா எம்மைத் துரத்துகின்றது. எமது அறியாமை காலம் காலமாக எம்மைச் சிறைக்குள் அடைப்பதை நீங்கள் பார்க்கவே இல்லையோ? என்று இந்தச் சிறுமியின் கண்கள் கேட்பது போல் தெரிகிறதே. ஆம் மூத்த பிள்ளையாகப் பிறந்துவிட்டதால் தானோ படிப்பின் வாசனையை என்னால் அறிய முடியாமல் போனது. எனது தாயின் சுமையைப் பகிர்வதற்கு என்றுதான் நான் படைக்கப்பட்டிருக்கிறேனோ?.

ம்...ம்.. அவன் தான் என்ன செய்வான், அவள் தான் என்ன செய்வாள் அவளின் தலையில் ஏற்பட்ட சுமைகளை இவ்வளவு காலமும் சுமந்து இருக்கிறாள்... சற்று இறக்கி வைக்க சந்தர்ப்பம் கிடைத்தால் அவள் விட்டு விடுவாளா? தான் பட்ட சுமையை தன் குழந்தையும் படக்கூடாது என்ற அறிவை அவள் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே அவளுக்கு என்று என்னை நோக்கி கேட்பது போல் இல்லை? அவளது பார்வை.
அந்தக் குழந்தையின் கையில் இன்னொரு குழந்தை. குழந்தையைப் பெற்றுக் கொள்ளாமலேயே தாயின் பொறுப்பு வந்துவிட்டது அவளுக்கு. துள்ளித்திரிய வேண்டிய பருவத்தில் உடலை அசைக்கவே முடியாத சுமை தன்மீது பலவந்தமாக ஏற்றப்பட்ட சுமையினால் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தக் குழந்தை எவ்வாறு இன்னொரு குழந்தையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்? ஆற்றாமை அச்சுறுத்தலாக வன்முறையாக உருவெடுக்கிறது. குழந்தையின் மீது திணிக்கிறது. இங்கு குற்றவாளி யார்? தாயா? இல்லை.. அப்போ குழந்தையா... இல்லவே இல்i. அப்போ இது புரியாத புதிர் விடை தேடி அலைய வேண்டியதுதான்.

ஓரிரு எடுத்துக்காட்டாக இல்லாத சமூகத்தில் பரவலாக வெளித்தெரியும் இந்த உளவியல் தாக்கங்கள் தான் குழந்தைகள் உலகைப் பெருமளிவில் ஆக்கிரமித்திருக்கிறது. குழந்தையின் எண்ணங்களிற்கும் அவர்களது நடவடிக்கைளுக்குள் ஆழப்புகுந்து அவர்களின் இனிமை, குதூகலம், ஆர்வம், குறும்பு போன்ற பண்புகளுக்கூடாக இவ்வுலகின் சமூக அம்சங்களை அவர்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உண்டு.

ஏனென்றால்!
ஒரு சமூகத்தின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இந்தப் பிஞ்சுகளின் கைகளில் தான். சமூகத்தை தாங்குவதற்கு முதல் தேவை அன்பும் மனித நேயமும் தான். அன்பும் மனித நேயமும் என்ற அடித்தளத்தில் நின்றுதான் குழந்தையின் அறிவு தேடல் ஆரம்பிக்க வேண்டும். குழந்தையின் அறிவை வளர்க்க நாம் வாங்கிக் கொடுக்கும் புத்தகங்கள் விளையாட்டுப் பொருட்களை விடவும் எமது பேச்சு, செயல், பழக்க வழக்கம், மனித பலவீனங்களான பேராசை, வஞ்சகம், பொறாமை போன்றவை குழந்தையின் மனதை இலகுவில் ஆக்கிரமிக்க வல்லவை.

ஒரு குழந்தையை அன்புள்ளவனாக, மனித நேயம் மிக்கவனாக, சமூக உணர்வும் பற்றும் மிக்கவனாக, அறிவு ஜீவியாக வளர்ப்பதற்கு சிறந்த பருவம் குழந்தைப் பருவம் தான். குழந்தைகள் உலகை தாக்கும் காரணிகளை இனங்கண்டு எம்மால் முடிந்தவரை மாற்ற முயல்வது தான் எதிர்கால எமது சமூகம் எமது காலல் தாங்கி நிற்க உதவும் ஒரே வழி.

No comments: