Tuesday, February 04, 2014

வாழ்வு


பெண்மையின் போர்க்குணத்தால்
நீ பெற்ற
எண்ணற்ற உறவுகளை விட
மனிதம் நோக்கிய
உன் தேடலில்
தட்டுப்பட்ட நான்
உனக்கு எல்லாமுமாகிப் போன நாட்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்.

போர்வைகள் நிரம்பிய
இவ்வுலகைவிட்டு ஒதுங்கும்
என் கூட்டுப்புழு வாழ்வில்
வண்ணத்துப்பூச்சி உனக்கு
அத்தனை நேசம்

உன் முரட்டுத்தனமும் முற்கோபமும்
என்மீது ஏற்படுத்திய வலிகள்
அன்பை நோக்கிய
உன் ஆவேச தேடல் பார்த்து
மெல்லத் தணியும்.

உன் எடுத்தெறியும் போக்கு பார்த்து
குனியும் என் முதுகு
அநியாயத்தைத் தட்டிக் கேட்கும்
உன் ஆளுமை பார்த்து
மெல்ல நிமிரும்

முகஸ்துதிகள் உன்னை மயக்கியதற்காய்
என்னுள் கனன்றெழும் நெருப்பு
முகவரி தொலைத்தோரில்
நீ காட்டும் அக்கறையில்
மெல்ல அணையும்.

கண்மூடித்தனமான உன் செலவுகள் பார்த்துக்
குமுறும் என் நெஞ்சு
குழந்தைமைப் பருவத்தை பறித்த
பணம் மீதான
உன் பழிவாங்கல்களின்
பிரதிபலிப்பே அது என்றறிந்து
மெல்ல துவளும்

உன் சிறுபிள்ளைத்தனங்கள்
நிதானிக்கமுன்னரே
என்னை நிலைகுலைத்துவிடுவதாய்
உணரும் என் மனம்
எச்சமின்றி உன் இலக்கைத் துடைத்தழித்த
உன் நிதானம் பார்த்து கர்வத்தால்
மெல்ல நிமிரும்

உன் நிர்வாண மனவெளியில்
சுழன்றடித்த அன்புப் புயல்
மனப்பாறை எதையும்
சுலபமாய் உடைத்துவிடும்
ஆண்களும் அதிசயிக்கும்
உன் உடற்பலத்தில்
சிந்தையை முந்திவிடும் செயலின் வேகத்தில்
என் உள்ளத்தின் இருப்பு
உனக்குள் நிரந்தரமாயிற்று.

இலக்கு நோக்கிய உன்
பயணத்தின் இருப்பு
இம்மியும் குலையாமலேயே
இதயங்கள் மீதான இருப்புக்கு
ஏங்கிய உன் தவிப்போ
என் இருப்பையே குலைத்தது
இன்று....
உனக்கு உருவமில்லை
ஆனாலும் நீ வாழ்கின்றாய்.
நானும் தான் வாழ்கின்றேன்
உள்ளமின்றி.....

ஜனவரி 2003

2 comments:

வெற்றிச்செல்வி said...
This comment has been removed by the author.
வெற்றிச்செல்வி said...

காலங்களை பழிவாங்கும் மாந்தர்களின்
மக்கிப்போன மனங்களிடையே
மங்காத காந்திகளின் வாழ்வைப்
பதியம் வைக்கும் வரிகள் இவை.

பழயன கதைத்தால் குப்பைகளைக் கிளறவேண்டாமென்று
கும்பிட்டு ஒதுங்கும் மாந்தரிடை
குளத்தின் செழுமையைப் பாடியபடி நீளும்
உங்கள் எழுத்துவாழ்வும் ஒரு தவம்தான் மிஸ்.

வெற்றிச்செல்வி