Thursday, August 11, 2011

வதையின் விதை




'அப்போது தான் ஆரம்பித்திருந்த அழகிய மழைக்காலம் ஒன்றின் மாலை நேரம் அது. பிள்ளைப்பருவ விளையாட்டை இன்னும் மறவாதது போல் செம்மண் புழதி குளித்து நின்ற இயற்கைப் பெண்ணை நன்கு குளிப்பாட்டி விட்டிருந்தாள் மழையன்னை. வசந்தத்தின் வாயிலில் நுழையக் காத்திருக்கும் தன் செல்லப் பெண்ணின் மேனி எங்கும் முத்தங்களால் மினுமினுப்பாக்கிக் கொண்டிருந்தான் சூரியத் தகப்பன.; அந்த ஊருக்கென்றே பிரத்தியேகமாகப் போட்டிருந்த செம் மண் வீதியும் வரம்புகள் உயந்த பச்சை வயல்களும் சிவப்புக் கரையுடன் கூடிய கட்டம் போட்ட பாவாடையை அவள் அணிந்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. ஊரின் இரு கண்களாக இருந்த அந்த இரு குளங்களின் அணைக்கட்டில் செழித்து வளர்ந்திருந்த பசிய புற்கள் மை தீட்டிய விழிகளின் கீழ் மடல்களை நினைப்பூட்டியது. கொல்லையில் இருந்த படி சின்னையா அப்பு சுருட்டு குடிப்பது போல் பச்சைப் பசேலென்ற அந்த பெரிய வயற் காட்டில் தனித்து நின்ற அச் சிறு குடிலில் இருந்து அடுப்புப் புகை வெளிக்கிளம்பியது..'

'என்ன அற்புதமான ஒரு கற்பனை. வன்னி வாசி எனக்கே உதிக்காத இந்தக் கற்பனை அச் சிறு பெண்ணுக்குள் எப்படி முளைவிட்டது.. '. படிக்க உபயோகிக்கும் மேசையை ஒட்டிய சுவரில்  பக்குவமாய் ஒடடப்பட்டிருந்த அந்த எழுத்துக்களை எத்தனை தடவை படித்தாலும் பிரமிப்பு அடங்காது சாரதா ரீச்சருக்கு..

இயற்கைக் காட்சி பற்றி எழுதித் தாங்கோ என்று நச்சரித்த தன் மகளுக்கு பரிதினி எழுதிக் கொடுத்த இந்த வரிகள் சாரதா ரீச்சரின் மனதுக்குள் ஆழப் புகுந்து இப்போது அவளின் படிப்பு மேசை இருந்த சுவரில் நிரந்தர இடத்தை பிடித்திருந்தது.  ரீச்சரின் மகளது அன்புக்குரிய அக்காவாக அந்த வீட்டுக்கு பழக்கப்பட்ட பரிதினியை மறக்கமுடியாத அளவு தவிக்கும் நிலைக்கு சாரதா ரீச்சர் வந்து நாட்கள் பலவாகிவிட்டன. எப்போதும் எதையோ தேடுவது போல் தோற்றமளிக்கும் அந்த விழிகளும்,, உதடு குவித்து வெளிவிடும் அந்த புன்னகையும் உயிர் கொடுத்த மண்ணை நோகடிக்கக்கூடாது என்பது போல் மென்மையாக ஆனால் அவதானமாக மிதித்துச் செல்லும் அந்த பாதங்களும்,; அவளை சராசரிப் பெண்ணில் இருந்து சற்று வித்தியாசப்படுத்துவது போல் இருக்கும் சாரதா ரீச்சருக்கு.   

'பரிதினியை உடனே பார்க்க வேண்டும்.--- இரண்டு வாரங்கள்--. அப்பப்பா-- இருபது வருடங்கள் கடந்தது மாதிரி..


    


'எந்தக் குறுக்கால போனது இந்த எளிய வேலையைச் செய்துதோ..? நாரி முறிய நான் போட்ட கதியால் இண்டைக்கு  ஏன் இப்பிடி அலங்கோலமா விழுந்து கிடக்கு-- ஐயோ! பிள்ளையாரப்பா! உனக்கு பிச்சிப் பூவிலை அருச்சனை செய்யவேண்டும் எண்டு ஆசைப்பட்ட ஐயரிட்டை, எங்கட வீட்டில நிறைய இருக்கு நான் கொண்டு வாறன் எண்டு எடுப்பாய்ச் சொல்லிபோட்டு வந்திட்டன். இப்ப என்ன செய்யிறது.-- போட்டுது.. எல்லாத்திலயும் மண் விழுந்து போட்டுது. எடி மேனை உதைப் பாத்துக் கொண்டிருக்க எப்பிடி உனக்கு மனம் வந்தது..?'  ஆத்திரம் தாங்காமல் கத்தினாள் அம்மா.

'என்ன மேனை காலங்காத்தாலை இப்படிக் கத்துறாய்' என்று கேட்ட சிவம் அக்காவிடம் தன் புராணத்தைத் தொடங்கினாள் அம்மா.

'வளவு முழக்க இருக்கிற இந்த பூக்கண்டுகளைப் பார்த்து சனங்களுக்கு ஒரே  பொறாமை எண்டு ஒரு காலத்திலை எனக்கு பெருமையாத் தான் இருந்தது. இப்ப என்னெண்டால் என்ரை தலையிலை எல்லாம் பொறிஞசு போய் நிக்குது. குனிஞ்சு ஒரு தும்பு எடுக்கிறாளில்லை.. எங்களை இருக்க நிக்க விடாமல் தேடித் தேடி நட்டதை விட்டிட்டுப் போறனே எண்ட கவலையிலை வன்னியிலை இருந்து வாறவன் போறவனுக்கெல்லாம் என்ரை பூக்கண்டு-- என்ரை பூக்கண்டு-- எண்டு கொஞ்சக்காலம் புலம்பிக் கொண்டிருந்தவள்.. பிறகு காட்டுக் குணம் வந்திட்டுது போல--. இப்ப ஒண்டிலையும் அக்கறை இல்லை. இல்லாட்டி கண்ணுக்கு முன்னாலை எல்லாம் தாறுமாறா பட்டுக் கொண்டு போக மரக்கட்டை மாதிரி பாத்துக் கொண்டிருப்பளே'. சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா.


     


ஒவ்வொரு நாளும் அந்தச் சிறு மண்வீட்டைக் கடந்து போகும் போதும் வரும் போதும் சாரதா ரீச்சரின் மனம் பரிதினியின் நினைவுகளால் நிரம்பியிருக்கும். மல்லாவியை விட்டு தங்கட ஊருக்குப் போன அன்று அவள் பட்ட பாட்டைப் பார்க்க வேண்டுமே... நூறு தரமாவது வீட்டைச் சுற்றியிருப்பாள். படலை வாசலில் நின்று அழகு பார்த்தாள். நேராய்... பக்கவாட்டாய்.. மூலைப்பக்கமாய்.. ஷஎத்தனை தடவை பார்த்தாலும் பொச்சம் தீராது ரீச்சர்ஷ என்று ஒரு முறை அவள் சொன்னது நினைவில் வந்தது.
முன் பக்க வளவை நிறைத்திருக்கும் பெரிய இரு வேம்புகள், வலப்பக்க பின் மூலையில் ஒரு பலா, இடது பக்கமாய் ஒரு பெரிய புளி என்று வீட்டுச் சொந்தக்காரருக்கே கிடைக்காத நிழலும் குளிர்ச்சியும் அந்த வீட்டுக்கு இருந்ததை ரீச்சரும் உணர்ந்நிருந்தாள். என் வீடு என்ற தலைப்பில்; மகள் வித்தியாவுக்கு அவள் எமுதிக் கொடுத்தது நினைவில் பசுமையாய் வந்தது.

'எட்டு பெரிய அறைகளையும் இரண்டு பெரிய விறாந்தைகளையும் கொண்ட அந்த பிரமாண்டமான வீட்டுக்குள் கிடைக்காத அந்த சுகத்தை 20 அடி நீளமே உள்ள இந்த சிறு வீடு எனக்கு தருகிறது. சாத்திர விதிமுறைக்கு பொருந்தாதது தான். ஆனாலும் முன் விறாந்தையில் இருப்பவருக்கு தெரியாமல் அறைக்குள் போய்வர, உடுப்பு மாற்ற வசதியாக.--,. மாத சுகயீனம் வந்தால் அம்மாவின் கெடுபிடிகளுக்கு அகப்படாமல் அந்த சிறு பத்தியில் ஒதுங்கிப் படுக்க--, ஒவ்வொரு நாள் காலையிலும் அவள் கடவுளாக மதிக்கும் அந்த சூரியதேவன் தானே வந்து தட்டி எமுப்பக் கூடிய வகையில்  கிழக்கு முகமாக காயாத் தடிகளினால் சட்டமிடப்பட்ட முன.;விறாந்தையில படுக்க-- என்று  எனக்கு பிடித்தமான இந்த வீட்டை இழப்பது என்னையே இழப்பது போன்றது.
'றேடியோ சுற்றிக் கேட்பதற்கென தெற்கு சுவரோரமாய் ஒரு பழைய சைக்கிள், இருக்கையாய் பாவிப்பதற்கென பலகை, பலகைக்கு பக்கத்தில் ஒரு புத்தக இறாக்கை, ஒரேயொரு கதிரை அதில் வைத்து எழுதுவதற்கு ஒரு பலகை,.. எதுவுமே எங்களுக்கு சொந்தமில்லைத் தான். ஆனால் சொந்தமற்ற அவற்றுக்குள் நிறைய சொந்தங்கள் புதிதாக உருவாகிவிட்டிருந்தன. போகும் போது அவரவர்களிடம் அவை போய்ச் சேர்ந்து விடும்.'
இவளது எழுத்துக்களின் லயிப்பால் ஒரு தடவை அவள் பரிதினியிடம் ஷ பிள்ளை உமக்குள்; இருக்கிற ஆற்றல்களை நீர்; பயன்படுத்த வேண்டும். கதை எழுதினீரெண்டால் நான் பிரசுரிக்க ஏற்பாடு செய்வன் என்று கேட்டபோது ஷ ரீச்சர் எனக்கு துண்டு துண்டாத் தான் எதையும் எழுத வருமே தவிர சம்பவங்களைக் கோர்க்க வராது.ஷ என்று சிரித்துக் கொண்டே அவள் சொன்னது இன்றும் பசுமையாய் காதில் ஒலித்தது.

'இவளிடம் இருக்கும் கற்பனையும் உள்ளதை உள்ளபடி சொல்லும் இந்த நேர்மையும், எதையும் ஆழ்ந்து  அவதானிக்கும் விதமும் சரியான முறையில் வழிகாட்டப்பட்டால் இன்று இவள் எங்கேயோ போயிருப்பாள். நாளைக்கு லீவு விடுகினம். போய் இரண்டு நாள் என்றாலும் அவளுடன் தங்க வேண்டும் பெத்த பிள்ளையிடம் கூட இப்படி இருப்பனோ தெரியேல்லை.. 


  


'மேனை உனக்கு கொஞ்சமெண்டாலும் அறிவு நினைவு இருக்க வேணும்.. வீடு முழக்க ஒழுக்கு. எதால ஒழுகுது எண்டே கண்டுபிடிக்கேலாமல் நான் அந்தரிச்சுக் கொண்டு இருக்கிறன் நீ என்னடாவென்றால் வேதக்கார வீடுகள் மாதிரி வலு சிம்பிளா செருப்போட திரியிறாய்ஃ இம்மை வறுமை தெரியாமல் இப்பிடி புத்தகம் படிச்சுக் கொண்டிருக்க என்னெண்டு மனம் வருகுது. பொங்கல் வரப்போகுது. இந்த ஒழுக்கோட அல்லாடுறது எப்பிடி--.. வளவு கூட்டித் துப்பரவாக்குறது எப்பிடி---..

வீட்டுக்கு கம்பீரத்தைக் கொடுக்கவென அந்தக் காலத்தில் ஆயிரமாயிரமாய்ச் செலவழித்து முன்புறமும் வலப்புறமும் உள்ள முகப்புப் பகுதியில் எழுப்பின சீமெந்து பிளாட்டின் மேல் இத்தனை வருட கால இடப்பெயர்வில் கவனிக்க ஆட்களின்றி குவிந்த  வேப்பங்கஞ்சல்களும் மழைநீரும் தேங்கி ஊறினதால் பிளாட்டின் கம்பிகள் பொருமியதோ, அதனால் பெய்யும் மழை எல்லாம் அப்படியே சுவரை ஈரமாக்கி சுவரோரமாக வழிந்து தரையை ஈரமாக்குவதோ,. இதை திருத்துவதென்றால் இலட்சக்கணக்கில் முடியும் என்று மேசன்காரன் சொன்னதோ அம்மா அறிய வாய்ப்பில்லை.

'கொப்பர் உனக்கெண்டு பார்த்து பார்த்து கட்டின வீடெல்லே இது. கொஞ்சமெண்டாலும் அக்கறை இருக்கவேணும். இலட்சக் கணக்கில் செலவழிச்சுக் கட்டிப்போட்டு இப்ப ஓலை வீட்டைவிடக் கேவலமா இருக்கு. மேசன்காரனை ஒருக்காக் கூட்டிவந்து காட்டுங்கோ எண்டு தெரிஞ்சவை போனவை எல்லாரையும் கேட்டு அலுத்துப் போச்சு'.

  


இந்தப் பிள்ளைக்கு என்ன நடந்திருக்கும்.. ஊரிலேயே பெரிய வீடு. இயற்கை மீதான அவள் நேசிப்பின் இலக்கணமாய் முன்புறமும் இடதுபுறமும் பெரிய பூந்தோட்டம். பிறகென்ன நடந்தது. சிறு உணர்வையும் துல்லியமாக வெளிப்படுத்தத் தெரிந்த அந்த கண்களுக்குள்  இந்த மரத்தனம் எப்பிடி நுழைந்திருக்கும். இவளது கவலைக்கு காரணத்தை எப்பிடியும் கண்டுபிடித்தாக வேண்டும்.

ஷஇஞ்சரப்பா பரிதினியிட்ட போனனான். கண் கொண்டு பார்க்கேலாமல் கிடக்கு. மெலிமெலியென்று மெலிஞ்சு முழியும் வெளியில தள்ளி சாவாரில் ஒன்றாய் திரியுதப்பா பெட்டை.
'தாய் மனிசி என்னவாம்'
நான் அண்டைக்கு போகேக்கை தாயும் மேளும் என்னவோ அமளிப்பட்டவை. நான் கொஞ்சநேரம் வெளியில நிண்டு காது குடுத்தனான். மனிசி தாறுமாறாய் ஏசுது. பக்கத்து வீடு ஆடு வளவுக்கை நிண்டு பூமரமெல்லாம் தின்ன இவள் பார்த்;துக் கொண்டு பேசாமல் இருக்கிறாளாம். இடம் பெயர முதல் வளவுப் பூக்கண்டு முழக்க இவள் தேடித் தேடி வைச்சது தானாம். இப்ப ஒண்டையும் திரும்பிப் பார்க்கிறாளில்லையாம். வன்னியில இருந்து வந்த நாள் தொடக்கம் இப்பிடித் தான் இருக்கிறாளாம். ஒருத்தருக்கும் ஒண்டும் தெரியுதில்லை. உங்களுக்கு தெரியும் தானே அவளிட்டை இருந்து எதையும் அறியேலாது எண்டு--.

'மூக்கும் முழியுமாய் இருக்கிறாள். எங்கையன் மனசைக் குடுத்திட்டாளோ'
'என்னெண்டு தெரியேல்லையப்பா. லீவு முடிஞ்சு போறதுக்கிடையில ஏதாவது செய்யவேணும்.
'அருமையான பெட்டை. அக்காவின்ரை பெடியனுக்கு கேட்டுப்பார்ப்பம் எண்டு நினைச்சன், நீ சொல்லுறதைப் பார்த்தால்---
'சும்மா விசர்க்கதை கதையாமல் அவளை முதல்ல நிமிர்த்துறதுக்கு வழி சொல்லுங்கோ..
'நினைக்கிறதை கிறுக்கிற பழக்கம் அவளுக்கு இருக்கெண்டு முந்தி ஒருக்கால் சொன்னனீரெல்லே.. இரண்டு நாளைக்கு அங்கை நிண்டு மேசையைக் கிளறிப்பாரும்.. காதல் பிரச்சனையாத் தான் இருக்கும். இந்த வயசில வேறென்ன இருக்கு கவலைப்பட...

   


'கடவுளே என்ரை பிள்ளைக்கு ஒண்டும் நடக்கக் கூடாது. கறண்டகம் மாதிரி என்ன வடிவா இருந்தவள் இப்பிடி இளைச்சுப் போட்டாளே. தேப்பன்ரை வினை கொஞ்சம் இருக்குத் தான். வாய்விட்டு எதையாவது சொன்னால் தானே பரிகாரம் தேடலாம். காத்துக் கறுப்புப் பட்டிருக்கும் என்று ஐயரிட்டை நூல் வாங்கிக் கட்டியும் ஒண்டும் நடக்கேல்லை. உடம்பில எந்த வருத்தமும் இல்லை எண்டு டாக்குத்தர் சொல்லிப் போட்டார். அண்டைக்கு கோவிலிலை வைச்சு அந்த அம்பிகம் என்னமாய் புpடுங்கி எடுத்தாள். என்ரை பிள்ளை உயிர் போனாலும் அப்பிடிப் போகாது எண்டு கிழி கிழி எண்டு கிழிச்சுப் போட்டு வந்து அண்டு முழக்க ஒரு வாய் தண்ணி குடிக்காமல் இருந்ததனான்.. என்னில வஞ்சம் தீர்க்கிற மாதிரியெல்லே திரியுறாள். என்ரை மனதறிய நான் ஒரு பிழையும் விடேல்லையே. கோழி மிதிச்சு குஞ்சு சாகுமே. மல்லாவியல நிண்டு வரமாட்டன் எண்டு அடம்பிடிச்சவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்த பிழையைத் தவிர வேறை எந்தப் பிழையும் நான் செய்யேல்லை. முன்னம் முன்னம் வந்தது. பிள்ளையாரே அவளுக்கொண்டென்றால் என்னை உயிரோடை பார்க்க மாட்டாய். அவள் அம்பிகம் சொன்னதில உண்மை இருக்குமோ---, 


  


'அம்மா உங்கட பிள்ளை பழைய மாதிரி வர என்னவெண்டாலும் செய்வீங்களே...ஷஅம்மாவைக் கேட்ட சாரதா ரீச்சரிடம் ஷஎன்ன ரீச்சர் இப்பிடிக் கேட்டிட்டீங்கள். என்ரை பிள்ளையைவிட எனக்கு வேறேதன் முக்கியமாய் இருக்குமே.,உங்களைக் கண்ட பிறகு தான் கொஞ்சம் உயிர் வந்த மாதிரி திரியிறாள் உங்களுக்குத் தான் ரீச்சர் அவளின்ரை மனசுக்கை இருக்கிறதைக் கண்டு பிடிக்கேலும்.. என்ரை பிள்ளையை எப்பிடியாவது முந்தி இருந்த மாதிரி ஆக்கி விடுங்;கோ ஷ என்று தவிப்பு நிறைந்த குரலில் சொன்ன அம்மாவிடம் ஷஅப்ப மல்லாவி போறதுக்கு ரெடியா இருங்கோஷ என்று சிரித்தபடி சொன்ன சாரதா ரீச்சர் பரிதினியை பார்க்க அவளின் அறைக்குள் நுழைந்தார்.

'பரிதினி நாளைக்கு வெளிக்கிடுவம் எண்டு நினைக்கிறன்'
'ஏன் ரீச்சர் பள்ளிக்கூடம் துவங்க இன்னும் ஒரு கிழமை இருக்கெல்லே. இன்னும் இரண்டுமூன்று நாள் தங்கிப்போட்டுப் போங்கோவன்
'இல்லைப் பிள்ளை இரண்டு நாள் எண்டு வந்து இஞ்சை இப்ப உம்மோடை இரண்டு கிழமையெல்லே தங்கிப்போட்டன். அதுசரி. உம்மை நான் மல்லாவிக்கு கூட்டிக்கொண்டு போறதா உத்தேசம்.. உமக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கோ என்று அறியத் தான் இப்ப வந்தனான். அவளின் கண்களுக்குள் பழைய ஒளி ஊடுருவியதை அவதானித்தவாறே பேச்சைத் தொடர்ந்த சாரதா ரீச்சர் ஷஎங்கட பள்ளிக்கூடத்தில தமிழ் ரீச்சர் ஒரு வருட விடுமுறையில போறா.. நீர் கொஞ்ச நாளைக்கு அங்க வந்து படிப்பியும் நான் எல்லாம் ஒழுங்குபடுத்தியிட்டன். என்ன சம்மதம் தானே..'
'அம்மா இல்லாமல் என்னால எங்கையும் இருக்கேலாது ரீச்சர்', தயங்கித் தயங்கி அவளிடமிருந்து வந்தது வார்த்தைகள்.
'அவவையும் கூட்டிக்கொண்டு போறது.'
'அவ வரமாட்டா ரீச்சர்'
அது நானெல்லோ அவவைக் கூட்டிக் கொண்டு வாறது. நீங்கள் முந்தி இருந்த வீடு இப்பவும் அப்பிடியே இருக்கு. அங்கையே தங்கலாம்.. பரிதினிக்குள் பழைய பரிதினியைக் கண்ட புழுகம் ரீச்சருக்குள்.


  


கண்கள் தாரை தாரையாக நீரை உகுக்க ரீச்சர் கொடுத்த பரிதினியின் எழுத்துக்களை படிக்கத் தொடங்கினாள் அம்மா
'படுங்கோ.. நல்லாப் படுங்கோ.. பிச்சிப் பூ கேட்குது உங்களுக்கு. மல்லாவி வீட்டில், தானா முளைச்ச அந்த முல்லைக் கொடிக்கு ஒரு தடி நட்டுவிடுங்கோ எண்டு எத்தனை நாள் சொல்லியிருப்பன். கால் முறிஞ்சு கிடக்காட்டில் உங்களைக்  கெஞ்சியிருப்பனே. நட்டவைக்கு தெரியும் தானே படரவிட நீ பேசாமல் கிட என்று எவ்வளவு விட்டேத்தியா போனனீங்கள். என்ர கண்ணுக்கு முன்னாலேயே பக்கத்து வீடு ஆடு நித்திய கல்யாணி மரத்தை கடிச்சுத் தின்ன பார்த்துக் கொண்டு சும்மா இருந்தனீங்களெல்லே. கலையுங்கோ கலையுங்கோ எண்டு கத்தினதுக்கு இந்த நாத்தல் மண்ணுக்கு உது பூக்கும் எண்டு கனவு காணுறியே எண்டு எவ்வளவு இலேசா சொன்னியள். பாருங்கோ உங்கட கண்ணுக்கு முன்னாலேயே இந்தப் பூமரம் எல்லாம் அழியப்போகுது. இருந்து பாருங்கோ.. அப்ப தான் என்ரை மனம் ஆறும்.'

'வேணும் நல்லா வேணும். கடவுள் தந்த தண்டனை இது. வயலூர்ப்பிளளையாரிட்டை வரம் வேண்ட மட்டும் தானே பறந்து பறந்து திரியுறனீங்கள். அந்த வீட்டில கொஞ்சமாவது கவனம் எடுத்தனீங்களே. பிறத்தியார் வளவில போட்ட இந்த வீட்டில இந்தளவு வாரப்பாடு இருக்கக் கூடாது எண்டு செவ்வாய் வெள்ளி சாம்பிராணி காட்டக் கூட மனம் வாறேல்லை உங்களுக்கு. ஊருக்குப் போய்த் தான் பொங்குறது எண்டு அந்த ஏழு வருஷமும் பொங்கலே இல்ல அந்த வீட்டில--. வீடு ஒழுகுது எண்டு பக்கத்து வீட்டு அண்ணையிட்ட வேண்டின தரப்பாளைக் கூட போடாமல் ஒழுக்கு இல்லாத இடமாப் பார்த்து ஒதுங்கி ஒதுங்கி படுத்தனீங்கள். சங்கக் கடையிலை பொலித்தீன் வேண்டிக் கொண்டு வந்து தட்டத் தனியனாய் ஒழுக்குக்கு நான் செருக சொந்த வீட்டில கூட மனிசர் இப்பிடி அக்கறைப்படமாட்டுதுகள்-- இது என்னடாவெண்டால் விசர்க்கோலங்கொண்டு அலையுது. எண்டு புறுபுறுத்தபடி  பக்கத்து வீட்டு மனிசியோடை ஊர்ப்புதினம் அளந்தனீங்களெல்லே. இடம் பெயர்ந்து ஒண்ட இடமில்லாமல் தவிச்ச எங்களை ஏழு வருஷம் வாழ வைத்த அந்த வீட்டில இல்லாத அக்கறை இஞ்ச மட்டும் ஏன் வரவேணும்.'

'நான் இப்பிடி நடக்கிறது பிழையெண்டு எனக்கு வடிவாத் தெரியுது. ஆனாலும் இவ இப்பிடி ஓடித்திரிய ஆவேசமாக்கிடக்கு. ஏதோ தான் தான் திறம் எண்ட மாதிரியும் மற்றவை இழக்கம் எண்ட மாதிரியும் நினைப்பு. அந்தரிச்சுப்போய் நிற்கும் போது எவ்வளவு இதமாக் கதைச்சு தங்கட வளவுக்கை கொட்டில் போட இடங் கொடுத்த அவையைப்பற்றி இவ்வளவு மட்டமா கதைக்கேக்கை உண்மையில அவ என்ரை அம்மாவோ எண்டும் சந்தேகம் வருதுது. 'இந்த அவிச்சலுக்குள்ள என்னெண்டுதான் காலம் போகுதோ எண்ட புறுபுறுப்பை மழைக்காலத்தில் முழங்கால் புதையுpற சேற்றில என்னெண்டு தான் இதுகள் சீவிக்குதுகளோ எண்டு மாத்திப் போடுவாள். வீட்டு வளவுக்கை உண்டாக்கின கத்தரி,பயித்தை,மிளகாய் எண்டு வீட்டுக்கார அண்ணை குடுக்கிற எல்லாத்தையும் வாங்கிச் சமைத்துக் கொண்டேஷஎடி உனக்கு ஒரு புதினம் தெரியுமே.. உந்தப் புளியும், வயலுக்கை வாற நெல்லும், செத்தலும் போக உப்பும் கருவாடும் மட்டும் கொஞ்சம் சாசு கொடுத்து வாங்கினால் மழைக்காலம் முழக்க வயித்துப்பாட்டுக்கு போதும் எண்டு உந்த கிழவி சொல்லுது. என்று நொடிக்கும் போது அம்மா எண்டும் பாராமல் மூஞ்சியில இரண்டு அறைவிட்டா என்ன என்டு மனம் ஆங்காரம் கொள்ளுது. இவள் மாற மாட்டாளோ'

'என்னெண்டாலும் என்ரை அம்மா. அவளைக் கவலைப்படுத்தாமல் பார்க்க வேணும். எனக்கு எங்கிருந்து இந்தப் பழி தீர்க்கிற புத்தி வந்துதோ தெரியேல்லை. தேப்பன் மாதிரி எல்லாத்தையும் மனசுக்கை வைத்து புழங்குற சாதி எண்டு அம்மா திட்டுறது சரிதான். சரியோ பிழையோ எல்லாத்தையும் உடனுக்குடன் கக்கிவிடுவாள். என்னைப்போல் சாதிக்க மாட்டாள் என்றளவில் என்னைவிட அம்மா மேல்தான்.'


    

போனவுடன் அந்த முல்லைக் கொடிக்கு ஒரு தடி நட வேணும் என்று நினைத்த படி பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்த பரிதினியை தன் பாரம் எல்லாவற்றையும் புதிய தடியொன்றில் ஒப்படைத்துவிட்டு நின்ற அந்த முல்லைக் கொடி வரவேற்றது. இதென்ன உலக மகா அதிசயம் என்ற படி தாயை ஏறிட்டு நோக்கிய மகளின் விழிகளை சந்திக்கும் திராணி, தான் அறியாமல் விட்ட பிழைகளுக்காக பகல்; முழக்க அழுதழுது வீங்கிய அந்த தாயின் விழிகளுக்கு இருக்கவில்லை



    

No comments: