Sunday, February 23, 2014

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'

நடத்தைக் கோலங்கள்  6

'கீதாவின்ரை வீட்டுக்கு விளையாடப் போகவேண்டாம் என்று நிஷாந்திக்கு அம்மா எத்தனை தரம் சொன்னனான்'.

'ஏன் போகக்கூடாது அம்மா?' ஆண்டு இரண்டு படிக்கும் நிஷாந்தியின் கேள்வி இது.

'அவையளோடை நாங்க பழகிறது இல்லை அவை எங்கடை ஆக்கள் இல்லை, அவையளோடை பழகிறது எங்கடை அப்பாவின்ரை உத்தியோகத்திற்கு கௌரவமில்லை'.

காலையில் தனக்கும் தாய்கும் நடந்த உரையாடலை நிஷாந்தி மறந்து விட்டு சாப்பிட்டதும் விளையாட ஓடிப்போய்விட்டாள்.


தகப்பனின் தொழில் இதுதான் என்று அறுதியிட்டு கூறமுடியாத ஏழை கீதா. ஆனால் உயர்வு தாழ்வு என்ற பேதம் இந்த இளம் தளிர்களுடன் ஊடுருவ முடியாத பருவம் இது. விளையாட்டு ஒன்றுதான் அந்த மனங்களை ஆக்கிரமித்து நிற்கும் பருவம்.  கீதாவின் குடிசை முன்னின்ற வேப்பமரத்து முன்றலில் அவர்களின் விளையாட்டு தொடர்ந்தது. திடீரென கையில் பூரவசம் கம்புடன் ஆவேசமாக வந்த நிஷாந்தியின் அம்மா 'உன்னை எத்தனை தரம் சொன்னான் அந்தச் சனியங்களோடை விளையாட வேண்டாமென்று'. அடித்து இழுத்துக் கொண்டு தாய் போக ஏன் விளையாடக் கூடாது என்ற காரணம் கொஞ்சம் கூட தெரியாததால் இரு இளம் தளிர்களும் பரிதாபம் விழிகளில் கக்க நின்றன.



யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'

நடத்தைக் கோலங்கள்  5

இன்று வெள்ளிக்கிழமை.
'எட நல்லா விடிஞ்சு போச்சு போலை கிடக்கு. இவள் அடுத்த வளவு கமலம் வந்து இப்ப முழுச்சாணியையும் வழிச்செடுத்துக் கொண்டு போப்போறாள். அதுக்கு முதல் நான் முந்த வேணும், என்ற முணு முணுப்புடன் அந்த மூன்று ஏக்கர் வளவு முழுவதும் அலைந்து ஒரு மாதிரி சாணி அள்ளிக் கொண்டு வந்து வீடு முழுவதும் மெழுகுவதில் ஈடுபட்டாள் அம்மா.

இன்றைக்கு காலமை எல்லோரும் சிவபட்டினி தான்.

'மா முடிஞ்சு போச்சு. பாண் வாங்க காசில்லை. நிவாரண அரிசியும் திண்டு தீர்த்தாச்சு. அரிசி வாங்கினால் தான் மத்தியானச் சமையல். சும்மா உதிலை குந்தி கொண்டிருந்தால் வயிறு நிரம்புமே'. 

மெழுக்கு வேலையை கை துரிதமாகச் செய்ய வாய் அந்த வேகத்திலையே மனுஷன் மேல் சரமாரியான அம்பை விட்டுக் கொண்டிருந்தது. மனுஷன் தான் என்ன செய்யும். ஆரன் வேலைக்குக் கூப்பிட்டால் தானே கையிலை மடியிலை ஏதாவது வாறதுக்கு.

எப்படியோ மனுஷன் அரிசியும் பருப்பும் கொண்டு வந்து போட்டு விட்டுது. தேங்காய் வாங்க காசு போதவில்லை. அவளும் சளைத்தவளா! என்ன? சோறு காய்ச்சி தேங்காய் போடாமல் பருப்புக்கறியும் வைத்தவள் பர பரவென்று கோயிலுக்கு ஆயத்தமாகி விட்டாள்.

'எட மோனை இந்தா இந்தக் காசை கொண்டு போய் தேங்காயும் கற்பூரமும் வாங்கிக் கொண்டு வா' 

சீலைத் தலைப்பில் முடிந்திருந்த காசு மூத்தவன் கைக்கு மாறியது. சமைக்கிறதுக்கு காசில்லை என்று புறு புறுத்தவளுக்கு இப்ப என்னண்டு இது வந்தது. கேட்பதற்கு எல்லோருக்குமே வாய்க்கு இருந்தது. ஆனால் நாள் முழுக்க அருச்சனை வாங்க ஒருத்தருக்கும் தைரியம் இல்லை.

அதுசரி! அவளுக்கு காசு எங்காலை? பிள்ளையாருக்கு கொடுக்க வெண்டே நாலைஞ்சு கோழிகள் வளர்க்கிறாள். வீட்டுச் செலவுக்கு ஒரு சதமும் தொடுவதில்லை.

'பிள்ளையள் பசியிலை அந்தரிக்க பூசைக்கு பார்த்துப் பாராமல் செலவழிக்கிறதை பொறுக்காமல் தானோ இந்த சுவாமிகளும் மூடின கண்ணை திறக்குதுகள் இல்லை.

சிலைகளும் சிற்பிகளும்

அண்ணி

அண்ணி அழகானவள் மட்டுமல்ல தனது கூரிய பார்வையால் எவரையும் பணியவைக்கும் ஆளுமை கொண்டவள்; அன்பானவள். அதிகம் படிக்காதவள் ஆனாலும் அடுத்தவர் மனங்களை எளிதில் படித்துவிடும் ஆற்றல் கொண்டவள்.

அதனால்தான் திருமணம் முடித்த பின்னரும் கூட தன்னை விஷமாக வெறுத்து அண்ணனை, இழந்து விட்ட எதையோ தேடி அலைவது போல் வானத்து மீன்களை வெறுத்து நோக்கிக் கொண்டிருந்த அண்ணனை ஒரு இரவிற்குள் மாற்ற அவளால் முடிந்தது. குடும்பப் பாரத்தில் சோர்ந்து விரக்தியின் விளிம்பில் நின்றவரிடம் எவ்வித பதட்டமுமின்றித் தனது தசைகளைக் கழற்றிக் கொடு;த்து, கடை போடவைத்து, செல்வம் கொழிக்கும் நிலைக்கு வழிகாட்ட முடிந்தது. சாகவேண்டும் என அடிக்கடி விரும்பியவரில் வாழும் ஆசையை, வாழ்க்கையைக் காதலிக்கும் வெறியை ஊட்ட முடிந்தது.

ஆனால் அவளோ யாழ்ப்பாணத்து சராசரி பெண்ணுக்கு இருக்கும் நகைமோகமோ, ஆடம்பர மோகமோ இல்லாதவள். செல்வம் புரளும் வீட்டிலும் எளிமையை நேசிப்பவள். சுhதாரண ஒரு தோடு. நெற்றியில் பெரிய தொரு குங்குமப் பொட்டும் உதட்டில் சதா புன்முறுவலும் வளையவருபவள்.

அவளுக்கு மிரண்டு ஓடிய அண்ணாவை தன்னைச் சுற்றிச் சுற்றி வரப்பண்ணும் ஆற்றல், தனது புகழ், செல்வம், அந்தஸ்து, ஊராரின் மரியாதை அனைத்தும் மனைவியால் தான் என்று மானசிகமாக அவளை வணங்கச் செய்யும் ஆளுமை, ஊராரின் மரியாதையைத் தன்பக்கம் ஈர்க்க வைக்கும் நற்பண்பு, அண்ணி அண்ணி என நாங்கள் உயிரை விடுமளவிற்கு எங்கள் மீது பாசம். இத்தனையும் அந்த எளிமையான உருவத்திற்குள் இருந்து எங்களை பிரமிக்க வைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் அன்று மட்டும் வழக்கத்திற்கு மாறாய் - முகத்தில் சோகம்...., நடையில் தளர்வு...ஏன்? உயிருக்குயிராய் வளர்த்த தன் மைத்துனி அவனைப் பிரிந்து வெளிநாடு செல்லும் சோகம் அவளை மிக மிக பாதித்து விட்டது. அவனைப் பலவீனப்படுத்தி அவளிற்குள்ளே கனிந்து கனன்று கொண்டிருந்த எரிமலை ஒன்றிற்கு வடிகால் தேடிக் கொடுக்கும் மளவிற்கு அந்தப்பிரிவு அவளைப் பாதித்து விட்டது.

தங்கையை பிரிந்த சோகத்தை மனைவியின் அருகாமையில் மறக்க வந்த அண்ணனுக்கு, 'என்னை விட்டு என்னவோ கழண்டு போனது போல் இருக்கு' என பிரிவுத்துயரை வெளிப்படுத்தியவருக்கு கழற்றி எவளிட்டை கொடுத்தனீங்கள்....? உங்கட அவளிட்டையோ....? அவளை  ஏன் ஏமாத்தினீங்கள் என்ரை காசுக்காகத்தானே? அவளிலை தானே உங்களுக்கு விருப்பம். போங்கோ உங்கடை அவளிட்டை போங்கோ.

ஆம்! அன்புக்கு ஏங்குகின்ற கணவன் தனக்கு மட்டும் சொந்தம் என எண்ணுகின்ற இன்னொரு அண்ணி அன்று வெளிப்பட்டாள்.

அண்ணாவின் கோபம், இயலாமை, அவமானம் எல்லாம் சேர்ந்து முதல் தடவையாக அவளின் உடலில் தடம் பதித்தது.

முதல் தடவையாக கண்கள் கலங்க, கண்ணீர் துளிகள் சிந்தி, ஆனால் அவள் அழவில்லை – உறுதியும் ஆளுமையும் கொண்டவர்கள் அப்படித்தான் இருப்பார்களோ?

எல்லாம் சிறிது நேரத்திற்குள் தான். மீண்டும் அவன் பழைய அண்ணியாக மாறிவிட்டாள். தனது கொதிப்பை குளிர்விக்கவோ, என்னவோ நீண்ட நேரம் தலை குனிந்தான். வானத்தை மீண்டும் வெறித்து நோக்கத் தொடங்கிய அண்ணனை அன்புடன் அணைத்து, தனது பார்வையால் அவனை மன்னித்துவிட்ட சேதியை சொல்லி ....... 'உங்களுக்கு நான் இருக்கிறன் என தெம்பூட்டி......

அட! இப்படியும் ஒருத்தி இருப்பாளா? கணவனின் உள்ளம் இன்னொருத்திக்கு சொந்தமானது என தெரிந்தும் கூட அவனின் உயர்விற்குப் பாடுபட, ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பலம் வேண்டும். அவனைத் தனக்குள் சிறைப்படு;த்தும் ஆற்றலை, கனவிலும் அவளை நினைத்து உருக வைக்கும் பரிசத்தை எங்கிருந்து பெற்றாள். முகத்தில் ஒரு கவலை, ஏக்கம், வெறுப்பு இன்றி இவ்வளவு காலமும் உற்சாகமாக புத்துணர்ச்சியுடன், முறுவல் காட்டி நடமாடும் மன உறுதியை எங்கிருந்து பெற்றாள்.

உண்மையில் அவள் சாதாரணமானவளில்லை. ஈழத்து தமிழ் இலக்கிய வானில் சட்டென மின்னிய ரஞ்சகுமார் என்ற அற்புத சிற்பியின் கைவண்ணத்தில் உருவான இவள் எமது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு ஆணும் யாசிக்க வேண்டிய பெண்.

அழகு



கூனல் விழுந்த கூட்டுக்குள்
கூனலற்ற மனம் அழகு
மனதின் மூலை முடுக்கெல்லாம்
மனிதம் என்றொரு குணம் அழகு.

வற்றிச் சுருங்கிய தேகமதில் - மனதை
வெற்றி கொள்ளும் தீரம் அழகு
அனுபவமற்ற அறிவுதனை – என்றும்
அலட்சியப்படுத்தும் வீரம் அழகு.

நெடுத்து மெலிந்த கரங்களுக்கு
கொடுத்து உண்ணும் அறம் அழகு.
ஆதரவற்றுத் திரிபவரை – என்றும்
அணைத்துக் காக்கும் திறம் அழகு.

வளைந்து நெளிந்த கால்களுக்கு
வாழத்துடிக்கும் வேகம் அழகு.
சீராய் என்றும் நாம் வாழ – எம்மை
நேராய் நடத்தும் தாகம் அழகு.

கோழி முட்டைக் கண்களுக்குள்
ஆழி போல் பெருகும் ஈரம் அழகு.
சூழ்ந்து வருத்தும் கொடுமைகளை
ஆழ்ந்து நோக்கும் போதம் அழகு.

உருவில் பெருத்த உதடுகளுக்கு
உண்மையே பேசும் உரம் அழகு.
அடுத்துக் கெடுக்கும் வஞ்சகரை
என்றும் தடுத்துப் பேசும் தரம் அழகு.

அழகு அழகு அத்தனையும் அழகு
அவளைக் கவர்ந்திடும் ஆணழகு அது


ஜன 1996


எங்கிருந்து கற்றாய் நீ ?



என் இனிய தோழி !

எண்ணிரண்டு வயதில்
கண்ணிரண்டால் தூதனுப்பி
காதல் கதை பேசும்
கன்னியர் கூட்டத்துள்
கட்டவிழ்த்து அலையும்
கண்ணின் மணிகளுக்கு
கடிவாளம் போட்டு
கண்ணியமாய்க் கதைபேச
எங்கிருந்து கற்றாய் நீ?

கைகால் அழகுகாட்ட
கருத்துடனே விலங்குபூட்டும்
கண்ணுக்கும் உதட்டுக்கும்
கோடிழுத்துக் கோலமிடும்
கோதையர் பலருக்குள்
முழுநிலவாய் முகம் மலர்த்தி
புன்னகையே  அணியாக
புதுமலர் போல் நீயிருக்க
எங்கிருந்து கற்றாய்....?


அறிவுக் கடல்தனில்
அங்கங்கே படகோட்டி
அத்தனையும் தெரியுமென
ஆரவாரம் காட்டும்
அரைகுறைகள் பலரிருக்க
புத்தறிவுக் கடலுக்குள்
புகுந்து முக்குளித்து
முத்தெடுத்த பின்பும் நீ
முகந்தெரியாதிருக்க
எங்கிருந்து கற்றாய்...?


பார்வையால் பசிதூண்டி
பலசுவையும் காட்டிவிட்டு
நாசூக்காய் நழுவும்
நயவஞ்சக கூட்டத்தின்
பாயும் விழி அம்புகளை
பார்வையால் விரட்டி
பணிந்தணுகும் பாதகரை
பக்குவமாய் கதை பேசி
எட்டியே நிற்கவைக்கும்
கலை எப்போ கற்றாய் நீ....?


குடும்பக் கோவிலிலே
அன்பெனும் விளக்கேற்ற
மென்மைக் கோலமுடன்
மேதினியில் உலவும் நீ
வேளை வரும் போதோ
வீறுகொண்ட வேங்கையாய்
வல்லசுரர் வதம் செய்யும்
கொற்றவைத் தாயாய்
நிதமொரு கோலங்காட்டும்
விந்தைதான் எங்கு பெற்றாய்...?

ஜன 1993

கொடுத்துதவு........



என் எருமைக் கன்றுக் குட்டிக்கு
அன்புடன் ஒரு விண்ணப்பம்.

அறிவுப் பூமிதனில் அடுத்தவன் பாடுபட
அறுவடையை மட்டும் தனதாக்கிக் கொள்ளும்
தகவிலார் கண்டு மனம் அழலுறாதிருக்க
உன் குணத்தில் சிறிது எனக்கும் கொடுத்துதவு.

விநயமாய் வந்துநின்று வேண்டியது பெற்று
வேளைவரும் போதோ தூக்கியெறிந்து விடும்
துக்கிரிகள் கண்டு மனம் துவளாது இருக்க
உன் குணத்தில் சிறிது எனக்கும் கொடுத்துதவு.

பசித்தவன் நாடிவர பாரா முகங்காட்டி
ருசிப்பவரைத் தேடி முழுமனதாய் விருந்தளிக்கும்
வித்தகர் கண்டு மனம் விசனமடையாதிருக்க
உன் குணத்தில் சிறிது எனக்கும் கொடுத்துதவு.

தன்வீட்டுக்குணவூட்ட தன்னையே உருக்கியவரை
தாம் வளர வேண்டி தயங்காமல் உதறிவிடும்
உடன் பிறந்தோர் கண்டு மனம் உருவேறாதிருக்க
உன் குணத்தில் சிறிது எனக்கும் கொடுத்துதவு.

அறிவுப் பயிர் வளர அத்திவாரம் போட்டவரை
திரும்பியே பாராது திமிராய் நடந்துவிடும்
தருக்குடையார் கண்டு மனம் எரிவடையாதிருக்க
உன் குணத்தில் சிறிது எனக்கும் கொடுத்துதவு.

ஆடையில்லா ஊரில் அரைகுறையாத்தானும்
உடுத்திருக்க வேண்டில்
உன் குணத்தில் சிறிதை
உடமையாக்கிக் கொள்வதே உத்தமமானது.

மே 1992

Saturday, February 22, 2014

இருப்பு


எனதும்
எனது உறவுகளினதும்
புரிதல் பற்றிய
எனது எண்ணங்களும்;
உனதும்
உனது உறவுகளினதும்
புரிதல் பற்றிய
உனது எண்ணங்களும்
இணைந்து
கட்டியது
எங்களெங்கள் வீடுகளைவிட்டு
எனக்கும் உனக்குமான ஒரு வீட்டை.

இன்று
எனதும்
எனது புரிதல்கள் பற்றிய
உன் எண்ணங்களும்
உனதும்
உனது புரிதல்கள் பற்றிய
என்   எண்ணங்களும்
இணைந்து
கட்டுகிறது
எனக்கும்; உனக்குமென
தனித்தனி வீடுகளை.

பிரியம்


என் ஒவ்வொரு மலர்வும்
உனக்கென்றே ஆனது
ஒவ்வொரு புலர்வும்
நீ
எனக்காகவே
கண்விழித்த போதில்
பெரும்பொழுதை
என்னுடனே கழித்தபோதில்
நான் சோர்ந்த போதெல்லாம்
தெம்பூட்டியபோதில்
எனது ஒவ்வொரு உயிர்ப்பிற்காகவும்
தவமிருந்தபோதில்
இரவின் விழிப்பை நினைவூட்டும்
அந்த விழிகளின் பரபரப்பில்
என் மலர்ச்சியை கண்டபோதில்

ஒவ்வொன்றிலும் பக்குவம் இருந்தது.
பரந்தநோக்கும் தெரிந்தது

ஒவ்வொரு புலர்விலும்
முதல் முகம்
என்முகமாகவே இருக்க விரும்பினாய்.
விழிகளை மூடியபடி
'கணியம்  பார்த்து
என் அருகில் வந்து
உன் முதற் பார்வையை எனக்காக்குவதில்
என்னைத் தழுவுவதில் உனக்கொரு இன்பம்
.
 நீண்ட இடைவெளியின் பின்
மீண்டும் உன்னைப் பார்க்கிறேன்.
அதே முகம்,
அதே மகிழ்ச்சி
அதே பரிவு
அதே தழுவல்
இன்னொன்றும் கூட
ஒரு பொட்டுக் கண்ணீர்
செயலிழந்த விழிகளிலிருந்து

Friday, February 07, 2014

கருத்தூண்



கருத்தூண் என்ற சொல்லின் எனது தெரிவுக்கு தற்போது வயது 15. இதனை மூன்று விதமாக பொருள் கொள்ளமுடியும்.

1. எண்ணக்கருக்களின் தூணாக அதாவது ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற பொருளை உணர்த்துகின்ற கரு+தூண் = கருத்தூண் (Pillar of Ideas) என்பது முதலாவது பொருள்.
2. மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஆய்வும் சமூகமட்டத்தை இலகுவாகச் சென்றடையும் பொருட்டு இலகுவாக செரிக்க வேண்டும் அதாவது கருத்தை வெளிப்படுத்தும் விதம் மிக மிக் எளிமையாக இருக்க வேண்டும் என்ற பொருளைக் குறிக்கின்ற கருத்து+ ஊண் = கருத்தூண்(Food for Thought) என்பது இரண்டாவது பொருள்
3. மனித இனத்தின் இரு கூறுகளில் புதிய  உயிரைச் சுமக்கும் வாய்ப்பு பெண்ணினத்துக்கு மட்டுமே உண்டு. மென்மை, இரக்கம், ஒழுங்கு போன்றவை பெண் தன்மை என்றும் வன்முறை, ஆக்கிரமிப்பு, வேகம் போன்றவை ஆண் தன்மை என்றும் சொல்லப்படுகின்றன. ஆணோ பெண்ணோ இரண்டு கூறிலுமே இந்த இரு தன்மைகளும் உண்டு. புதிய கருத்தின் பிரசவம் கூட அடுத்தவரை வார்த்தைகளால் நோகடிக்காத, தனது கருத்தே சரியென்று ஆதாரமின்றி வாதாடுவதாக, திணிப்பதா இல்லாது அனைவரது கருத்தையும் ஏற்று அதில் பொருத்தமானவைகள் அனைத்தையும் ஒன்றாக்கி சமூகத்துக்குப் பொதுவான கருத்தாக மாற்றுகின்ற  தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்ற கருத்துடைய கரு+ தூண் = கருத்தூண் என்பது மூன்றாவது பொருள்.

கருத்தூண் என்ற இந்த சமூக வலைத்தளமானது இந்த மூன்று அம்சங்களின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாகவும் இருக்கின்றேன்.

Wednesday, February 05, 2014

காத்திருப்பு


நாளின் பெரும்பொழுது
என்னை
திட்டித் தீர்ப்பதிலேயே கழிகின்றது

நடக்குமுன்னரே பறக்கும் மனத்தை
முடிவெடுக்கு முன்னரே ஆட்டிவிடும் தலையை---
சொற்களை முந்திவிடும் பார்வையின் வீச்சை---
கட்டும் வல்லமை போதாமல்
கவலை விரவி நிற்கிறது

எதிரியின் எல்லைக்குள்ளேயான
வேவுப் புலியின் நகர்வை------
காவலரண் மீதிருக்கும்
மூட மறந்த விழிகளின் கூர்மையை---
குறி பொருத்திய துப்பாக்கி விசைவில்லில்
பதிந்திருக்கும் விரல்களின் உறுதியைப் போல்
ஒரு மனத்தை
அது அவாவி நிற்கிறது.

காத்திருக்கின்றேன்
என்னை எனக்கு உணர்த்திய ஏதோ ஒன்று
என்னை நான் ஆளவும் உதவும்
என்ற
அசைக்க முடியாத நம்பிக்கையுடன்.....

ஆகஸ்ட் 1996

வீட்டுக்கொரு நூலகம்


வாசிப்புச் சூழல்
ஈழத் தமிழ்ச்சமூகத்திற்கு வீட்டு நூலகம் என்பது புதியதொரு கருத்துநிலையல்ல. மத்தியதர வர்க்கத்தின் வீடுகளிலுள்ள மிகப் பெரிய அலுமாரி(கள்) புத்தக அலுமாரி(களா)கவே இருந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததொன்று. அறிவுச் சமூகமென்று உலகளாவிய ரீதியல் பெயரெடுப்பதற்கு வெறும் கடிவாளக் கல்வியில் மட்டும் தங்கியிருந்திருக்க முடியாது. அதற்கும் மேலாக சுயதேடலால் வழிப்படுத்தப்பட்ட சமூகமாகவே தமிழ்ச் சமூகம் தன்னை இனங்காட்டியிருக்கிறது. ஈழத்து அறிஞர்கள் ஒவ்வொருவரும் நூற்குவியலுக்குள் தான் தமது வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்திருக்கின்றனர் என்பதை அவர்கள் நூலகங்களுக்கு வழங்கிய புத்தக அன்பளிப்புகள் சிலசமயம் அலுமாரிகளுடன் கூடிய புத்தக அன்பளிப்புகள் சான்று பகர்கின்றன. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட  போர்கால சூழலும் தகவல் தொழில்நுட்பத்தின் ஆக்கிரமிப்பும் புத்தகக் கலாசாரத்தை ஈழத்தமிழ்ச் சமூகத்திடமிருந்து வெகுவாகவே அந்நியப்படுத்தியிருக்கிறது. இது வீட்டுக்கொரு நூலகம் என்கிற கருத்துநிலையை சுலோகமாக்கி ஒவ்வொரு வீட்டுக்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கசப்புடன் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கு சமூகம் இன்றியமையாதது. மரபு, வயது, பயிற்சி, சூழல் என்பன மனித உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. தனிமனித அபிவிருத்தியை கருத்தில் கொள்ளும் எந்தவொரு சமூகமும் தனிமனித அபிவிருத்தியின் ஆதாரமான குடும்பம் என்ற அமைப்பின் பங்கைப் புறக்கணித்து தனிமனித அபிவிருத்தியைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது.. கல்வி, சமூகமயமாக்கம், குழந்தை பராமரிப்பு என்பவற்றில் குடும்பம் என்பது பிரதான பங்காற்றுகின்றது. பிறப்பால் விலங்காக இருக்கும் மனிதன் மனிதனாக வார்க்கப்படுவது குடும்பம் என்ற அச்சில் தான.; மனிதன் சந்திக்கின்ற முதலாவது உறவான தாய் சேய் உறவு மனிதனுக்கு தன்னுணர்வையும், தன்னைச் சுற்றியுள்ள கூட்டாளிகளின் உறவு சமூக உணர்வையும் தோற்றுவிக்கிறது. சமூகத்தின் வளம், சமூகத்தின் மரபு, சமூகத்தின் தேவைகள், சமூகத்தின் சூழல் என்பவற்றின் அடிப்படையிலேயே மனிதனின் முன்னேற்றம் தங்கியுள்ளது. குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள் அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை' எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று மனித வாழ்க்கையில் குடும்பமும் சுற்றுப்புறச் சமூகமும் வகிக்கும் பங்கை தெளிவாகக் காட்டுகிறது

எனவே கல்வி தொடங்கவேண்டிய இடம் குடும்பம். பார்த்துச் செய்தல் குழந்தையின் பிரதான பண்பு என்பதனால் தேடல் உணர்வுக்கான களம் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. காலைப் பேப்பர் படிக்காது விட்டால்  பொழுதே புலர்வதில்லை என அங்கலாய்க்கும் அப்பாமார்கள், வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினருக்குத் தேனீர் கொடுக்கவேண்டும் என்ற அந்த அவசரத்திலும் கூட தண்ணீர் கொதிப்பதற்கிடையில்  சீனி சுற்றி வந்த பேப்பர் துண்டில் என்ன இருக்கின்றது என்று; பரபரப்புடன் கண்களை மேயவிடும் அம்மாக்கள், பரீட்சை அவசரத்தின் மத்தியிலும் கையில் புதிதாக அகப்பட்ட கதைப்புத்தகத்தை பள்ளிப் பாடப்புத்தகத்துக்குள் மறைத்து வைத்து வாசிக்கும் அக்காக்கள், நாட்டு நடப்புப்பற்றி அலசிக்கொண்டிருக்கும் 'எல்லாம் தெரிந்தவர்கள்' குழாம் ஒன்று தமக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பின்றித் திணறிக்கொண்டிருக்கும்போது, தேனீர் கொடுத்துவிட்டுத் திரும்பும் சாக்கில் இரத்தினச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தீர்வைக் கொடுத்துவிட்டுப்போகும் குறுகிய காலப் பள்ளிவாழ்க்கைக்குரிய அன்ரிமார்கள் என்று  குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வாசிக்கும் உணர்வைச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் விதைத்து விடுகின்றனர். எனவே வாசிக்கும் சூழல் என்பது மிக முக்கியமான காரணி. எனவே ஒவ்வொரு குடும்பத்தவரும் வீட்டு நூலகத்தின் தேவையை உணருதல் அவசியமானது.

வாசிப்பு-அபிவிருத்தியின் ஒரு அலகு 
முப்பது ஆண்டு கால போரின் வடுக்களைச் சுமந்து நிற்கும் இன்றைய எமது சமூக உறுப்பினர் ஒவ்வொருவரதும் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தை அபிவிருத்தி. 'சிறந்த கல்வி, உயர்ந்த போசாக்கு, சுகாதாரம், குறைந்த வறுமை, சுத்தமான சூழ்நிலை, மக்கள் யாவருக்கும் சம சந்தர்ப்பம் கிடைத்தல் அதிகளவு தனிமனித சுதந்திரம், செழிப்பான கலாசார வாழ்க்கை அனைத்தும் ஒன்றிணைந்ததுதான் அபிவிருத்தி. அபிவிருத்தியின் முக்கிய அம்சமாகக் கருதப்படுவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி ஆகும். 'எதிர்கால தலைமுறையினர்  தமது சொந்தத் தேவைகளை தாமே பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றலின் மீது தாக்கம் எதையும் ஏற்படுத்தாது இன்றைய தலைமுறையினரின் தேவைகளை நிறைவுசெய்து வைக்கும் அபிவிருத்திச் செய்முறையே நிலைத்து நிற்கும் அபிவிருத்தி'. இத்தகைய அபிவிருத்தியானது குறிப்பிட்ட காலப்பகுதிக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தலைமுறையினருக்கும் மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை மாதிரியாகக் கருதப்படவில்லை என்பதைக் குறித்துநிற்கிறது.

அறிவின் வழி மனித அபிவிருத்தி
மேற்குறிப்பிட்ட கருத்துநிலைகளின் மையப் பொருள் மனிதன் என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தேசங்களின் உண்மையான செல்வம் மக்களே என்பதை அடிப்படையாகக் கொண்டு மக்களின் தெரி;வுகளை விரிவடையப்பண்ணுவதனூடாக முழுமையான வாழ்வுக்கு அவர்களை இட்டுச் செல்வதை நோக்காகக் கொண்டது. அது மக்களின் இயலாற்றலைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டது. மக்களின் உடல் நலம் தொடக்கம் பொருளாதார அரசியற் சுதந்திரம் ஈறாக மக்களின் நன்நிலை என்ற கருத்துநிலையை இது உள்ளடக்குகிறது. அபிவிருத்தியை இந்தவகையில் நோக்குதல் மனிதசமூகத்திற்குப் புதியதொன்றல்ல. அபிவிருத்தியின் இறுதி இலக்கு மக்களின் நன்நிலையே என்பதை அரிஸ்ரோட்டில் முதற்கொண்டு இன்றுவரை மெய்யியலாளர்கள், பொருளியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். 1998 இல் நோபல் பரிசை வென்றெடுத்த இந்திய பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென்னின் பார்வையில் அபிவிருத்தி என்பது பொருளாதார குறிகாட்டிகளினால் அளவிடப்படும் ஒன்றல்ல. அது மக்களின் நன்நிலை என்ற கருத்தை வலியுறுத்துவது..  எந்தவொரு அபிவிருத்தி முயற்சியின் இலக்கு மனிதனே. அபவிருத்திக்கான கருவியும் மனிதனே. அபிவிருத்தியின் கர்த்தாவும் மனிதனே. மனிதனுக்காக மனிதனைக் கொண்டு மனிதனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளே அபிவிருத்தியைத் தரும்.

ஆளுமை மிக்க மனித சமூகத்தின் பலம் அறிவு எனச் சொல்லப்படுகின்றது. பலம் என்பது இயற்கை வளத்தாலோ, பணபலத்தாலோ அளவிடப்படுவதில்லை. உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு. கண்டவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை எனப் புலன்களால் பெற்ற அறிவை புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மை கண்டு, புதிய கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மேலும் ஆய்வுசெய்து, சரிபார்த்து, கோட்பாடு கண்டு, சட்டமாக்கி உலகை வழிநடத்தும் ஆற்றலைப் பெறுவதற்கு அறிவு சார் சிந்தனை அவசியமாகும்.. அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்குப் பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற, தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்துபட்ட வாசிப்புத் திறனே. வாசிப்பதன் மூலமோ, கேள்வி ஞானத்தினாலோ நாம் பெறும் தகவலை தகவலாகவே வைத்திருக்காது அறிந்து கொண்டவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஆராய்ந்து செல்லும் போதுதான் 'அறிவு' எமக்குள் ஊறும். இதையே 'கற்றனைத்து ஊறும் அறிவு' , 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' ஆகிய  குறள்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

வாசிப்பின் வழி தனிமனித அபிவிருத்தி
மனித அபிவிருத்தியில் தனிமனித அபிவிருத்தி தனித்து நோக்கப்படவேண்டியதொன்று. தனிமனிதனின் வளர்ச்சியின் கல்விக்கு அதிகூடிய பங்குண்டு. கல்வி பற்றி  கீழைத்தேய சிந்தனையாளர் மகான் அரவிந்தரது கருத்துக்களை தனிமனித விருத்திக்கான அடிப்படையாகக் கொள்வது இங்கு பொருத்தமானது. கற்பித்தலின் முதலாவது கொள்கை எதையுமே யாருக்கும் கற்றுத் தர முடியாது. ஒரு மனிதனுள் ஏற்கனவே மறைந்து கிடக்கும் அறிவைத் தான் அவருக்குப் போதிக்க முடியுமேயன்றி அப்படி இல்லாத எதனையும் அவருக்குப் பயிற்றுவிக்க முடியாது. ஆசிரியர் தனது ஞானத்தை மாணவருக்குள் செலுத்துவதும் அவருள் கிடக்கும் அறிவை வெளியே கொண்டுவருவதும் இல்லை. மாறாக அறிவு புதைந்திருக்கும் இடத்தை மாணவருக்குச் சுட்டிக் காட்டி மேற்பரப்பிற்கு அதை இயல்பாக எப்படி வரவழைப்பது என்பதை அறிவுறுத்தலே ஆசிரியரது பணி. மாணவரின் வயது மட்;டத்துக்கு அமைய ஆசிரியரின் உதவி கூடிக் குறையுமேயன்றி பயிற்சி முறையில் மாற்றமிருப்பதில்லை. கற்பித்தலின் இரண்டாவது கொள்கை ஒரு மனது எவ்வாறு வளர வேண்டும் என்பதை அந்த மனதையே தீர்மானிக்க விடுவது. ஆசிரியரோ பெற்றோரோ தாம் விரும்பிய வடிவத்தில் குழந்தையைச் செதுக்க முடியாது. செதுக்கவும் கூடாது. அது காட்டுமிராண்டித் தனம்.  ஒரு பிறவி தனக்கே உரிய சுயதர்மத்தைக் கைவிடும்படி வற்புறுத்துவது அந்த ஜீவனுக்கு இழைக்கப்படும் நிரந்தரத் தீங்காகும். மூன்றாவது கொள்கை நமது முனைப்பு அருகிலிருப்பதிலிருந்து தொலைவிலிருப்பதற்குப் போகும் முயற்சியாக இருக்க வேண்டும். எமது முனைப்பு தற்போது என்னவாக இருக்கிறதோ அதில் தொடங்கித்தான் என்னவாக இருக்க வேண்டுமோ அந்த நிலைக்குச் செல்ல வேண்டும்.  நமது தற்போதைய பாரம்பரியம், தற்போதைய சுற்றுப்புறச் சூழல், எமது நாடு, எமக்கு ஊட்டமளிக்கும் எமது மண், நாம் சுவாசிக்கும் காற்று, நாம் காணும் காட்சிகள், கேட்கும் ஒலிகள், எமக்குப் பழக்கமாகிப் போன வழக்கங்கள் அனைத்துமே எமது இயல்பிற்கு அடித்தளமாக உள்ளன. இந்த அடித்தளத்திலிருந்து தான் மனிதனது கல்வி தொடங்க வேண்டும். அவருக்கு இயல்பாக அமைந்துள்ள வார்ப்பிலிருந்து தான் வேலையைத் தொடங்க வேண்டும். புதிய கருத்துக்களை முன் வைக்கலாமேயன்றி வற்புறுத்தக் கூடாது.

மேற் குறித்த கருத்திலிருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடியது பாடசாலைக் கல்வி மட்டும் தனிமனித அபிவிருத்திக்குப் போதுமானதல்ல. அதைவிட ஒருபடி மேற்சென்று சுயகற்றலில் ஒவ்வொரு மனிதனும் ஈடுபடுதல் மிக அவசியம் என்பது இங்கு தெளிவாகிறது. சுயகற்றலை எங்கிருந்து தொடங்கலாம்? சுயகற்றலின் மிக மிக அடிப்படையான அம்சம் பரந்துபட்ட வாசிப்பு. இது தொடங்க வேண்டிய இடம் வீடு. வீட்டு நூலகத்தை வடிவமைப்பதற்கான வழிமுறைகள் எவை? பின்வரும் அம்சங்கள் வீட்டு நூலகத்தை வடிவமைப்பதில் பின்வரும் அடிப்படை அம்சங்களையாவது கடைப்பிடித்தல் மிகமிக அவசியமானது.


நூல்களின் தேர்வு
வீட்டு நூலகத்தின் அடிப்படை அம்சம் தரமான நூல்களின் தேர்வு.
நூல்கள் தொகையாலோ தரத்தோலோ அதிகரித்துச் செல்லும் தன்மை இல்லாத ஒரு காலப்பகுதியில், நூல்கள் புனிதமானவை என்ற கருத்துநிலை மேலாதிக்கம் செய்த ஒரு காலப்பகுதியில் நூல்கள் அனைத்துமே அறிவுப் பொக்கிசங்களாகவே இருந்தன. கோவில்கள் மடாலயங்களில் பேணிப்பாதுகாக்கப்பட்ட எத்தனையோ பதிவேடுகளை இதன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். நூல்களின் தொகை விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலும் நூல் உருவாக்கத்தில் நீண்டகால அறிவும் அனுபவமும் பிரயோகிக்கப்பட்ட ஒரு  காலத்திலேயே நூலைத் தேர்ந்து கற்க வேண்டும் என்ற பொருள் தரும் 'கல்வி கரையில கற்பவர் நாள் சில, மெல்ல நினைக்கிற் பிணி பல - தௌ;ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, பாலுன் குருகிற றெரிந்து'  என்கிற அடிகளை மிகப்பழமை வாய்ந்த இலக்கண நூலான நாலடியார் தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது. அதாவது நீருடன் கலந்துள்ள பாலை அன்னம் எவ்வாறு பிரித்துப்பருகுகின்றதோ அவ்வாறே நூல்களின் சாரத்தைக் கிரகிக்க வேண்டும் என்கிறது. நூல் அழகுகள் மட்டுமன்றி நூல் குற்றங்களையும் பட்டியலிட்டிருக்கிறது தொல்காப்பியம்.
ஆனால் இன்றைய உலகம் அப்படிப்பட்டதல்ல. நிமிடத்துக்கு மில்லியன்கணக்கில் உருவாகும் இன்றைய நூல் உலகில், கணனி அறிவே நூலுருவாக்கத்துக்குப் போதுமானது என்ற கருத்துநிலையில் இருக்கும் சமூகத்தில் குப்பைக்குள் குன்றிமணியைத் தேடிப் படிக்கவேண்டிய நிர்ப்பந்தம் வாசகனுக்கு உண்டு.
'தரமான புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு அரிய கலை. தரமற்ற புத்தகங்களை ஈவிரக்கமில்லாமல் நிராகரிப்பது அதைவிடப் பெரிய கலை. நம்மை ஏமாற்ற வீசப்படும் தந்திர வலைகளுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு மிக மேலான புத்தகங்களைத்தேடி, அவற்றைப் படைத்திருக்கும் உன்னத ஆசிரியர்களைத் தேடி நாம் செல்ல வேண்டும் என்கிறரர் எழுத்தாளர் சுந்தரராமசாமி.
'அரிசியில் கல்லைக் கலந்துவிட்டால் பிரித்துவிடலாம். ஆனால் அறிவிலே நஞ்சைக் கலந்துவிட்டால் பிரிப்பது கடினம். எனவே நூல்தேர்வு கருத்தில் கொள்ளப்படவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்கள் நூலகங்களுக்கு கிடைக்க வழிசெய்யப்படவேண்டும்' என்கிறார் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா.
எந்தவொரு நூலும் அது கொண்டுள்ள கருத்தின் அடிப்படையில் புத்துயிர் தருவது, தகவலைத் தருவது, உயிர்ப்பூட்டுவது என மூவகைப்படுகிறது.  உண்மையோ பொய்யோ நல்லதோ தீயதோ படிப்பவருக்கு ஒரு புதிய உணர்வை, புதுவித எழுச்சியை, புதுவித கிளர்ச்சியை, பொழுதுபோக்கு உணர்வைத் தருபவை புத்துயிர் தரும் நூல்கள் எனப்படும். புத்துயிர்ப்பு உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ இருக்கலாம். அப்பட்டமான உண்மையிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட ரோல்ஸ்ரோயின் புத்துயிர்ப்பு, மக்சிம்கோர்க்கியின் தாய், லியோன்யூரிஸின் எக்ஸ்சோடஸ் இவ்வகையைச் சார்ந்தது. சமூகத்தின் வாழ்நிலையைப் பிரதிபலிப்பவை தான் இலக்கியங்கள் என்ற உயரிய கருத்துநிலையிலிருந்து இம்மியும் வழுவாமல் படைக்கப்படும் எந்தவொரு இலக்கியமும் புத்துயிர்தரும் என்றவகையில் கவிதை நூல்கள், நாடக நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கியங்களும், ஓவியம், சிற்பம், போன்ற கலைத்துவ ஆக்கங்களும் புத்துயிர் தரும் நூல்களின் வகைக்குள் உள்ளடக்கப்படுபவை. இவை தவிர ஆன்மீக ரீதியில் வாசிப்பவருக்கு அமைதியையும் நிறைவையும் தருகின்ற ஆன்மீக நூல்களையும் புத்துயிர் தரும் நூல்களுக்குள்ளே உள்ளடக்கலாம்.  பழம்பெரும் இலக்கியங்களான புராண இதிகாசங்கள், திருமுறைகள் போன்றவை இவ்வகைக்குள் உள்ளடங்கும்.
வரலாறு, அரசியல், புவியியல் போன்று எடுத்துக் கொண்ட பொருட்துறை தொடர்பாக பொதுவான தகவலை உள்ளடக்குபவை தகவலைத் தரும் நூல்கள் எனப்படும். இவை குறிப்பிட்ட பொருட்துறையில் எழுதப்படும் தனிப்பொருள் நூல்களாகவோ, கல்வித்தேவையைப் பூர்த்தி செய்யும் பாடநூல்களாகவோ, ஆய்வுக்கு உதவும் அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், பருவ இதழ்கள் போன்ற அடிப்படை நூல்களாகவோ, அதுவுமன்றி தேவைப்பட்ட உடனேயே குறிப்புகளை வழங்கும் உசாத்துணை நூல்களாகவோ இருக்கலாம்.
இவை இரண்டையும் தவிர பொருளாதார தத்துவத்தை புகுத்திய அடம்ஸ்மித்தின் 'தேசங்களின் செல்வம்', பொதுவுடமைத் தத்துவத்தை தந்த கார்ல்மாக்ஸின் 'மூலதனம்', உயிரின உருவாக்கத்தை விளக்கிய டார்வினின் 'பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு', மக்கள் தொகைப் பிரச்சனையை விளக்கிய மால்தசின் 'மக்கள் தொகைக் கோட்பாடு', மனித மனத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டிய சிக்மண்ட் பிராய்டின் 'மனித மன சிந்தனை', போன்ற மனிதனின் அறிவைத் தூண்டுகின்ற, சிந்திக்க செய்கின்ற, மனிதனையும் சமூகத்தையும் முன்னேற்றுகின்ற உயிர்ப்பூட்டும் நூல்கள்  எம்மிடம் மிகவும் குறைவே. சத்திய வாழ்க்கையை எடுத்தியம்பிய அரிச்சந்திரன் கதை, அதர்மத்துக்கும் தர்மத்துக்குமிடையிலான யுத்தத்தில் தர்மமே வெல்லும் என்பதை உணர்த்தும் பாரத இராமாயணக் கதைகள் இவ்வகைக்குள் உள்ளடக்கப்படக்கூடியவை. அதிலும் இந்த மூன்று அம்சங்களும் ஒருங்கு சேர அமைந்திருக்கும் அற்புத வாய்ப்பு ஒரு சில நூல்களுக்கே அமைந்து விடுகின்றது. ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

நூல்களின் இருப்பு
வீட்டு நூலகத்தைப் பராமரிக்கும் ஒவ்வொருவரும் அதற்கென நூல் வரவுப் பதிவேடு ஒன்றை வைத்திருத்தல் அவசியமானது. வீட்டு நூலகத்திற்கு நூல் வந்தடையும் கால ஒழுங்கில் இது 1,2,3--- என தொடரிலக்கத்தைப் பெறும். நூல் பெறப்பட்ட திகதி, நூலுக்கான வரவுப்பதிவெண், படைப்பாளர்; பெயர், நூலின் தலைப்பு, வெளியிடப்பட்ட இடம், வெளியீட்டாளர் பெயர், வெளியிடப்பட்ட ஆண்டு, பதிப்பு விபரம், நூல் பெற்றுக் கொள்ளப்பட்ட முறை, அன்பளிப்பாயின் நூலை வழங்கியவர் விபரம், நூலின் பக்க அளவு, விலை, மேலதிக குறிப்புகள் போன்ற விபரங்களை நூல் வரவுப் பதிவேடு கொண்டிருக்கும்;. இதற்கு ஒரு ஊசு கொப்பியே போதுமானது. இதன் இரட்டைப்பக்கங்களில் ஒரு பக்கத்தை நூல் வரவுப்பதிவெண், நூலாசிரியர் பெயர், நூலின் தலைப்பு ஆகிய விபரங்களுக்கும் அடுத்த பக்கத்தை ஏனைய விபரங்களுக்கும் ஒதுக்கலாம். இந்த இரட்டைப்பக்கங்களில் ஒரு நூலுக்கு ஒரு வரி என்ற அடிப்படையில் 30 நூல்கள் பதிவது கணக்கெடுப்பிற்கு இலகுவானது.  எக்காரணங் கொண்டும் ஒரு நூலுக்கு வழங்கப்படும் வரவுப்பதிவெண்;ணை இன்னோர் நூலுக்குப் பயன்படுத்தக்கூடாது. விலக்கப்படும் நூலுக்கான விபரம் மட்டும் வரவுப் பதிவேட்டின் குறிப்புப்;; பகுதியில் பதியப்பட வேண்டும். இதன் மூலம் ஓரு நூலகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இற்றை வரைக்கும் நூலகம் பெற்றுக் கொண்ட மொத்த நூல்களைக் கணக்கிடவும் நூலகத்தில் எந்த நூல்கள் அதிக பாவனையில் இருந்தன என்பதை மதிப்பிடவும், எவ்வளவு நூல்கள் பாவனை காரணமாக அழிந்தன என்பதை மதிப்பிடவும் இத்தகைய செயல்முறை உதவும்.

நூல்களின் ஒழுங்கமைப்பு
வீட்டு நூலகத்தின் அடுத்த முக்கிய அம்சம் அதன் ஒழுங்கமைப்பு. நூலகப் பகுப்பாக்கம் அறிவின் திறவுகோல் எனப்படுகின்றது. ஆவணங்களை அதற்குரிய  ஒழுங்கில் அடுக்கி வைக்கும் ஆற்றல் பெற்ற எவருமே அதன் அமைவிடத்தை இலகுவாக அறிந்திருப்பது மட்டுமன்றித் தேவைப்படும் போது எவ்வித நேரவிரயமுமின்றி அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதனால் நூலகப் பகுப்பாக்கமானது ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான மிகச் சிறந்த அடிப்படையாகக் கருதப்படுகின்றது. ஒத்த தன்மைகளின் அடிப்படையில் தர்க்க ரீதியிலான ஒழுங்கில் பொருட்களை, குறிப்பாக ஆவணங்களை அவற்றுக்குரிய சரியான இடத்தில் ஒழுங்குபடுத்தலே பகுப்பாக்கம் எனப்படுகிறது.
ஆரம்பத்தில் பத்து நூல்களுடன் வீட்டு நூலகத்தை ஆரம்பிக்கும் போது கூட இந்த ஒழுங்கமைப்பைக் கருத்தில் கொள்வது பயன்தரத்தக்கது.
ஏனெனில் தமிழ்ச்சமூகத்தின் நூலுருவாக்கத்தில் அதிக இடத்தை நிரப்புபவை இலக்கிய நூல்களும் சமயம் சம்பந்தப்பட்ட நூல்களும். வீட்டு நூலகம் வெறுமனே இலக்கிய சமய நூல்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுவிடுதல் கூடாது. சுயகற்றல் என்பது வெறும் கதைப்புத்தகங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதொன்றல்ல. வீட்டு நூலகத்தின் நூற்தொகுதியானது ஆரம்பத்தில் மேற்குறிப்பிட்ட துறைசார்ந்த நூல்களுடன் தொடங்கப்பட்டாலும் காலப்போக்கில் உலகிலுள்ள பாடத்துறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு நூலாவது இருக்குமாறு சமவிகித சேகரிப்புக் கொண்டதாக இருத்தல் அவசியமானது. அறிவுப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்துறைகளையும் வீட்டு நூலகத்தில் பரந்த பொருட்புலங்களின்கீழ் ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதலுக்கு இந்த ஒழுங்கமைப்பு உதவும். ஓவ்வொரு துறை சார்ந்த நூலுக்கும் ஒரு வகுப்பெண்ணை ஒதுக்குவதன் மூலம் இவற்றை எண்வரிசையில் ஒழுங்குபடுத்தலாம். உலகமெங்கும் நூல்களை ஒழுங்குபடுத்துவதற்கென பின்பற்றப்படும் தூயி தசமப் பகுப்புத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட வகுப்பெண்கள் வளையடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருக்கின்றன.

முதனிலை அறிவியல்கள் ( Preliminary Sciences) : அறிவு ஆக்கம் (001) நூல் அறிவியல்(002) கணினி அறிவியல் (004) நூல்விபரப்பட்டியல்கள் (010) நூலகவியல் (020), பொதுக் களஞ்சியங்கள்(030), நிகழ்வுத் தொகுப்புகள்(030), பொதுப் பருவ வெளியீடுகள்(050), நிறுவனங்கள்(060), ஊடகவியல்(070), பொதுக் கட்டுரைகள்(080) அரும்பொருளகவியல்(090) மக்கள் தொடர்பு(659.2) போன்ற பிரதான துறைகளும்; அவற்றின் உப துறைகளும்  இதில் உள்ளடங்கும்.
இயற்கை அறிவியல்கள் (Natural Sciences):  கணிதவியல்(510), வானவியல் (520), பௌதிகவியல்(530), இரசாயனவியல் (540), புவிச்சரிதவியல் (550), சமுத்திரவியல் (560) உயிரியல்(570), தாவரவியல் (580), விலங்கியல்(590) போன்றன இதில் உள்ளடங்கும்.
பிரயோக அறிவியல்கள் (Applied Sciences): மருத்துவம்(610) பொறியியல்(620) தொழினுட்பம்(620) விவசாயம்(630) மனைப் பொருளியல்(640) முகாமைத்துவம்(650) பொது நிர்வாகம்(350) பயன்படு கலைகள்(700) என்பன இதில் உள்ளடங்கும்.
சமூக அறிவியல்கள் (Social Sciences) : சமூகவியல்(301), அரசியல்(320), பொருளியல்(330);, சட்டவியல்(340) கல்வியியல்(370), புவியியல(910), வரலாறு(910), நாட்டாரியல்(398), வர்த்தகம்(380) ஆகியன இதில் உள்ளடங்கும்.
மானுட அறிவியல்கள் (Human Sciences): உளவியல்(150), நுண் கலைகள்(700), இலக்கியம்(800), தமிழ் இலக்கியம்(810), ஆங்கில இலக்கியம்(820), தமிழ்க்கவிதை(811), தமிழ்நாவல்(813), மொழி(400), சமயம்(200), இந்து சமயம்(230), கிறிஸ்தவ சமயம்(270) தத்துவம்(100), சோதிடம்(133.5), போன்றவை இதில் உள்ளடங்கும். நுண்கலைகளில் கட்டிடக்கலை(720), சிற்பக் கலை(730), சித்திரம்(740), ஓவியம்(750), ஒளிப்படக் கலை(770), திரைப்படக்கலை(793), வளையாட்டு(796), இசை(780), மட்பாண்டக் கலைகள்(738) போன்றன முக்கியமானவை.

இலக்கியம் என்ற தலைப்பில் உலக இலக்கியங்கள் அனைத்தும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு இலக்கியமும் கவிதை, நாடகம்,புனைகதை, சிறுகதை, கட்டுரை, கடிதம், சொற்பொழிவு ஆகிய உருவப் பிரிவுகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றது.

நூல்களின் பௌதிக தயாரிப்பு
வகுப்பெண்ணையும் ஆசிரியர் பெயரின் முதல் மூன்று எழுத்துக்களையும் நூலின் முதுகுப் புறத்தில் 1.25  நீளமான வட்ட வடிவமான அல்லது முட்டை வடிவமான லேபலில் ஒட்டுதல்,   நூலின் முன் அட்டைப் பகுதியில் உட்புறத்தில் இடது பக்க மேல் மூலையில் 3'ஒ2.5' அளவுள்ள தாளில் நூலகத்தின் பெயர்,  வகுப்பு எண், நூல் சேர்வு எண் போன்ற விபரங்கள் உள்ளடக்கப்பட்ட.  உரிமைப்பத்திரம் ஒட்டுதல்,  நூலகத்தின்  முகவரியும் இலட்சினையும் கொண்ட முத்திரையை ஒட்டுதல் என்பன இதில் உள்ளடங்கும். வீட்டு நூலகத்திலுள்ள இருப்புப் பதிவேடானது நூல்களை விடய ஒழுங்கில் ஒழுங்குபடுத்துவதில்லை. அதேசமயம் நூல் இறாக்கைகளில் ஒழுங்குபடுத்தப்படும் நூல்கள் விடய ஒழுங்கிலேயே ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த விடய ஒழுங்கிலுள்ள நூல்களை  இலகுவாக எடுக்க விரும்பின் நூல் வரவுப் பதிவேட்டிலுள்ள விபரங்களை 3 அங்குல அகலமும் 5 அங்குல  நீளமும் கொண்ட மட்டைகளில் எழுதி அதனை அகரவரிசையில் ஒழுங்குபடுத்தி பராமரிப்பின் தேவைப்படும் நூல்களை இலகுவாக எடுக்கலாம். இம்முறை பட்டியலாக்கம் என அழைக்கப்படுகிறது. வீட்டு நூலகத்தினர் தம்மைச் சுற்றியுள்ள சமூக உறுப்பினர்களுக்கு நூல்களை இரவல் கொடுக்க விரும்பின் அதற்கென நூலின் முன்பகுதியில் அல்லது கடைசிப் பகுதியில் உள்ள பறக்கும் தாளில் திகதித் தாள் ஒட்டுவதன் மூலம் நூலை இரவல் வழங்குவதற்குத் தயார்படுத்தலாம். மேற்கூறிய வேலைகள் பூர்த்தியானவுடன் நூல்கள் நூல் இறாக்கைகளில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

நூல்களின் ஆரோக்கியம்
நூல்களை வெறுமனே வாங்கி அலுமாரிகளின் அடுக்கிவிட்டால் மட்டும் போதாது. மனித உடலுக்கு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதோ நூல்களுக்கும் அதன் ஆரோக்கியம் முக்கியமானது. இன்றைய உலகின் பெரும்பாலான நூல்கள் காகிதத்தால் உருவானவை. மழை, வெப்பம், மனிதர்கள், மிருகங்கள், பூச்சி புழுக்கள் போன்;ற அனைத்தினாலும் வலிமையாகப் பாதிக்கப்படக்கூடியவை. நூல்களுக்கு ஏற்படும் நோய்களில் குறிப்பிடத்தக்கது இராமபாணம், கறையான், கரப்பான் பூச்சி போன்ற பேருயிரிகளினால் ஏற்படுவது. இவற்றைத் தடுப்பதற்கான இலகு வைத்திய முறைகளில் ஒன்று.
வசம்பு, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை ஆகியவை தனித்தனி இரு பங்குகளும் மிளகு, கராம்பு என்பன தனித்தனி ஒரு பங்கும் கலந்து இடித்துத் தூளாக்கிய பின்னர் கண்ணறைத் துணியொன்றில் ஒரு மேசைக் கரண்டி வீதம் வைத்து அதன் மேல் சூடம் சிறிதளவு வைத்துப் பொட்டலம் போன்று கட்டி நூல் இறாக்கை ஒன்றுக்கு ஒரு பொட்டலம் வீதம் நூல்களுக்குப் பின் பக்கம் வைத்து விடுதல் வேண்டும். இதனுடைய பாவனைக் காலம்  மூன்று தொடக்கம் ஆறு மாதங்கள் ஆகும். இதனைத் தொடர்ந்து பின்பற்றுதல் கண்டிப்பாகக் கூடாது. ஒரு மழைக்காலத்தின் பின்னர் இந்த முறையைக் கைக் கொள்ளலாம். வேப்பிலை, புகையிலை, புங்கமரம், நொச்சியிலை, போன்றவற்றை நிழலில் காய வைத்து இறாக்கைகளின் பின்புறம் வைக்கலாம். நூலுருவற்ற சாதனங்களான ஓலைச்சுவடிகள், தற்கால இலத்திரனியல் சாதனங்களுக்கு பின்வரும் முறைகளைக் கையாளலாம்.
ஒளிப்படங்களை அமிலத்தன்மையற்ற தாளுறைகளில் பாதுகாத்தல், செவிப்புலப்பதிவுகள் கோணலாவதைத் தடுப்பதற்கு வெப்பமான இடங்களிலிருந்து தூர வைத்தல், ஒலி நாடாக்களும் கிராமபோன் தட்டுக்களும் அதற்குரிய தாளுறைகளில் போடப்பட்டு நிலைக்குத்து வடிவில் கோவைப்படுத்தப்படல், காந்தப் பொருட்களுக்கருகில் இவற்றை வைப்பது தவிர்க்கப்படல், தொலைபேசி மணி காந்தப் புலங்களை உருவாக்குவதனால் வட்டுகளுக்கருகில் இவை வைக்கப்படுதலைத் தவிர்த்தல், வட்டுக்களை வளைத்தலோ துளை உள்ள இடத்தில் விரல்களால் தொடுதலோ தவிர்க்கப்படல், சேமிப்புப் பேழைகளில் சூரிய ஒளி படுதலைத் தவிர்த்தல், எண்ணெய் வகைகளோ, எக்ஸ்ரே கருவிகளோ வட்டுக்களின் பதிவுகளை அழித்துவிடும் என்பதால் அவற்றைத் தவிர்த்தல், கணினி வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு காலத்துக்குக் காலம் வைரஸ் அகற்றும் புதிய செய்நிரல்களை கொள்வனவு செய்தல் போன்றவற்றின் மூலம் நூலுருவற்ற சாதனங்களைப் பாதுகாக்கலாம்.

நூல்களின் பயன்பாடு

'குறிக்கோள் இலாது கெட்டேன்' என்றவாறு எதுவித நோக்குமில்லாது நூல்களை வாசிப்பதில் பயனில்லை. நோக்கத்தோடு வாசிக்கும்போது தான் எமக்கு வேண்டியவற்றை நூல் எங்களுக்குக் காட்டும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது புத்தகங்களுக்கும் பொருந்தும்' என்ற நாடறிந்த நாடகாசிரியர் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் மேற்கண்ட வரிகள் வாசிப்புக்கு நோக்கம் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படும் என்பது புத்தகங்களுக்கும் பொருந்தும்' என்ற நாடறிந்த நாடகாசிரியர் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் மேற்கண்ட வரிகள் வாசிப்புக்கு நோக்கம் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது.
'சில நூல்கள் ருசிக்கப்படவேண்டும். சில விழுங்கப்படவேண்டும். இன்னும் சில சப்பிமென்று சமிக்கச் செய்யப்பட வேண்டும். என்ற புகழ்பெற்ற தத்துவமேதை பிரான்சிஸ் பேகனின் மேற்கண்ட வரிகள் நூல்களை எப்படிப் படிப்பது என்ற அம்சத்தை மிக ஆழமாக கோடிட்டுக் காட்டுகின்றன.
வாசிப்பு அனுபவத்தை வார்த்தைகளில் வரைய முயற்சி செய்யலாம். வாசிக்கத் தொடங்குமுன்பு மனசுக்குள் ஒரு உலகம் இருக்கிறது. உயிரோடும் சுறுசுறுப்போடும் இயங்கும் புற உலகம் போல் இதுவும் இன்னொரு உலகம். மரபு, நம்பிக்கை, லட்சியங்களால் உருவாகும் உலகம். வாசிக்க வாசிக்க வாசிக்கப்படுகின்ற விடயம் மனசில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு கரைந்துகொண்டே இருக்கிறது. மன உலகத்துக்கும் வாசிப்புக்குமான உறவு இது. இந்த உறவு தான் வாசக அனுபவத்தை உன்னதமாக்கவோ அருவருப்பாக்கவோ செய்கிறது என்கிறார் தினமணி தமிழ்மணி இதழில் கட்டுரையாளர் பாவண்ணன்.

நூல்களின் பயன்பாடு என்பது மிக முக்கியமான அம்சம்.  தமிழ் அறிஞர்களின் வீடுகள் வீட்டு நூலகமாக மட்டுமன்றி சிலசமயம் நூற்கிடங்குகளாகவும் இருந்திருக்கின்றன. நூல்கள் நூல் இறாக்கைகளில் மட்டுமன்றி கதிரைகள், மேசைகள், திண்ணைகள் என்று காணுமிடமெங்கும் சிதறிக் கிடப்பதும் இவர்களின் வீடுகளுக்கு வரும் விருந்தினர்கள் சிலசமயம் இருப்பதற்கு இடமின்றித் தவிப்பதும் கண்கூடு. இத்தகைய வீட்டு நூலகங்களில் நூல்களின் பயன்பாடு பற்றி பேசுவதற்கு இடமில்லை. அதேசமயம் நூல் அலுமாரிகள் காட்சிப் பெட்டிகளாகக் கருதி வரவேற்பறையில் அதனை அழகாக அடுக்கி அதனை ஒரு தடவையாவது பயன்படுத்தாது பாதுகாக்கும் வீட்டு நூலகங்களும் எம்மிடையே கணிசமாக உண்டு என்பதையும் நாம் மறந்துவிடல் ஆகாது. இவற்றைப் பயன்படுத்துவது மட்டுமன்றி எப்படிப் பயன்படுத்துவது என்பதும் நாம் அறிந்திருக்கவேண்டியதொன்று.

'வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு'

தொகுப்பு
நூலக விழிப்புணர்வு நிறுவகம்
05-11-2012

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'


நடத்தைக் கோலங்கள்  4

தம்பையரின்ரை மூன்றாவது பெடிச்சிக்கு சுவிசிலை மாப்பிள்ளையாம். ஏழு லட்சம் சீதனம். இதைக் கேட்ட அதிர்ச்சியில் தலை விறைச்சுப் போச்சு. அதிர்ச்சிக்கு காரணம்!

வீட்டிலை ஆன வேளைக்கு தின்னச் சாப்பாடு இல்லை. நிவாரணத்தை மட்டும் நம்பின சீவியம். மனுஷனுக்கு உழைப்பெண்டு எதுவும் இல்லை. மூத்;த இரண்டு பெடிச்சிகளும்  ஊரிலை இருக்கேக்கையே மனுஷனுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் தான், தான் விரும்பியபடி கரை சேர்ந்து விட்டினம். இப்ப வெளிலை போறவளுக்குக் கீழை இன்னும் இரண்டு குமர் இருக்குது. நிலைமை இப்படி இருக்கேக்கை இதுகள் என்னவெண்டு ஏழு இலட்சம் புரட்டப் போகுதுகள்.

என்னெண்டு விசாரிச்சுக் கொண்டு போனால் மனுஷியின்ரை ஒன்றுவிட்ட சகோதரி முடிச்ச மாப்பிள்ளையின்ரை நாலு தம்பிகாரன்கள் வெளிநாட்டிலை இருக்கின்றாங்களாம். அவை தான் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து ஏழு லட்சமாக்கினவை. மனுஷி இப்ப பெட்டையை கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போயிருக்கு  வெளியிலை அனுப்புறதுக்கு.

அதுசரி ஒன்டுக்கும் வழியில்லாமல் இருக்கிறதுகளை நம்பி இவ்வளவு தொகையைக் கொடுக்க எப்படி சம்மதிச்சவை. அவவின்ரை 13 வயதுப் பெடியனை இரண்டு வருசத்தாலை வெளிநாட்டுக்கு அனுப்பி அவன் வட்டியுடன் கடனைக் கட்டுவான் என்ற ஒப்பந்தத்தின் பேரில் தான் இவ்வளவு தொகையும் வாங்கினதாம்.

இப்படியொரு துணிச்சல் யாருக்கு வரும்?. 'நகைநட்டு, காணி உறுதி மாதிரி இப்ப அடைவ வைக்க சுலபமான வழி இந்த இளம் ஆண்புரசுகள் போலை'.

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'



நடத்தைக் கோலங்கள் 3

பரமசிவத்தின் மனைவி பவளத்துக்கு இது நான்காவது பிரசவம். உறவுகளின் சுத்துமாத்துக் குணங்கள் பிள்ளைகளுக்கும் தொற்றிவிடக்கூடாது என்ற அதீத கவனத்தில் மனைவியின் வீட்டாரை மட்டுமன்றி தன்வீட்டாரையும் அண்டவிடாமல் சொந்தபந்தத்துக்கு எட்டவாக ஒரு வீடு கட்டி தனிக்குடித்தனம் வந்து இப்ப எட்டு வருசமாச்சு. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது மூத்தவள் ஆரபிதான். இந்தக் கார்த்திகையுடன் அவளுக்கு எட்டு வயது பூர்த்தியாகிறது. குதுர்கலம் பொங்கவேண்டிய அவளின் குழந்தமைப் பருவம் குழந்தைகளைப் பராமரிக்கும் துயர நிகழ்வாக மாறிவிட்டது. பிரசவத்தைக்கூட ஆள் வைத்துப் பராமரிப்பதில் நாட்டமில்லாத மனிசன் அவர்.

தேநீர் வைத்தல், தேங்காய் துருவுதல், காய்கறி நறுக்குதல் போன்ற துணை வேலைகள் மட்டுமன்றி தாய் குளிப்பதற்கு இலை குழை தேடிப் பிடுங்கிக்கொண்டு வருதல், தம்பி தங்கைகளின் ஆடைகளைத் துவைத்தல் போன்ற பெருவேலைகளையும் செய்துவிட்டுத்தான் பள்ளிக்கூடம் போகவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு.

பிள்ளை பெற்ற பெண் ஓடியாடித் திரிவது உடலுக்கு நோக்காடு என்று பரமசிவம் மட்டுமன்றி பவளமும் ஆழமாக நம்புபவள். அதனால் அவள் அதிகம் எழும்புவதில்லை. எனினும் சமையல் வேலைகளில் ஆலோசனை சொல்லும் பொருட்டு குசினியை அடுத்துள்ள அறையைத்தான் பிரசவத்தின் பின்னர் அவள் பயன்படுத்தினாள்.

அன்று மாலை நேரம். அப்பாவை இன்னும் காணவில்லை. அம்மா பசிக்குது என்ற அழுகையுடன் தம்பி வண்ணனும், தங்கை கீதாவும் அம்மாவை அரியண்டப்படுத்திக் கொண்டிருப்பதைப் பொறுக்காத ஆரபி,
'அம்மா நான் புட்டு அவிக்கிறன். நீங்கள் எப்படியென்று காட்டித் தாங்கோ' என்று தாயின் சம்மதம் கேட்காமலேயே களத்தில் இறங்கிவிட்டாள்.

அடுப்பில் தண்ணீர் சுட வைத்தாள் ஆரபி. அம்மாவின் ஆலோசனைப்படி ஐந்து பேருக்கு அளவான மாவை பாத்திரத்தில் போட்டுக் கொண்டுபோய் அம்மாவின் அருகில் வைத்தாள். நீர் கொதித்ததும் கைத்துணியைப் பயன்படுத்தி கேத்திலையும் கொண்டுபோய் அருகில் வைத்தாள். மாவிற்குள் அளவாக அம்மாவைக்கொண்டு சுடுநீர் விட்டு, புட்டு மா குழைத்தாகிவிட்டது. இப்போது அதனைக் கொத்த வேண்டும்.

நிலத்தில் அமர்ந்தபடி தனது இரு கால்களையும் அகலப் பரப்பி கால்களின் நடுவில் சுளகை வைத்து பேணிச் சுண்டைக் கவிட்டுப் பிடித்தபடி தனக்குத் தெரிந்தமாதிரி கொத்தத் தொடங்கினாள் ஆரபி. புட்டு கொத்துப்படுவதைவிட மிக அதிகமாக அவளது நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் வடிவதை கண்கள் கலங்க அந்தத் தாயுள்ளம் பார்த்துக் கொண்டிருந்தது.  குதுகலித்து விளையாட வேண்டிய இந்தப் பருவத்தில் இப்படி கடினப்படுகின்றேனே என்ற கவலை ஆரபியின் முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக தாய்மைக்குரிய பொறுப்பு இருந்தது. செய்யும் பணியில் நேசம் இருந்தது. தம்பி தங்கைகளுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற வேகமும் இருந்தது.

'பிள்ளை அம்மான்ரை துவாயால் நெற்றியைத் துடையுங்கோ', சொல்லிக்கொண்டே துண்டை பிள்ளையின் அருகில் எறிந்தாள் தாய். துவாயால் தனது நெற்றியைத் துடைத்துக்கொண்டே தாயை பெருமிதம் பொங்கப் பார்த்தாள் ஆரபி. பெரிய பொறுப்புள்ள பணியில் தான் ஈடுபடுகின்றேன் என்ற மகிழ்வு அவள் கண்களில். பணி மீண்டும் தொடர்ந்தது. நெற்றி வியர்வை ஓடுமளவிற்கு புட்டு கொத்துப்படவில்லை. குழந்தையை உற்றுப் பார்த்தாள் தாய். குழந்தை முழுதாகக் களைத்துவிட்டாள். ஆனாலும் கை கொத்துவதை நிறுத்தவில்லை. கைகளில் தளர்ச்சி மட்டும் தெரிந்தது.; வாயிலிருந்து வாய்நீர் ஒழுகிப் புட்டின்மீது விழுவதைக்கூட உணர முடியாதளவிற்கு மகள் களைத்துவிட்டதும் தெரிந்தது.

' அம்மா.. குஞ்சு.... கொத்தினது காணும். தேங்காய்பூவைக் கலந்து  நீத்துப் பெட்டியிலை புட்டை வைத்து அடுப்பில வையுங்கோ'.

'என்ர பிள்ளையின்ரை வாய்நீர் அம்மன் கோவில் தீர்த்தத்தை விட மேல்' மனதிற்குள்  சொல்லிக் கொண்டே கலங்கிய கண்களை மகளுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டாள் பவளம்.

"யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'

நடத்தைக் கோலங்கள் 2

பக்கத்து வீட்டுப் பூமணியின் மூன்று வயது மாறனுக்கு கொஞ்ச நாளாய் உடல், உள நிலையில் கோளாறு. இரவில் தூக்கம் அடியோடு இல்லை. சிரித்து விளையாடிக்கொண்டு இருப்பவன் திடீரென வீரிட்டுக் கத்துவான். பயத்தில் தேகம் பதறும். எதைக்கண்டு இப்படிப் பதறுகிறான் என்று எல்லோருக்கும் ஒரே கவலை.

'அம்புலி' யைக் காட்டி சோறு தீத்தும் தந்திரம் இவனிடம் மட்டும் நடக்கவில்லை. நிலவைக் கண்டாலே வீரிட்டுக் கத்தத் தொடங்குவான். அதுவும் வளர்பிறை தொடங்கிவிட்டால் இது ஒரு பிரச்சனை. அன்பாகச் சொல்லி அரவணைத்துக் கேட்டும் எதுவுமே விளங்கவில்லை.கடைசியில் மிரட்டியும் தூங்க வைக்க முயற்சித்தாகிவிட்டது.

நடு இரவு 'அம்மா யன்னலை மூடுங்கோ' பயத்தில் குளறிய குரல். யன்னல் ஊடாக பூரண நிலவு ஒளி உமிழ்ந்து கொண்டிருந்ததை பார்த்த பூமணிக்கு நிலைமை விளங்க யன்னலை மூடிவிட்டு குழந்தையை அணைத்துக் கொண்டவள் நிலா நிலா ஓடி வா எனக் குதூகலிக்கும் குழந்தை இப்படி அலறக் காரணம் என்ன? என்பது புரிய மறுக்க யோசனையுடன் கிடந்தாள். சில நிமிடம் கழிந்த பின்
'அம்மா நாளைக்கும் இப்படி பரா லைற் வருமே' -  மெல்ல காதில் கிசுகிசுத்தான் குழந்தை.

பரா லைற் அடிக்குது ஆமி வரப்போறான் என்று அலறித்துடித்து இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் பூமணியும் அவள் மகன் மாறனும் அடங்குவர்.


யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்

நடத்தைக் கோலங்கள் 1

'அம்மா தம்பி எனக்கு விஸ்கற் தரமாட்டானாம்' இது 8 வயது குமணனின் ஏக்கம் தொனிக்கும் குரல்.

'அவற்றை படிப்பின்ரை வள்ளல்லை அவருக்கு விஸ்கற்'. 'தம்பி முதலாம் பிள்ளை. அதுதான் வாங்கிக் கொடுத்தது' ' நீ முதலாம் பிள்ளையாய் வந்தால் உனக்கும் வாங்கித்தரலாம்'. இது தாய் மாதவியின் குரல்.

பிஸ்கற் மட்டுமல்ல வீட்டில் சமையல், விருப்பமான இனிப்புப் பண்டங்கள் , வெளியில் உலாத்து எல்லாமே இளையவன் ரமணன் விருப்பப்படிதான். இத்தனை செல்வாக்கும் அவனுக்கு இருக்கக் காரணம் வகுப்பில் முதலாம் பிள்ளையாக இருத்தல் என்ற தாயின் அபிலாசையை நிறைவேற்றியமைதான்.

திறமைக்கு அதிக கவனம் கொடுத்த அந்தத் தாய்மை பகிர்ந்துண்ணும் பழக்கத்தை மட்டும் தனது பிள்ளைக்கு கற்றுக் கொடுக்க மறந்தது ஏன்? அன்பையும் மனித நேயத்தையும் வளர்க்க வேண்டிய தாய்மை அந்தஸ்து எனும் போர்வைக்குள் ஏன் முடங்க வேண்டும்?.

எனக்குத் தா என்று அழுது அடம்பிடித்து தனக்குரியதை மூத்தவன் பெற்றிருந்தால் இங்கு கலங்க வேண்டிய தேவை இல்லை. அல்லது குழந்தைமைக் குணங்களில் ஏதோ ஒன்றாவது அவனிடம் இருந்தாலும் வருந்த வேண்டியதில்லை. ஆனால் அந்த முகம் என்ன சொல்கிறது?.

ஆழமான அமைதியும் ஏக்கமும் விரவிக் கிடக்கும் அந்தத் தளிர் அப்படி ஒன்றும் மொக்கன் இல்லை. வகுப்பில் பத்துக்குள் வருவான். பள்ளிக்கூடத்தில் போடும் புள்ளிகள் திறமையை நிர்ணயிக்க முடியுமா?.

வெரித்தாஸ், பி.பி.சி என்றால் எங்கிருந்தாலும் ரேடியோ முன்வந்து செய்தி கேட்பவன்.
மை முடிந்த ரெனோல்ட் பேனையில் ' ஏவுகணை' விடத் தெரிந்தவன்.
யார் எது கொடுத்தாலும் தம்பிக்கு கொடுத்து தின்பவன்.
விழுந்து அடிபட்டு அழும் பக்கத்து வீட்டுச் சிறுவனை சமாதானப்படுத்தி சிரிக்க வைப்பவன்.
விளையாட்டு, பேச்சு என்று எல்லாவற்றிலும் முன்னுக்கு நிற்பவன் மொக்கன் என்றா அந்தத் தாய்மை நினைக்கிறது. தனது அலுவலக நண்பர்கள் முன் பெருமையடித்துக் கொள்வதற்கு அந்தக் குணங்களை விடவும் ' முதல் இடம்' என்ற முத்திரை அவசியமாய்ப் போய்விட்டதா?.

'அறிவாயறி'

'அறிவாயறி'


1. மனிதன்  மனம்  
2. குடும்பம்  வாழ்க்கை 
3. பெற்றோர்  குழந்தைகள்
4. இலட்சியம்  வெற்றி
5. உழைப்பு  மதிப்பு 
6. எண்ணங்கள்  செயல்கள் 
      7. உரையாடல்  அனுபவங்கள் 
8. அறிவு  அறியாமை 
9. விவேகம்  திறமை  
10. நூல்கள்   வாசிப்பு  
11. நூலகம்  சிந்தனைகள்                                                     
12. ஆசிரியர்  கற்பித்தல் 
13. கல்வி  கற்றல் 
14. குழந்தைக்கல்வி  சமூகமேம்பாடு


மனிதன்

தனக்குத் தெரிந்தவற்றைப் பற்றி மட்டுமே மனிதன் பேசுவானாகில் என்றும் உலகில் முழு அமைதி நிலவும்.
-பேர்னாட் ஷா- 

உதவிகளாலும் வசதிகளாலும் ஒருவன் மனிதனாகி விடுவதில்லை. இடையூறுகளும் துன்பங்களுமே அவனை மனிதனாக்குகின்றன.
-மாத்தியூஸ்-

மனிதன் செய்யும் கெட்ட காரியங்கள் அவனுடன் இறக்கின்றன. அவன் செய்யும் நல்ல காரியங்கள் அவன் இறந்தபின்னரும் வாழ்கின்றன.
-சேக்ஸ்பியர்-

முதலில் உண்மையாக நடந்த நிகழ்ச்சிகளை திரட்டுங்கள். பின்னர் உங்கள் விருப்பப்படி அதைத் திரித்துக் கூறுங்கள.
-மார்க் ட்வெயின்-

எவ்வளவு பெருமை வாய்ந்ததாயினும் சரி, வீரச் செயலானாலும் சரி, துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் திறனே மனிதனின் உயர் குணத்திற்குச் சிறந்த சோதனை.
-சேர் ஜோன் லப்பார்க்-

மிகச் சிக்கலான உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமையும் எளிய உண்மைகளை மறந்து விடுவதுமே ஒரு மனிதனிடமுள்ள இரண்டு குறைகள்
-ரெபேக்கா பெஸ்ட்-

உங்களைச் சுற்றிப் பாருங்கள். உலகம் தான் உங்களை உருவாக்குகிறது,  உடைக்கிறது, ஒட்டி  வைக்கிறது, தள்ளிவிடுகிறது, தட்டிக்  கொடுக்கிறது.
-ருத்ரன்-

மனம்

மனித மனமே எமது ஆதார வளம.;
-ஜோன் எவ். கென்னடி(1917-63) 35வது அமெரிக்க -அதிபர்-

மனிதனும் பிரபஞ்சமும் தனித்தும் இணைந்தும் இயங்க வேண்டும். ஒரு பெரிய கச்சேரி போல. இதில் தனித்துவமும் தனிமனித சுதந்திரமும் மேலோங்கி நிற்குமானால் நாம் சூழ்நிலையிலிருந்து அந்நியப்படுத்துவோம்.
-உளவியலாளர் எஸ். உதயமூர்த்தி-

உடலுக்கு உறுதி தருவது உடலுழைப்பு. மனதிற்கு உறுதி தருவது துன்பங்களும் இடையூறுகளும்.
-செனேக்கா-

வலுவான உடலில்தான் திடமான மனம் இருக்க முடியும்.
-ரூசோ-

சீரிய உள்ளம் கருத்துக்களை விவாதிக்கிறது. சாதாரண உள்ளம் நிகழ்ச்சிகளை விவாதிக்கிறது. வெறும் உள்ளம் மற்றவர்களைப் பற்றி விவாதிக்கிறது.
-யாரோ-

சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஒரு மனிதனை உருவாக்குவதில்லை. உள்ளுக்குள்ளேயே இப்படிப்பட்ட மனிதன்தான் இருக்கின்றான் என்பதை அவனுக்கே காட்டிக் கொடுக்கிறது.
-ஜேம்ஸ் அலன்-
எமது மனமே எமது வாழ்வு.
-புத்தர்-

மனம் ஒருங்கிணைந்து செயற்படவேண்டுமென்பதே வாழ்க்கை சொல்லுவது. மனம் ஒருங்கிணைந்து செயற்பட்டால் எதன்மீதும் கவனத்தைச் செலுத்தலாம்.
-வில்லியம் ஜேம்ஸ்-

குடும்பம்

மனங்கள் ஒருவருடன் மற்றொருவர் உறவாடும் இடம் குடும்பம்.
-புத்தர்-

தந்தைமார் பார்க்கப்படுவதாகவோ கேள்விப்படுவதாகவோ இருக்கக் கூடாது என்பதே குடும்ப வாழ்வின் சரியான அடிப்படை.
-ஒஸ்கார் வைல்ட்-

இயற்கையின் மிகப் பெரும் உருவாக்கம் குடும்பம்.
-அமெரிக்க தத்துவவியலாளர் ஜோர்ஜ் சந்தாயனா-

எண்ணத்தினால், பேச்சால், செயலால் இறக்கும்வரை ஒருவர் பாதையில் ஒருவர் குறுக்கிடாமையும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமையுமே கணவன் மனைவியின்; முழுமுதற் கடமையாகும்.
-மனுதர்ம சாத்திரம்

மகிழ்ச்சியான குடும்பம் சொர்க்கத்தின் தொடக்கம்.
-ஜோன் பௌரிங்-

மதம், குடும்பம், சொத்து ஆகிய மூன்றுமே மனிதனின் மூன்று வலிமையான இயல்புணர்ச்சிகள்.
-டீன் இஸ்கே-

மகிழ்ச்சியான குடும்பங்களின் ஒன்றில் ஒன்று ஒத்ததன்மையுடையதாக இருக்கின்றன. மகிழ்ச்சியற்ற குடும்பங்களிள் மகிழ்ச்சியற்றதன்மையோ அதனதன் வழியில் வௌ;வேறுபட்டதாக உள்ளன.
-லியோ ரோல்ஸ்ரோய்-

ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதைவிட ஒரு சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பது எளிது
                        -யப்பானியப் பழமொழி-
வாழ்க்கை

வாழ்க்கை மிகக் குறுகியது. நமது பொறுப்பற்ற தன்மையால் அதை இன்னும் மிக மிகக் குறுகியதாக ஆக்கிக் கொள்கின்றோம்.
-விக்டர் ஹியூகோ-

அன்பின் தூண்டலும் அறிவின் வழிகாட்டலும் உள்ளதே நல்ல வாழ்க்கை.
-பெர்ட்ரன்ட்; ரசல்ஸ்-

நமது வாழ்க்கை வெற்றி பெறுவதும் தோல்வி காண்பதும் நம்முடைய எண்ணங்களிலும் செயல்களிலும் தான் இருக்கின்றன.
-ஜேம்ஸ்அலன்-

உங்கள் பேச்சு உங்கள் அன்பை வெளிப்படுத்தும். உங்கள் அன்பு உங்கள் நடத்தையை வெளிப்படுத்தும். உங்கள் நடத்தையே உங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்தும்.
-சோக்கிரட்டீஸ்-

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம். அதை நழுவ விடாதீர்கள்! வாழ்க்கை ஒரு பயணம். அதைச் சென்று முடியுங்கள்! வாழ்க்கை ஒரு விடுகதை. அதை விடுவியுங்கள்!
வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் ஈடுபடுங்கள்!
வாழ்க்கை ஒரு போராட்டம். அதை வென்று காட்டுங்கள்! வாழ்க்கை ஒரு வெகுமதி. அதை ஏற்றுக் கொள்ளுங்கள்! வாழ்க்கை ஒரு போட்டி. அதில் வெற்றி பெறுங்கள்!
வாழ்க்கை ஒரு கலை. அதை அழகுபடுத்துங்கள்!
வாழ்க்கை ஒரு வேதனை. அதைத் தாங்குங்கள்!
வாழ்க்கை ஒரு சவால். அதை எதிர் கொள்ளுங்கள்! வாழ்க்கை ஒரு சோகம். அதற்கு மனந் தளராதீர்கள்! வாழ்க்கை ஒரு பிரச்சனை. அதற்குத் தீர்வு காணுங்கள்!
-யாரோ-


பெற்றோர்

பெற்றோர் குழந்தைகளுக்குத் தமது அனுபவங்களையும் நல்ல நினைவாற்றல்களையும்  கடனாக வழங்குகின்றனர். பிள்ளைகளோ பெற்றோருக்கு அழிக்கமுடியாத சிரஞ்சீவித்தனத்தை விட்டுச் செல்கின்றனர்.
-ஜோர்ஜ் சந்தாயனா-

நாம் பெற்றோராக மாறும் வரைக்கும் எமது பெற்றோரின் அன்பை நாம் உணருவதில்லை
-ஹென்றி வாட் பீச்சர்-

உங்கள் குழந்தைகள் உங்களைப் போலவே வருவார்கள். எனவே அவர்கள் எப்படி வரவேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அப்படியே நீங்கள் இருங்கள்.
-பி. டேவிற்-

பெற்றோரின் அன்பளிப்புகளை விட பெற்றோரின் அருகாமையே குழந்தைகளுக்கு அவசியம்
-ஜெசி ஜக்ஸன்-

எனது பெற்றோர்கள் வறியவர்களுமல்ல நேர்மையாளரும் அல்ல.
-மார்க் டுவெயின்-

குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால் மட்டும் ஒருவர் தாயாகிவிட முடியாது.
-ஜோன் ஏ. செட்-

தமது குழந்தைகளை மன்னிக்காத பெற்றோர் மனித இயல்பற்றவர் போன்று தமது குழந்தைகளை தொடர்ந்து மன்னிக்கும் பெற்றோரின் குழந்தைகளும் மனித இயல்பற்றவரே.
 -மக் லூக்லின்-


குழந்தைகள்

குழந்தை மனிதனின் தந்தை.
-வில்லியம் வேர்ட்ஸ்வேத்-

பெற்றோர்களின் ஒவ்வொரு வார்த்தையும் செயலுமே குழந்தையின் குணநலன்களை உருவாக்குகிறது. அவையே அந்தக் குழந்தை பின்னாளில் சமுதாயத்தில் எப்படி இணைந்து செயற்படும் என்பதை நிர்ணயிக்கிறது.
-டேவிற் வில்கர்சன்-

விடியல் பொழுது நாளைக் காண்பிப்பது போல் குழந்தைப்பருவம் மனிதனைக் காண்பிக்கிறது.
-ஜோன் மில்ரன்-

குழந்தைகள் பெரியோர்கள் சொல்வதை சரியாகக் கவனிக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் செய்வதை அப்படியே செய்து காட்டுவதில் தவற மாட்டார்கள்
-ஜேம்ஸ் போல்ட்வின்-

'குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள் அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை'
-தலைசிறந்த கல்வியாளர் பெஸ்டலோசி-

குழந்தைகள் பெற்றோரில் அன்பு செலுத்துவதில் ஆரம்பிக்கின்றனர்;. வயது வளர அவர்களை மதிப்பிடுகின்றார்கள். சிலசமயம் மன்னிக்கின்றார்கள்.
                            -ஒஸ்கார் வைல்ட்-

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய்.
-திருவள்ளுவர்-


இலட்சியம்

ஒரு மனிதனின் இலட்சியம் என்னவென்று தெரிந்து கொண்டால்போதும் அதைக் கொண்டே அவனைத் தெரிந்து கொள்ளலாம்.
-ஹோம்ஸ்-

இலட்சியமில்லாத வாழ்க்கை எண்ணெய் இல்லாத விளக்கு.
-யோகி வேமனா-

நிமிடத்துக்கு நிமிடம் தோன்றி மறைவது ஆசை. சிரமத்தைக் கண்டவுடன் காணாமல்போவது விருப்பம். உடல் பொருள் ஆவியால் காத்து வளர்க்கப்படுவது இலட்சியம்.
-ராக்ஃபெல்லர்-

வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கடவுள் உங்களுக்களித்த உடல் வலிமை மனவலிமையுடன் கடுமையாக உழையுங்கள்.

-தோமஸ் கார்லைல்-

உயர்ந்த இலட்சியங்கள் உயர்ந்த பண்புடையவர்களை உருவாக்குகின்றன. சிறந்த குறிக்கோள்கள் சிறந்த உள்ளங்களை வெளிக்கொண்டுவருகின்றன.

-ட்ரைடன் எட்வேர்ட்ஸ்-

உங்கள் குறிக்கோளில் வெற்றி பெறவேண்டுமெனில் உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறி வைத்து அதே சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.
-அப்துல்கலாம்-


வெற்றி

ஒரு கருத்தை எடுத்துக் கொள்க! அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்குக! அதையே கனவு காண்க! அந்த ஒரு கருத்தை ஒட்டியே வாழ்ந்து வருக! மூளை, தசைகள், நரம்புகள், நாடிகள் முதலிய ஒவ்வொரு பகுதியிலும் அந்த ஒரு கருத்தே நிறைந்து நிலவட்டும். இந்த நிலையில் மற்றக் கருத்துகளை தவிர்த்து விடுக! வெற்றிக்கு வழி இதுதான்.
 -விவேகானந்தர்;;-

வெற்றியின் திறவுகோல் ஒருமுக சிந்தனை.
-யாரோ-

வெற்றியின் முதல் இரகசியம் தன்னம்பிக்கை.
-எமர்சன்-

வெற்றிக்குப் பல தந்தையர். தோல்வியோ ஒரு அநாதை.

-ஜோன் எவ் கென்னடி-

எல்லையற்ற பொறுமை, தூய்மை, விடாமுயற்சி வெற்றியின் ரகசியம்.
-விவேகானந்தர்-

தோல்விச் சந்திக்கும் துணிச்சல் வெற்றிக்கு உண்டு.
-ரூசோ-

வெற்றியைப் போல் வெற்றி பெறுவது எதுவுமே இல்லை

-அலெக்சாண்டர் டுமாஸ்-

வெற்றிகளால் மட்டுமே நாம் உயர்ந்துவிட முடியாது. தோல்விகளாலும் நாம் முன்னேறுவோம் என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது.
-அப்துல்கலாம்-

உழைப்பு

கடின உழைப்பு ஒன்றுதான் ஒரு மனிதன் செய்யும் வேலைக்குச் சிறந்த மூலதனமாகும்.
சீ.எம். ஸ்வாப் (ளுஉhறயடி)

உழைப்பின் பின்னரான ஓய்வைவிட வேறெந்த ஓய்வும் இனிமையானதல்ல.    -அன்ரன் செக்கோவ்-

சிலர் உழைப்பதற்கு விரும்புகின்றார்கள். மற்றவர்கள் அவர்கள் உழைப்பதை விரும்புகின்றார்கள்
-ரொபேர்ட் பாஸ்ட்

வழிபடும் கரங்களைவிட உழைக்கும் கரங்கள் உயர்வானவை.
-ஸராதுஸ்ட்ரா-

கற்றறிந்தவர்களாக இருக்க வேண்டுமென அனைவரும் ஆசைப்படுகின்றனர். ஆனால் அதற்குரிய உழைப்பைக் கொடுக்க மட்டும் எவரும் விரும்புவதில்லை.
-ஜூவெனல்-

உலகம் தோன்றியதிலிருந்து உண்மையான உழைப்பு எதுவும் விரயமானதில்லை. அதேபோல் உலகம் தோன்றியதிலிருந்து உண்மையான வாழ்க்கை தோல்வியடைந்ததுமில்லை. -எமர்ஸன்-

எந்த உழைப்புக்கும் எதிர்காலம் இல்லை. அந்த உழைப்பை மேற்கொள்பவனுக்கே எதிர்காலம்
-ஜி.டபிள்யூ கிரேன்-

தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகின்றவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்பணர்வு.
-அப்துல்கலாம்-

மதிப்பு

பெருமையின் மூன்று அறிகுறிகள். தோற்றத்தில் எளிமை, செயலில் மனிதத்தன்மை, வெற்றியில் வெற்றியின்மை.
-பிஸ்மார்க்-

எவ்வளவு அதிகமான விடயங்களுக்கு ஒருவன் வெட்கப்படுகின்றானோ அவ்வளவிற்குப் பெருமதிப்புப் பெறுகின்றான்.
-பெர்னாட் ஷா-

நீ மதிக்கும் மனிதனைக் காண்பி. நீ எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொள்வேன்.
-தோமஸ் கார்லைல்-

நல்ல தன்மை, உண்மை, நல்லறிவு, நற்பிறப்பு என்பனவே மதிப்பையும் பாராட்டையும் பெறுவதற்குத் தகுதியான தன்மைகளின் முதன்மையான ஆக்கக்கூறுகள்.
-ஜோசப் எடிசன்-

நட்பு அன்பை விட நன்மதிப்பிற்குப் பெருமை அதிகம்.
-ரோச் ஃபோகால்ட்-

யாரோ ஒருவன் எச்சில் துப்பியதால் நயாகராவின் கம்பீரம் குறைந்துவிடப் போவதில்லை. யாரோ ஒருவன் அவமரியாதை செய்ததனால் உங்கள் மதிப்பு குறைந்துவிடப் போவதில்லை.
-சுவாமி சின்மயானந்தா-

அடிமையாகட்டும் ஆண்டவனாகட்டும். உழைப்பும் உள்ள உரமும் உள்ளவன்தான் உயர்விடம் வந்து சேர்வான்

-மௌலானா ரூமி-

எண்ணங்கள் 

பொதுமக்கள் கருத்தைக் கண்டு பலவீனர்கள் பயப்படுகின்றார்கள். முட்டாள்கள் அதனுடன் மோதுகின்றார்கள். அறிவாளிகள் அதனை எடைபோடுகின்றார்கள். சாமர்த்தியசாலிகளோ அதை உருவாக்குகின்றார்கள்.
-ரோலண்ட் பெண்மணி-

மனிதன் எண்ணங்களின் உருவகம். எதை எண்ணுகின்றானோ அதுவாகவே ஆகின்றான்.
-மகாத்மாகாந்தி-

சிந்திக்காமல் கற்பது வெட்டிவேலை. கற்காமல் சிந்திப்பது மிக ஆபத்தான வேலை
-கன்பூசியஸ்-

சிந்தனைகள் மூச்சுவிட, வார்த்தைகள் எரிகின்றன.
-தோமஸ் கிரே-

உலகத்து மக்கள் எத்தனையோ எண்ணுகிறார்கள், சொல்கிறார்கள், செய்கிறார்கள். அதில் பெரும்பகுதி கவனிக்கப்படாமல் போகின்றது. கவனித்தவைகளில் ஒருபகுதி நினைவில் நிற்கின்றது. நினைவில் நிற்பவைகளில் ஒரு பகுதி பதிந்து வைக்கப்படுகிறது. பதிந்து வைத்தவைகளில் ஒரு பகுதி எஞ்சியிருக்கிறது. எஞ்சியுள்ளவற்றில் ஒரு பகுதியே ஆராய்ச்சியாளருக்குத் தெரிகின்றது. தெரிந்தவைகளில் ஒரு பகுதியே முறையாக எடுத்துச் செல்லப்படுகின்றது. அதாவது நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள்; மிகமிகச் சுருக்கமானவை
-லூயி கோட்சாக்-

உயர்ந்த எண்ணங்களைப் பேணி வளருங்கள். நீங்கள் உங்கள் எண்ணத்தைவிட உயர்நிலைக்கு செல்லமாட்டிPர்கள்
-பெஞ்சமின் டிஸ்ரேலி-

உரையாடல்

மௌனமும் தன்னடக்கமும் உரையாடற் கலையின் மிகச் சிறந்த தன்மைகள்.
-மாண்டெயின்-

கல்வி நற்பண்பாளர்களை உருவாக்கிறது. உரையாடல் முழுமையாக்குகிறது.
-தோமஸ் புல்லர-;

என்னுடைய சிறந்த மொழியாற்றலின் காரணமாக  நான் ஒன்றுமே பேசவில்லை.
-சார்ள்ஸ் பெஞ்லே-

ஒரு மேதையுடன் நேருக்கு நேர் உரையாடுவது ஒரு மாதம் முழுவதும் படிக்கும் நூல்களுக்குச் சமம்.
-சீனப் பழமொழி-

பேச்சு உடல். சிந்தனை ஆன்மா. உகந்த செயலே சொற்பொழிவின் உயிர்.
                          -சார்ள்ஸ் சிம்மன்ஸ்-

குறைவாகச் சிந்திக்கின்றவனே அதிகமாகப் பேசுகின்றான்.
-மான்டெங்யூ-

விவாதம் அறிவுப் பரிமாற்றம். வாதம் அறியாமைப் பரிமாற்றம்.
- யாரோ-
மற்றவர்களைப் பற்றி உங்களிடம் பேசுபவன் வம்பளப்பவன்;. தன்னைப் பற்றி உங்களிடம் பேசுபவன் அலட்டல்காரன். உங்களைப் பற்றி உங்களிடம் பேசுபவன் கலைஞன்.
-ஜோன் மார்லி-

ஒருவர் பேசும் போது குறுக்கிடுவதைப் போல் முரட்டுத்தனம் வேறெதுவும் கிடையாது.
-ஜோன் லாக்-

செயல்கள்
சரியாகச் செய்வதைவிடச் சரியானதைச் செய்வதே முக்கியம்.
-பீற்றர் டக்கர்-

நாம் நமது செயல்களைத் தீர்மானிப்பது போன்று நமது செயல்களே நம்மைத் தீர்மானிக்கின்றன.
-ஜோர்ஜ் எலியட்-

நான் என்ன செய்யவேண்டும் என்பதுதான் எனது கவலை. என்னைப் பற்றி பிறர் என்ன நினைக்கின்றார்கள் என்பது என் கவலையல்ல.
-ரோல்ஸ்ரோய்-

செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுக்காது. ஆனால் செயல் இல்லாவிடின் மகிழ்ச்சியே கிடையாது.
-பிரித்தானிப் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி-

பொறுப்புக்களை ஏற்கும் தயார் நிலையிலிருந்து செயல் பிறக்கிறதேயன்றி வெறும் சிந்தனையால் மட்டும் செயல் பிறப்பதில்லை.
-யாரோ-
சரியென்று கண்டுகொண்டதன் பின்னர் அதனைச் செய்யாததன் காரணம் துணிவோ அல்லது செயல்முறைக் கொள்கையோ இல்லாதது தான்.
-கன்பூசியஸ்-

மனிதர்களின் செயல்கள் ஒரு நூலின் பொருளடக்கம் போன்றது. அவை மிகச்சிறந்தவைதானா என்பதைக் காட்டிவிடும்.
-யாரோ-

நன்றாகச் சிந்திப்பது புத்திசாலித்தனம். நன்றாகத் திட்டமிடுவது அதைவிடப் புத்திசாலித்தனம். நன்றாகச் செய்வது அதிபுத்திசாலித்தனம்
-பெர்சியப் பழமொழி-

அனுபவங்கள்

அறிவின் ஒரேயொரு மூலம் அனுபவமே.
-அல்பேர்ட் ஐன்ஸ்ரீன்-

ஞானம் அனுபவங்களிலிருந்து கிடைக்கிறது. அனுபவங்களோ நாம் செய்யும் தவறுகளிலிருந்து கிடைக்கிறது.
-எழுத்தாளர் பார்த்தசாரதி-

ஒவ்வொரு மனிதனும் தான் செய்துவிட்ட தவறுக்குத் தரும் பெயர்தான் அனுபவம்.
-ஆஸ்கார் வைல்ட்-

அனுபவத்தைக் கொண்டு மட்டுமல்ல அனுபவத்திற்கான திறமையைக் கொண்டே மனிதர்கள் அறிவாளியாகின்றார்கள்.
-ஜோர்ஜ் பேர்னார்ட் ஷா-

அனுபவம் என்னும் சிறந்த ஆசிரியன் எனக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுத்திருக்க்pறான்.
    -பிளினி-

உழைப்பின் மூலதனம் அனுபவம்.  -ஆங்கிலப் பழமொழி-

அறிவு பெறுவதற்குப் படிப்பு அவசியம். ஞானம் பெறுவதற்கு அவதானிப்பு அவசியம்.
-மரிலின் வொஸ் சவன்ற்-


ஒருவனுக்கு என்ன நேர்கின்றது என்பது அனுபவமல்ல. ஏதாவது நேரிடும்போது என்ன செய்கிறான் என்பதே அனுபவம்.
-ஆல்டஸ் ஹக்ஸ்லி-

அறிவு

அறிவே இன்பம். அறிவே அணிகலன். அறிவே ஆற்றல்
-பிரான்சிஸ் பேகன்-

அறிவைத் தேடுங்கள். அது நம்மை ஆற்றலுடையவனாக ஆக்குகிறது. அறிவு தனிமையில் நமது தோழன். இன்பத்திற்கு வழிகாட்டி. துன்பத்திலோ ஆதரவாளன். நண்பர்களுக்கிடையில் அது நமது நல்லாபரணம். பகைவர்களிடமிருந்து நம்மைக் காக்கும் கேடயம்.
-விநோபா-

அறம் இன்றிப் பெறும் அறிவு அழிவுக்கு வழி கோலும். பண்பின்றிப் பெறும் அறிவு பலனற்றுப் போகும்.
-குழுடுயு-

அறிவு என்பது இருவகை. எமக்கு தெரிந்த அறிவு ஒருவகை. எமக்கு தெரியாததை எங்கே பெறலாம் என்ற அறிவு  இன்னொருவகை.
-சாமுவேல் ஜோன்சன்-

தன்னை அறிதல் என்பதே  அனைத்து அறிவினதும் தாய்;. எனவே என்னை அறிதலையும், அதனை முழுமையாக அறிதலையும், நுணுக்கமாக அறிதலையும், அதன் பண்புகளை அறிதலையும், அதனை அணுவணுவாக அறிதலையும் அது நெருக்கிறது.
-கலீல் ஜிப்ரான்-

அறிவு என்பது உங்களுக்குத் தெரிந்த ஒன்றை உங்களுக்கு தெரியும் என்றும் உங்களுக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என்றும் சொல்வது தான்.
-கன்பூசியஸ்-

அறிவுக்கு ஆதாரம் அவதானிப்பு, ஆழ்ந்த தேடல், அடுத்தவருடன் பகிர்தல.;
-குழுடுயு-

அறியாமை

அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது.
-தத்துவவியலாளர் இங்கர்சால்-

அறியாமை மனதின் இரவு. அந்த இரவில் நிலவும் இல்லை. நட்சத்திரமும் இல்லை.
-கன்பூசியஸ்-

நமது அறிவு அனைத்தும் நம்மை நம்முடைய அறியாமைக்கு அருகில் கொண்டு செல்கிறது.
-ரி.எஸ். எலியட்-

நமது அறிவு பெருகப் பெருக நமது அறியாமையின் அளவும் அதிகரித்துக்கொண்டே போகின்றது.
-யோன். எவ். கென்னடி-


ஞானக் கோவிலுக்கான நுழைவாயில் எமது அறியாமை பற்றிய எமது அறிவு.      -பெஞ்சமின் பிராங்ளின்-

அறியாமையின் மகள் வியந்து பாராட்டுதல்.
-பெஞ்சமின் பிராங்ளின்-

மனித ஜீவன் என்ற முறையில் நாம் எப்போதுமே அறியாமையுடன் தான் வாழ்ந்து வருகின்றோம். வாழ்ந்துகொண்டு இருப்போம். அதை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு பெற்றவனாக இருந்தது எனக்குப் புது அனுபவம்
-அப்துல்கலாம்-

அறியாமை இழிவு அன்று. அறிய மனமில்லாமையே இழிவு.
                           -நா. பார்த்தசாரதி-

விவேகம்
மற்றவர்கள் குற்றம் கண்டுபிடிக்க சிரமப்படுவது போல் காரியங்கள் செய்வது நமது சாமர்த்தியம். சாமர்த்தியமாகச் செய்யமுடியாத காரியங்களைச் செய்வதே விவேகம்.
-ஹென்றி பிரடரிக் அமியல்

விவேகம் பெரிய வேலைகளை ஆரம்பித்து வைக்கிறது. உழைப்பு அதனை முடித்து வைக்கிறது.
-கோபர்ட்-

அதிர்ஷ்டத்திற்கு விவேகம் தேவையில்லை. ஆனால் விவேகத்திற்கு அதிர்ஷ்டம் வேண்டும்.
-யூதப் பழமொழி

அறிவைக் கற்பிக்கலாம். விவேகத்தைக் கற்பிக்க முடியாது.      -ஹெர்மன் ஹெஸ்லி-

கெட்டித்தனம் விவேகம் அல்ல.      -யூரிப்பிடிஸ்-

ஞானம் பெறுவதற்கு மூன்றுமுறைகள் உண்டு. முதலாவது பிரதிபலிப்பு. மிக உயர்ந்தது. இரண்டாவது வரையறை. மிகச் சுலபமானது. மூன்றாவது அனுபவம். மிகக் கசப்பானது.    -கன்பூசியஸ்-

ஒரு விவேகமுள்ள கேள்வி ஞானத்தின் அரைவாசி.
-பிரான்சிஸ் பேகன்-

நாம் எம்மைப்பற்றி எமது வாழ்க்கையைப் பற்றி எம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகைப் பற்றி எவ்வளவு குறைவாக விளங்கிக்கொண்டிருக்கின்றோம் என்பதை உணரும் போது எங்கள் ஒவ்வொரவருக்கும் உண்மையான ஞானம் பிறக்கிறது.    -சோக்கிரட்டீஸ்-

பேரறிவு   மிகச்  சில வார்த்தைகளையே பயன்படுத்தும்.
-சோபக்கிள்ஸ்-
திறமை

என்ன செய்கின்றாய் என்பதல்ல எப்படிச் செய்கின்றாய் என்பதே உன் திறமைக்கு அளவுகோல்.
-ஹென்றி வார்ட் பீச்சர்-

இயற்கையான திறமைகள் இயற்கையான தாவரங்கள் போன்றவை. அவற்றைக் கல்வியின்மூலம் வளப்படுத்த வேண்டும்.
-பிரான்சிஸ் பேகன்-

வாய்ப்பில்லாத திறமையினால் பயனேதுமில்லை.
-நெப்போலியன்-

உண்மையான தகுதி ஆறு போன்றது. ஆழம்அதிகமாக இருந்தால் அமைதியாக ஓடும்.             -யாரோ-

கூரறிவும் திறனும் ஊக்கமும் இருக்குமானால் எந்தவொரு முயற்சியிலும் சிறு வெற்றியாவது கிடைத்தே தீரும்.

-ஜே.சி றொபேர்ட்-

எனக்கு எதுவுமே தெரியாது என்பது தான் எனக்குத் தெரிந்த ஒரேயோரு விடயம்.
-சோக்கிரட்டீஸ்-

ஒன்றை என்னால் செய்யமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தால்; அதைச் செய்து முடிப்பதற்கான திறமையை  ஆரம்பத்தில் நான் கொண்டிருக்காவிட்டாலும்  கூட  நிச்சியமாக அந்தத் திறனை நான் அடைவேன்.
-மகாத்மாகாந்தி-

வாழ்க்கை மீது உங்கள் சொந்த விதிமுறைகளை செலுத்தும் வலு உங்களிடம் இல்லையெனில் வாழ்க்கை உங்களுக்குத் தரும் விதிமுறைகளை நீங்கள் ஏற்கவேண்டும்.
 -ரி.எஸ். எலியட்ஸ்-

நூல்கள்
ஒரு புத்தகத்தை அழிப்பவன் ஒரு மனிதனைக் கொலை செய்வதற்குச் சமம். ஒரு மனிதனைக் கொல்பவன் ஒரு பகுத்தறிவுள்ள உயிரை, கடவுளின் மறு உருவைக் கொல்கின்றான். ஆனால் ஒரு நல்ல புத்தகத்தை அழிப்பவன்  பகுத்தறிவை, கடவுளின் மறுஉருவை நம் கண்முன்னாலேயே கொல்கின்றான். -மில்ரன்-

சில புத்தகங்கள் சுவைக்கப்படவேண்டியவை. சில புத்தகங்கள் வெறுமனே விழுங்கப்படவேண்டியவை. சில புத்தகங்கள் சுவைத்துச் செரிமானம் செய்யப்பட வேண்டியவை. -பிரான்சிஸ் பேகன்-

நூல்கள் தனிமையில் இருப்பவர்களுக்கு உற்ற நண்பர்கள். துக்கத்தைப் போக்கி மகிழ்வையும் சாந்தியையும் தருகின்றன. தடுமாற்றத்தைத் தெளிய வைத்து மன உறுதியைத் தருகின்றன. ஒருவர் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வழிகாட்டியாகின்றன. ஒருவருடைய வாழ்வில் தன்னம்பிக்கையை விதைத்து மேம்பாடுகளை வளர்க்க உதவுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், நல்ல மனிதர்கள் ஆகியோருடன் ஆத்மார்த்த நிலையில் சில மணிநேரம் வாழவைக்கின்றன.
-பேராசிரியர் நந்தி-

நூல் என்பது கல்வியறிவு தந்து, நடைமுறை நிலை தெரிவித்து கடமைகளைக் காட்டி, உரிமைகளைச் சேர்த்து பொருளாதாரத்தை வளர்த்து கலாசாரத்தைக் காக்கும் செயற்பண்பு கொண்டது.
-இந்திய நூலகவியல் அறிஞர் வே. தில்லை நாயகம்-

ஒவ்வொரு புத்தகமும் எம்முன்னே மக்களைப் பற்றியும், அவர்கள் ஆசாபாசங்கள் பற்றியும், அவர்கள் இதயம் பற்றியும், கருத்தோட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ளத் திறந்து விடப்படும் சாளரங்கள்.
-மக்சிம்கோர்க்கி-

வாசிப்பு

வாசிப்பு மனிதனை முழுமையாக்குகிறது. கலந்துரையாடல் எதற்கும் ஆயத்தமானவனாக்குகிறது. எழுத்து துல்லியமான மனிதனாக்குகிறது.
-பிரான்சிஸ் பேக்கன்-

எழுத்தாளனின் நேரங்களில் மிகக்கணிசமானளவு பகுதி வாசிப்பிலேயே கழிகின்றது. நல்லதொரு  நூலை எழுதுவதற்கு நூலகத்தின்; அரைப்பங்கு நூல்களின் பக்கங்கள் புரட்டப்படுகின்றன.
-சாமுவேல் ஜோன்சன்-

வாசிப்பவர்களை நினைவில் வைத்துக் கொள்வதற்காக வாசிப்பவர்கள் மறப்பதற்காக வாசிப்பவர்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கிறேன்.
-வில்லியம் லயான்பெல்ப்-

நூல்களை வாசிக்கும் போது ஏற்படும் நன்மையைப் போன்று நூல்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் விரிவுரைகள் நன்மையைத் தருவதில்லை.
-சாமுவேல் ஜோன்சன்-


வாசித்தல் ஒரு கலை, சிந்தித்தல் ஒரு கலை, எழுதுதலும் ஒரு கலையே.
-சாள்ஸ்லாம்ப்-

கல்வியினாலே பெருந்தொகையான மக்கள் வாசிக்கக் கூடியவர்களாக விளங்கினாலும், தாம் வாசிப்பனவற்றிலே எவை வாசிக்க வேண்டியவை என்பதைப் பிரித்தறிய முடியாதுள்ளனர.;
-ஜி.எம்.றெவெலியன்-


நூலகம்

கடலைப் போன்றது நூலகம்.
மணலை விரும்புவோர் மணலை எடுக்கலாம்;;;.
சிப்பி, சங்கு, சோகிகளைப் பொறுக்குவோர் அவற்றைப் பொறுக்கலாம்;.
குளிப்போர் குளிக்கலாம்;.
காற்று வாங்க விரும்புவோர் காற்று வாங்கலாம்;.
 மீனினங்களைப் பிடிக்க விரும்புவோர் அவற்றைப் பிடிக்கலாம்;.
வெறுமனே கரையில் இருந்து கடல் அலையைப் பார்த்து மகிழ விரும்புவோர் அவ்வாறு செய்யலாம்;.
முத்தெடுக்க விரும்புவோர் முத்தெடுக்கலாம்.
செல்கின்றவரது நோக்கம் எதுவோ அதனை அவர் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
-குழந்தை ம. சண்முகலிங்கம்-

நூலகம் இல்லாத வீடு உயிரில்லாத உடல் போன்றது.

-தோமஸ் அல்வா எடிசன்-

எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது.
                               -பிளேட்டோ-

நூலகங்கள் புத்தக வழிபாடு செய்யும் தொழுகைக்கூடங்கள் அல்ல. இலக்கிய ஊதுவத்தி கொளுத்தும் அல்லது புத்தகக் கட்டுக்களுக்கு பக்திச் சடங்குகள் செய்யும் செய்யும் திருக்கோயிலோ அல்ல. நூலகம் என்பது கருத்துக்கள் பிறக்கும் பிரசவ அறை. வரலாறு உயிர்த்தெழும் இடம்.
-நோர்மன் கஸின்ஸ்-

'காற்றும் ஒளியும் நீரும் எங்ஙனம் மக்களில் வேறுபாடு காட்டாமல் எவ்வாறு பயன் தருகின்றனவோ அது போலவே அறிவும் மக்கள் அனைவருக்கும் தரப்பட வேண்டும். இதற்கான நல்ல சாதனம் நூலகமே'

-நூலக அறிஞர் வே. தில்லைநாயகம்-


சிந்தனைகள்

எதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு, பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களைக் கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் - தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் கூறலாம்.
-படிப்பு என்னும் நூலில் படியாதவன்-

உன்னைக் கண்டுகொள்ள வேண்டின் உனக்காக சிந்தி.
-சோக்கிரட்டீஸ்-

உனது சிந்தனைகள் உன்னைக் கொண்டுவந்திருக்கின்ற இடத்தில் நீ இன்று நிற்கின்றாய். உனது சிந்தனைகள் உன்னைக் கொண்டுசெல்லப்போகின்ற இடத்தில் நீ நாளை நிற்கப் போகின்றாய்.
-ஜேம்ஸ் அலன் (1864-1912)-

ஒருவருடன் வாதிடுவதற்கு என்னைத் தயார்படுத்தும் போது எனது நேரத்தில் மூன்றிலொரு பகுதியை என்னைப் பற்றியும் நான் என்ன சொல்லப்போகின்றேன் என்பது பற்றியும் மிகுதி மூன்றில் இரண்டு பகுதியை அவரைப் பற்றியும் அவர் என்ன சொல்லப் போகின்றார் என்பது பற்றியும் சிந்திப்பதற்குச் செலவிடுகிறேன்.
-ஆபிரகாம்லிங்கன் (1809-1865) அமெரிக்க அதிபர்-


நீ விழித்திருக்கும் முன்னிரவில் உனது தவறுகளைப் பற்றிச் சிந்தி. நீ தூங்கும் பின்னிரவில் அடுத்தவர்களின் தவறுகளைச் சிந்தி.
-சீனப் பழமொழி-


ஆசிரியர்
கெட்டிக்கார ஆசிரியர்; பாராட்டப்படுவார். மனித உணர்வுகளைத் தொட்ட ஆசிரியரோ எப்போதும் மனத்தில் வைத்துப் போற்றப்படுவார்.
-கார்ல் கஸ்ரோ ஜங் (1875-1961) உளவியலாளர்.-

ஆசிரியர் என்பவர் சூழ்ந்த பார்வையுடையவர் என்கிறார் சூழ்ந்த பார்வை என்பது- நிரம்பிய கல்வி, ஆழமான அறிவு, விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல், தேசிய நோக்கம் முதலிய பல கருத்துக்களை உள்ளடக்கியது. முறை சார்ந்த கல்வியை வழங்குதல் ஆசிரியரின் பணியாக இருக்கும்.
-புலவர் மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை-

ஆசிரியர்கள் ஒரு மாணவனது வாழ்க்கையை எப்படி மாற்றிவிடுகிறார்கள். ஒரு சொல், ஒரு உற்சாகம், ஒரு சிறு பாராட்டு.அவர்கள் செய்த சாதனையின் ஒரு விளக்கம்- அதுதான் ஒரு இளம் உள்ளத்தில் எத்தகைய பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
-எஸ். உதயமூர்த்தி-

21ம் நூற்றாண்டின் ஆசிரியருக்குத் தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதுமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள் பல்துறைப்புலமை, மாறும் நிலைக்கேற்ப அமைதல், விமர்சனப்பாங்கு, பிரச்சினைகளை இனங்காணல், மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும். -யுனெஸ்கோ-

சராசரியிலும் குறைவெனக் கணிக்கப்பட்ட மாணவர்களில் எத்தனை வீதத்தை கல்வியிலும் அதன்மூலம் வாழ்வாங்கு வாழக்கூடிய வாழ்க்கையிலும் வெற்றியடையச் செய்ய முடியும் என்பதே ஒரு ஆசிரியரின் வெற்றியை அளக்கும் அளவுகோல் ஆகும்.
-படியாதவன்-

கற்பித்தல்

கற்பிப்பவருக்கு அந்தஸ்தை வழங்காமல் கல்வியை வளர்க்கவோ வழங்கவோ முடியாது.
-பேராசிரியர் சிவத்தம்பி-

எனது தந்தை உழைப்பதற்குக் கற்றுத் தந்தார். ஆனால் உழைப்பை நேசிப்பதற்குக் கற்றுத் தரவில்லை
-வில்லியம்அடம்ஸ்-

கற்றல் என்பது எமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைக் கண்டுபிடிப்பது செய்தல் என்பது எமக்குத் தெரியும் என்பதை செய்து காட்டுவது. கற்பித்தல் என்பது உனக்குத் தெரிந்தமாதிரி அவர்களுக்கும் தெரியும் என்பதை மீள நினைவுறுத்துவது. நீங்கள் அனைவருமே கற்பவர்கள்.
-றிச்சார்ட் பக்-

சிந்தனை கதைகளின் வழி பாய்கிறது. நிகழ்வுகள் பற்றிய கதைகள், மக்கள் பற்றிய கதைகள், நோக்கங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய கதைகள். சிறந்த ஆசிரியர்கள் சிறந்த கதை சொல்பவர்கள். கதைகளின் வழி நாம் கற்கின்றோம்
-பிராங் சிமித்-

சிறந்த கற்பித்தல் என்பது சரியான விடைகளைத் தருவதைவிட சரியான கேள்விகளைத் தருவதே
-ஜோசப் அல்பேர்ஸ்-

நான் எதையும் யாருக்கும் கற்றுத்தர முடியாது. நான் செய்யக்கூடியது அவர்களைச் சிந்திக்க செய்வதே என்னால் முடியக் கூடியது.
-சோக்கிரட்டீஸ்-
வருட அடிப்படையில் நீங்கள் சிந்தித்தால் ஒரு விதையை விதையுங்கள். பத்து வருடத்திட்டமாயின் ஒரு மரத்தை நடுங்கள். நூறு வருட திட்டமாயின் மக்களக்குக் கற்பியுங்கள்
-கன்பூசியஸ்-

கல்வி

கல்வியின் மிகப் பெரும் இலக்கு செயல். அறிவு அல்ல
-ஹேபேர்ட் ஸ்பென்சர் (1820-1903)

'நான் உயிர் வாழ்வதற்காகக் கற்க மாட்டேன். ஆனால் கற்பதற்காகவே உயிர்வாழ விரும்புகிறேன்'
-பிரான்சிஸ் பேக்கன்-

கல்வியின் நோக்கம் என்பது மிகச் சிறந்தவைகளைப் பார்த்துப் அச்சப்படுவதல்ல. நாளாந்த வாழ்க்கையின் ஒரு அம்சமாகக் கொள்வதே கல்வியின் இலக்காகும்.
-ஜோன் மேசன் பிறெளவுண் (1900-1969)-

'மக்களுடைய சிந்தனையில், மனப்பாங்கில், செயலில் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான, முன்னேற்றகரமான மாற்றங்களை விளைவிக்கின்ற. செயற்பாடே கல்வி
-சிற்பி

தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி
-மாட்டின் லுதர்

மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி
-சுவாமி விவேகானந்தர்

அன்பை உணருதல், அன்பு காட்டுதல் அன்பு என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி
-ஜே.கிருஸ்ணமூர்த்தி

உன்னத மரபுகளையும் அன்பையும், இரக்கத்தையும் ஒருவரிடம் பேணி வளர்க்கவும் முழுமையான வாழ்க்கையை வாழ உதவுவதுமே கல்வி
-கல்வியியலாளர் ராதாகிருஷ்ணன்-

கற்றல்

சிந்திக்காமல் படிப்பது ஜீரணிக்காமல் உண்பதற்குச் சமம்.
-பேர்க்-

ஒரு நாளில் ஒரு மாணவனுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கலாம். ஆனால் ஆர்வத்தை உருவாக்குவதற்கு கற்பித்தால் வாழ்க்கை முழுவதற்குமான கற்றலை அவன் தொடர்வான்
-கிளே பெட்வோட்-

ஆராயும் மனத்திற்கு அகிலமே ஆய்வுகூடம்.
-மார்ட்டின் ஃபிசர்-

ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும். கற்றுக் கொள்வதற்கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு, காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது.
-ளுநபெந 1990-

நான் எப்போதுமே கற்பதற்குத் தயாராக இருப்பது போன்று கற்பிக்கப்படுவதற்கு தயாராக இல்லை.
-வின்சன் சேர்ச்சில்-

பத்து வருடம் தொடர்ந்து கற்பதை விட ஒரு விவேகியுடன் ஒரு தரம் உரையாடுதல் கூடுதல் பலனைத் தரும்.
-சீனப் பழமொழி-

சிந்தனையற்ற கற்றல் உழைப்பின் விரயம். கற்றல் இல்லாத சிந்தனை ஆபத்தானது.
-கன்பூசியஸ்-

குழந்தைக் கல்வி

'குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டுமானால் அவர்களை நேசிக்க வேண்டும். ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் இதயத்துக்கும் வழி கண்டு பிடிக்க வேண்டும். குழந்தையின் நெருக்கத்தை ஆசிரியர் உணரவேண்டும். குழந்தையின் குதூகலத்தையும் வருத்தத்தையும் அனுபவிக்கவேண்டும். குழந்தையின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க வேண்டும். தானும் ஒரு குழந்தையாக இருந்திருக்கிறோம் என்பதை ஆசிரியர் மறக்கக்கூடாது'
-ரஷ்ய எழுத்தாளர் வசீலி சுகம்வீனஸ்கி-

கற்றல் எனப்படுவது படிப்படியாக நடத்தையில் பொருத்தப்பாட்டை அடைவதாகும்
-ஸ்கின்னர்-

எமது ஆற்றல்களை விருத்தி செய்வதற்கான வழிமுறைகளை கல்வி என எண்ணுவோம். ஏனெனில் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிலை கொண்டிருக்கின்ற தனிப்பட்ட நம்பிக்கைகளும் கனவுகளும் ஏனைய ஒவ்வொருவருக்குமான நன்மையாக மாற்றப்பட முடியும் என்பதுடன் அது எமது தேசத்திற்கும் மிகப் பெரும் பலமாகும்.

-ஜோன் எவ். கென்னடி

நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் உங்கள் பிள்ளையை கற்றலுக்குப் பயிற்றப்படுத்துவதை விட்டு அவர்களது மனத்தை ஆகர்சிக்கின்ற அம்சங்களுக்கு வழிப்படுத்துவீர்களாயின் பேரறிஞன் ஒவ்வொருவரதும் அதிசயிக்கத்தக்க திருப்புமுனையை துல்லியமாகக் கண்டுபிடிக்கக்கூடியவராக இருப்பீர்கள்.

-பிளேட்டோ கி;மு 427- 347-


சமூக மேம்பாடு

பொதுமக்களுடன்  இணைய  வேண்டுமெனில் பொது மக்களின்  தேவைகள்,  விருப்பங்களுக்கமையச் செயற்பட வேண்டும். பொதுமக்களுக்காகச் செய்யும் வேலைகள் எல்லாம் அவர்களது தேவையிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். ஆனால் எவ்வளவு நல்லெண்ணம் உடைய எந்தவொரு தனிநபரின் ஆசையிலிருந்தும் தொடங்கப்படக் கூடாது. பல சந்தர்ப்பங்களில் புறநிலையில் பொதுமக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. ஆனால் அகநிலையில் அவர்கள் அத்தேவையை இன்னும் உணராத, அம்மாற்றத்தை இன்னமும் செய்ய விரும்பாத அல்லது தீர்மானிக்காத நிலையே இன்னமும் இருக்கிறது. இத்தகைய நிலைமைகளில் நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். நமது பணி மூலம் பொதுமக்களில் பெரும்பாலானோர் இம்மாற்றத்தின் தேவையை உணர்ந்து அதைச் செய்ய விரும்பி ஒரு தீர்மானத்திற்கு வரும்வரையில் நாம் அம்மாற்றத்தைச் செய்யக் கூடாது. பொதுமக்கள் பங்குபற்ற வேண்டிய  எந்த  வேலையும்; அவர்கள் தாமாக   உணர்ந்து செய்ய விரும்;;பாவிடில் அது வெறும் சம்பிரதாயமாக மாறித் தோல்வியில் முடிந்து விடும்;.    
-மாவோ-


சமுதாய   மேம்பாடு  என்பது மனிதனது உணர்வு பூர்வமான பங்கு பற்றுதலின்றி முற்றிலும் தானாக நிகழும் ஒன்றல்ல. அதே சமயம்   மனித சமுகச்    சூழலின் இயல்பை மீறி யாராலும் வலிந்து ஏற்படுத்தப்படுவதுமல்ல. மனிதனது தேவைகளும் சமுதாய உறவுகளும் இணையும் போது மட்டுமே மேம்பாடு கருக்கொள்கிறது.

-மாவோ-

Tuesday, February 04, 2014

தமிழ்ச் சமூகமும் பெண்களும் அனுபவங்கள் மற்றும் அவதானிப்புகள் வழியான சமூக நோக்கு




சமூகம்

மனித வாழ்வின் இன்றைய போக்கைத் தர்க்கரீதியில் விளங்கிக்கொள்ள விழைபவர்கள் அல்லது வாழ்வில் எதிர்கொள்ளும் தனிநபர் பிரச்சினைகளுக்கோ அல்லது சமூகப்பிரச்சனைகளுக்கோ அறிவியல்ரீதியில் தீர்வுகண்டு சமூக நலனுக்கு உழைக்க முனைபவர்கள் அனைவருக்குமே சமூகம் என்ற கருத்துநிலை தொடர்பான தெளிவான புரிதல் மிகவும் இன்றியமையாததாகும். முரண்பாடுகள், பகைமைகள், போராட்டங்கள் பெரிதாக இல்லாமல், ஒட்டுமொத்த சமூகமுமே ஒரு குடும்பமாக இருந்த ஆதிகால சாதாரண சமூக அமைப்புக்கோ அல்லது ஆபிரிக்க, அமெரிக்க, தென் மற்றும் தென்கிழக்காசியப் பிரதேசங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றும் நிலைகொண்டிருக்கும் ஆதிகால சமூகங்களின் எச்சங்களான பழங்குடிச் சமூகங்களுக்கோ பொருந்தக் கூடிய 'கூடிவாழும் மக்கள் குழு' என்ற சுருக்கமான வரைவிலக்கணமானது வரலாற்றுப் படிநிலை வளர்ச்சிகளின் ஒத்திசைவுகளையும் முரண்களையும் உள்வாங்கி, மாற்றங்கள்;, அழிவுகள் மற்றும் வளர்ச்சிகளை மாறிமாறிச் சந்தித்து சிக்கல் வாய்ந்த சமூகம் (Complex society) என அழைக்கப்படும் இன்றைய சமூக அமைப்பில் 'தனித்துவ வாழ்விடம், இனம், மதம், நிறம், மொழி, பண்பாட்டு அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அம்சங்களின் அடிப்படையில் தனித்துவமானதாக இருக்கும் அதேசமயம் தொழில்கள், சாதியமைப்பு போன்ற பல உட்பிளவுகளையும் கொண்டிருக்கின்ற, ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழுகின்ற ஒழுங்கமைக்கப்பட்ட குழு' என பரந்து விரிந்த வரைவிலக்கணத்தைக் கொண்டதாக மாறியிருக்கிறது. எல்லைக்கோடு தெளிவாக இனங்காணப்படக்கூடிய எளிய சாதாரண நிலையிலிருந்து வேகத்தை நோக்கி வேகமாய் ஓடி வேகத்துக்குள் வேகமாய் கரைந்து எங்கே போகின்றோம் என்று நின்று நிதானிக்க வழியின்றி சிந்தைக்குள் நுழைபவற்றையெல்லாம் முன்பின் யோசியாது செயலுக்குட்படுத்தும் துரித மாற்றச் செல்நெறியில் மனித சமூகம் நிலைகொண்டிருக்கிறது.

சமூக அமைப்பும் பெண்களும்

இவ்வுலகில் நிலைகொண்டிருக்கும் அனைத்துச் சமூகங்களும் தேவைகளின் அடிப்படையில் மட்டுமல்ல மனித வேட்கைகளின் வழியாகவும் உருவானதொன்று. இச்சமூக அமைப்புகள் ஒவ்வொன்றும் தமக்கெனத் தனித்துவமான வரலாற்றை, பண்பாட்டை, தேசிய அடையாளத்தைக் கொண்டவை. பண்பாடு, கலாசாரம் போன்றவற்றில் வேறுபட்டவையாக இருப்பது போன்றே இச்சமூகங்களின் தேவைகள், அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிவகைகள் என்பவையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. பழமைக்குள் நிற்பவர்கள், முற்றிலும் புதுமைக்குத் தாவியவர்கள், பழமையுமின்றி புதுமையுமின்றி இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவர்கள் என முரண்பட்ட மக்கள் கூட்டத்தைக் கொண்டிருக்கும் தற்போதைய சமூக அமைப்பானது தந்தை வழிச் சமூக அமைப்பு (Patriarchal society) ) எனப்படுகிறது. பிறக்கின்ற  குழந்தை தகப்பன் பெயரால் அறியப்படுவதும், குடும்பத்தின் சொத்துகளுக்கு தகப்பனே சொந்தக்காரனாய் இருப்பதும், குடும்ப, சமூக, நாட்டின் வளர்ச்சி தொடர்பான தீர்மானம் எடுத்தல், நடைமுறைப்படுத்தல் போன்றவற்றில் ஆணின் ஆதிக்கம் இருப்பதும் தந்தைவழிச் சமூக அமைப்பின் ஒரு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். மனிதனின் சிந்தனை, மொழி, நம்பிக்கைகள், பண்பாடு, பழக்கவழக்கங்கள், சட்டங்கள், கட்டியமைக்கும் நிறுவன அமைப்புகள், கலை இலக்கிய வடிவங்கள், தொடர்பு சாதனங்கள் அனைத்திலும் இவ்வமைப்பு ஆழவேரோடி இருக்கின்றது.

உயிர்களின் உருவாக்கத்திற்கும் உறவுகளின் பிணைப்புக்கும் ஆதாரமாய் விளங்கும் பெண்கள் சமூகத்தின், இன்றைய பெரும் பிரயத்தனங்களில் ஒன்று ஆணாதிக்க சமூக அமைப்பு வலிந்து பிணைத்திருக்கும் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளப் போராடுதல்; மற்றையது அபிவிருத்தி நோக்கிய பாதையில் தனது பங்கைச் செலுத்துதல். இந்த இரண்டு பணிகளையும் சரிவர ஆற்றுவதற்கு பெண்ணுக்குத் தேவையானது தம்மைத்தாமே பிணைத்துக்கொண்டிருக்கும்; தளைகளிலிருந்து அறிவார்ந்த ரீதியில் விடுபடுதல். அபிவிருத்தியடையவிரும்பும் எந்தவொரு சமூகமும்  அறிவுசார் ரீதியில் தம்மைத் தயார்படுத்தும் பெண்களிடமிருந்தே மேற்குறிப்பட்ட பிரயத்தனங்களை எதிர்பார்க்கும் வாய்ப்புண்டு.

சமூக நிறுவனங்கள்

சமூகத்தின் தோற்றப்பாடுகள், மரபுகள், முறைசார்ந்த கட்டமைப்புகள் என்பவற்றின் தொகுப்பே சமூக நிறுவனங்கள் ஆகும். சமூக அமைப்புகள் ஒவ்வொன்றும்; தனிநபர்களைவிட தமது தேவைகளைப் பூர்த்தி செய்யுமுகமாகத் தனிநபர்களால் தோற்றுவிக்கப்பட்ட, ஒன்றுடனொன்று தங்கியிருக்கும் பல நிறுவனங்களதும் ஆதிக்கத்தில் உள்ளதொன்றாகும். தனிமனிதர் ஒவ்வொருவரும் பெற்றோராக, ஆசிரியராக, தொழிலாளியாக, தொழில் முயற்சியாளராக, சமூக சேவையாளராக என பலதரப்பட்ட வகையில் இந் நிறுவனங்களில் தமது பங்கை ஆற்றுகின்றனர். மனிதரின் தேவையைப் பூர்த்தி செய்யவென மனிதரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனங்கள் இன்று சமூக உறுப்பினர்கள் மீது தமது விருப்பங்களை அமுல்படுத்துகின்ற ஒரு கருவியாக வளர்ந்தது மட்டுமன்றி, இவற்றில் சில தமது சமூகத்தின் பரப்பெல்லைக்கும் அப்பால் சென்று ஏனைய சமூகங்களையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு பாரிய சக்திகளாகவும் உருவெடுத்திருக்கின்றன.

சமூக  நிறுவனங்களின்  ஆதார (Primary) நிறுவனங்களாகக் கருதப்படுபவை குடும்பம், கூட்டாளிக்குழு, சுற்றுப்புறச் சமுதாயம் என்ற மூன்றுமே. இவை சமூக உறுப்பினரிடையே முழுக்க முழுக்க நேரடித் தொடர்பைப் பேணுபவை. மனித குலத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இந்த ஆதார நிறுவனங்கள் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. பாடசாலைகள், மத நிறுவனங்கள் போன்றவை நேரடித் தொடர்பையும், மறைமுகத் தொடர்பையும் பேணுகின்ற இடைநிலை (Intermediate) நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. முற்றிலும் மறைமுகத் தொடர்பைப் பேணுகின்ற அரசு, தொடர்பு சாதனங்கள் போன்றவை வழிநிலை (Secondary) நிறுவனங்கள் எனக் கூறப்படுகின்றன. கருவறை தொடங்கி கல்லறைவரை மனித வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் செல்வாக்குச் செலுத்தும் வலிமைமிக்க இச்சமூக நிறுவனங்களின் அளவு, தன்மை, ஆதிக்கம் என்பவற்றினூடாக ஒரு சமூகத்தின் தன்மையையும், அதன் சிக்கல் வாய்ந்த அமைப்பையும் இனங்கண்டுகொள்ள முடியும். இதிலிருந்து தனிமனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை இச்சமூக நிறுவனங்களே என்பது தெளிவு.

தமிழ்ச் சமூகத்தின் அமைப்பு

மனிதன் தனித்த ஒரு அடையாளத்தை கொண்டவனல்ல. தமிழ் மொழியைப் பேசுபவன் என்ற வகையில் தமிழன் அல்லது தமிழச்சி என்ற ஒரு அடையாளத்தை மட்டும் கொண்டு தமிழ் சமூகத்தின் ஒரு ஆணையோ பெண்ணையோ அடையாளப்படுத்திவிடுதல் சாத்தியமல்ல. பிரதேச வேறுபாடு, சாதியினதும் சாதியின் உட்பிரிவுகளதும் வேறுபாடு, வர்க்க வேறுபாடு, மத வேறுபாடு, பால் வேறுபாடு, தொழில் வேறுபாடு என்று பரந்த அடையாளங்களின் வலைப்பின்னலுக்குள்ளே நின்றுகொண்டுதான் ஒரு குறித்த சமூகத்தில் வாழும் மனிதனை அடையாளப்படுத்த முடிகிறது. இதற்கு பத்திரிகையில் வரும் மணமகன் மணமகள் தேவை விளம்பரம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

'கொழும்பு இந்து உயர் வேளாள குலத்தைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய தனியார் வங்கியொன்றில் அதிகாரி தரத்தில் தொழில் புரியும் பட்டதாரி மகனுக்கு பெற்றோர் மணமகளை தேடுகின்றனர்.' இதையே சர்வதேசரீதியில் தகவல் இணையம் மூலமாக மணமகள் தேட விழைவோராயின், 'இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் சிறுபான்மை இன' என்ற மேலதிக சொற்றொடரையும் இணைக்க வேண்டியிருக்கும். பெண் என்று வரும்போது தகவல் மேலும் விரிவடைந்து  எடுப்பான தோற்றமும் மெல்லிய உடல்வாகும் வெள்ளை நிறமுடைய அழகும் குடும்பப்பாங்கும் நிறைந்த..............' என்று தொடரும்.

மொழிக் குழுமம் என்ற அடிப்படையில் இலங்கைத் தீவின் வடக்கு  மற்றும் கிழக்கு மாகாணங்களில்  வாழும்; இலங்கைத் தமிழர், கண்டிப் பிரதேசத்தில் வாழும்; மலையகத் தமிழர், கொழும்பு மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்; கொழும்புத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் செறிவாகவும் இலங்கையில் பரவலாகவும் வாழும் இஸ்லாமியத் தமிழர் என நான்கு வகையான தமிழரை இனங்காண முடியும்.  தமிழ்மொழியைப் பேசியபோதும் பேச்சு வழக்குத் தமிழில் யாழ்ப்பாணத்தமிழ், மட்டக்களப்புத்தமிழ், மலையகத்தமிழ், முஸ்லிம் தமிழ் என்று பிரதேச வேறுபாடுகளைக் கொண்ட சமூகமாகவே இது காணப்படுகின்றது. மதம் சார்ந்து நோக்கும்போது இந்துசமயம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்பன பிரதான சமயங்களாக பின்பற்றப்படுகின்றன.

சாதியமைப்பு எனப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் உள்ளது போன்று பிராமண சமூகத்தை உள்ளடக்கிய உயர்வகுப்பு, கள்ளர், தேவர் போன்றோரை உள்ளடக்கி பின்தங்கியவகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பினரை உள்ளடக்கிய தலித் எனப்படும் ஒதுக்கப்பட்டோர் என மூன்றுவகையான சாதியமைப்பு நிலைகொண்டிருப்பது போலன்றி இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின் சாதியமைப்பில் பிராமண சமூகம் உயர் தாழ் வகுப்பு என்ற எந்த அடைமொழியுமின்றி மிகச்சிறு அளவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதேசமயம் நிலப்பிரதேசங்களில் உழவுத்தொழிலைப் பாரம்பரியத் தொழிலாகக் கொண்ட வேளாள வகுப்பும் கரையோரப்பகுதிகளில் மீன்பிடியைப் பாரம்பரியத் தொழிலாகக் கொண்ட  கரையார் வகுப்பும் தம்மை மேம்பட்ட வகுப்பாகவும் ஏனையோரை தாழ்த்தப்பட்ட வகுப்பாகவும் கருதும் தன்மை மிக ஆழமாக வேரோடிப்போயிருக்கிறது. 'நாங்கள் அந்தப் பகுதிக்குள் கை நனைப்பதில்லை, சம்பந்தம் பண்ணுவதில்லை' என்று பேசிக்கொள்ளுமளவிற்கு ஒவ்வொரு வகுப்பும் தனக்குள் பல உட்பிரிவுகளையும் உட்பிளவுகளையும் கொண்டிருக்கும் சமூகமாகவே தமிழ்ச்சமூகம் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது.
 
பொருளாதார நிலைகளின் அடிப்படையில் பாகுபடுத்தின் அரச உத்தியோகப் பாரம்பரியங்களைக் கொண்ட நடவைந எனப்படும் சிறுபான்மைப் படித்த உயர்வர்க்கம், விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக்கொண்டு படிப்படியாக அரச உத்தியோகங்களுக்கு மாறிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை நடுத்தரவர்க்கம், கூலித் தொழில்களை அடிப்படைத் தொழிலாகக் கொண்டு இலவசக் கல்வியின் அனுகூலங்களால் மெல்லமெல்ல முன்னேறிக்கொண்டிருக்கும் தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட அல்லது பொருளாதார ரீதியில் பின்தங்கிய வர்க்கம் என மூன்று பிரதான வர்க்கங்களை இங்கு இனங்காணமுடியும். உணவுமுறைகளிலும் கூட அரிசியே பிரதான உணவாக இருப்பினும் வன்னி வாழ் மக்களின் தவிடு கலந்த பச்சையரிசி, மட்டக்களப்புவாழ் தமிழ் மக்களின் வெள்ளைப் புழுங்கலரிசி, யாழ்ப்பாண மக்களின் தவிட்டுப் புழுங்கலரிசி என அரிசியின் வகைகள் மாறுவதும் கறிப் பக்குவங்கள் மற்றும்  கலாசார நிகழ்வுகளில் பரிமாறப்படும் பலகார வகைகளில் பிரதேச மணம் கமழ்வதும்  குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.
 
ஏனைய சமூக அமைப்புகளைப் போன்றே தமிழ்ச்சமூகத்திலும்; தந்தை வழிச்சமூக அமைப்பே நிலைகொண்டிருக்கின்றபோதிலும் குடும்பத்தில் வீடு பெண்ணுக்கே சீதனமாகப் போய்ச்சேருதல்,  திருமணத்தின் பின்னர் ஆண் பெண்ணின் வீட்டில் வசித்தல் போன்ற ஆதித் தாயுரிமைச் சமூகத்தின் எச்சங்கள் இன்றும் நிலைகொண்டிருக்கும் சமூக அமைப்பாகவும் இது உள்ளது. இன்று பேரன் பேத்தி ஸ்தானத்தில் இருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் எந்தவித எழுத்துப் பதிவுமின்றி 'சோறு கொடுப்பித்தல்' என்ற சடங்கின் மூலம் திருமணத்தை முடித்துக்கொண்டவர்களே.

தமிழ்ச் சமூகமும் பெண்களும்;

பெண்ணிய சிந்தனைகள் முனைப்புப் பெற்று, ஆண் பலமிக்கவன், தனித்தியங்குபவன், துணிவுள்ளவன், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுபவன், பாலியல் சுதந்திரம் உள்ளவன், அதேசமயம் பெண்ணோ வீட்டில் இருப்பவள், வெட்கம் உள்ளவள், பலவீனம் நிறைந்தவள், உணர்ச்சிவசப்படுபவள், தங்கிவாழ்பவள் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் வழி புனையப்பட்ட ஆண் பெண் அடையாளங்கள் தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து பெண்ணின் பல்பரிமாண ஆற்றல்கள் பல திசைகளிலும் வேகமாக வெளித் தெரியும் காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்;.

அடக்குமுறையின் உச்சக் கட்டத்தில் அணிதிரண்டு உரிமைப் போராட்டம் நடத்தும் தொழிலாளி வர்க்கப் பெண்ணோ அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகூடிய சலுகைகளுக்காகக் கொடி உயர்த்தும் மேற்தட்டு வர்க்கப் பெண்ணோ அல்ல இலங்கைத் தமிழ்ப்பெண். 'எத்தனை தான் எண்ணுக்கணக்கற்ற தகுதிகளைப் பெற்றிருக்கும் பெண்ணும் திருமணத்தின் மூலம் ஆணுடன் இணைக்கப்படும்போது அது சமுத்திரத்துடன் கலந்த ஆறு போன்றது' எனக்கூறும் மனுநீதி சாத்திரம் இன்றும் ஆழமாய் வேரோடியிருக்கும் சமூகத்தின் வார்ப்பு இவள். கல்விச் சுதந்திரமோ, திறமையின் அடிப்படையில் தொழில் பார்க்கும் சுதந்திரமோ மறுக்கப்படாதபோதும் தகப்பன், சகோதரன், கணவன், பிள்ளை என்று படிநிலையில் தங்கிவாழப் பயிற்றுவிக்கப்பட்டவள்.

இலங்கைத் தமிழ்ச்சமூகமானது இனத்தால், மொழியால், பண்பாட்டால் ஒன்றுபட்டபோதும் பொருளாதார அந்தஸ்து, கல்வி அறிவு, சாதிக்கட்டமைப்பு, மற்றும் சமூகப் பாரம்பரியங்களால் வேறுபட்ட வாழ்க்கை நிலையை, சிந்தனைப் போக்கைக் கொண்டுள்ள மூன்று நிலைப்பட்ட பெண்களை இனங்காட்டியிருக்கிறது.

தமிழ்ப் பெண் சமூகத்தின் வகை மாதிரிகள்

வாழ்தார வசதிகளைக் குவிமுனைப்படுத்தும் பண்பினர்;

வாழ்க்கையின் போக்கை உணவை மையப்படுத்தியே சிந்திப்பவர்கள். கல்வியின் முக்கியத்துவம், சுகாதாரத்தின் அவசியம் எதுவுமே புரியாதவர்கள். அறியாமை, பசி, பட்டினி, வறுமை, போசாக்கின்மை, எழுத்தறிவின்மை இவர்களைப் பீடித்திருக்கும் கொடுமையான நோய்கள். இவர்களுக்கு எமது அறிவுரைகள், கருத்தரங்குகள், எழுத்துவடிவ ஊடகங்கள் எதுவுமே பலனளிக்காது. எமது பேச்சுத்தரும் மாற்றத்தைவிடவும் எமது உருவ அமைப்பு, புறத்தோற்ற அமைப்பு, நடையுடைபாவனை அவர்களுக்கு பிரமிப்பையும் எம்மிலிருந்து ஒரு அன்னியத்தன்மையையும் ஏற்படுத்திவிடுகின்றன. உணவு தேடுவது அதற்காக உழைப்புத்தேடி அலைவது இதுதான் இவர்களின் முன்னுரிமை. கற்புநிலைக் கோட்பாடு, கணவன் மனைவி உறவில் மகோன்னதம், கல்வி கற்பதன் பலாபலன், சுகாதாரமாக வாழ்வதன் அவசியம் இவை அனைத்துமே இங்கு தாக்கம் ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடு மிகமிகக் குறைவு. உழைப்பே இல்லாமல் அல்லற்படும் குடும்பங்கள், உழைப்பு மட்டுமன்றி மனைவியின் உழைப்பையும் சேர்த்து சுரண்டிக் குடித்து செலவழிக்கும் குடும்பங்கள் என்று இவர்கள் பலதரப்படுவர். வறுமை புதுப்புது ஏக்கங்களையும், கற்பனைகளையும் இவர்களிடம் உருவாக்குவது தவிர்க்க முடியாதது.  இங்குதான் கற்பனையை மையப்படுத்தும் சினிமா முதல்தர தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சமூக அந்தஸ்தை மையப்படுத்தும் பண்பினர்

இவர்களுக்குப் போதிய உணவு இருக்கிறது. கல்வி கற்பதற்கு வசதியும் இருக்கிறது. உணவு. உடை, உறையுள் மூன்றும் போதியளவு கிடைக்கப்பெறும் இந்தப் பெண்கள் அடுத்து விரும்புவது சுகமான, சுலபமான வாழ்க்கையைத்தான். கல்வி இவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. பெண்தான் குடும்பத்தின் ஆணிவேர் அச்சாணி என்பதெல்லாம் இந்தப் படித்தவர்களுக்கு தெரியாது. அழகாக இருப்பது எப்படி? அந்தஸ்துடன் வாழ்வது எப்படி? வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிப்பது எப்படி? இவைதான் இவர்களின் மனத்தை எந்நேரமும் ஆக்கிரமித்திருப்பவை. பெண்ணைப் பொத்திப் பொத்தி வளர்த்து ஒழுக்கமுள்ளவளாக, முடிந்தால் உழைப்பதனூடாக தட்டிலொரு பெரும் செல்வத்தை அள்ளித் தருபவளாக அல்லது இருக்கிறதை வித்துவிட்டாவது நல்ல மாப்பிளைக்கு கட்டிக்கொடுக்கும் வகையில் வளர்க்கப்படுபவளாக...... சூழல், வளர்ப்புமுறை, சிந்தனை அனைத்துமே இத்தகையதொரு வாழ்க்கைக்கு அடிகோலும் வகையிலே மையப்படுத்தப்படுகிறது. அடுத்தவர்களுடன் தம்மை ஒப்பிட்டு உயர்வு தாழ்வு காணும் ஒப்பீட்டு வாழ்க்கை இங்கு பரவலாகக் காணப்படுகிறது. காதல் மனங்கள் அதிகமாகக் கருக்கொள்வதும், சினிமாவில் வரும் கதாநாயகனை, அல்லது உணர்வுகளைத் தூண்டும் நாவல்களின் கதாபாத்திரங்களைப் பார்த்து அப்படியொரு வாழ்க்கைக்கு ஏங்கித் தோற்றப் பொலிவிற்கும் செய்யும் தொழிலுக்கும் மனதைப் பறிகொடுப்பவர்கள் இவர்கள். இவர்களில் கல்வி கற்பது குடும்ப கௌரவத்தைப் பேணும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கல்வி கற்பவர்கள், தொழில்பார்க்க வேண்டும் என்பதற்காகக் கற்பவர்கள், அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கற்பவர்கள், எந்த நோக்கமும் அற்று எல்லோரும் படிக்கிறார்கள் நாமும் படிப்போம் என்று கற்பவர்கள் எனப் பலவகைப்படுவர். இலக்கியங்களில் இவர்கள் விரும்பிப் படிப்பது கதைகள் மட்டுமே. கருத்துமாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் கனவுகள், கற்பனைகள், ஏக்கங்கள், விரக்தியைத் தூண்டிவிடும் இலக்கியங்களை மட்டுமே விரும்பிப் படிப்பது இவர்களுக்கொரு சாபக்கேடு. வாழ்க்கை வேண்டும் அதிலும் அந்தஸ்தான வாழ்க்கை வேண்டும், குடும்ப கௌரவம், சாதிமதம் அனைத்திற்கும் ஒத்துவரக்கூடிய வரன் வேண்டும். இந்தத் வரையறைக்குள் நின்றுகொண்டு உணர்ச்சிகளுக்குத் தீனி போடும் முயற்சியில் ஈடுபடுபவர்கள். மனிதனுக்குள் இருந்து இயல்பாகவே கிளர்ந்தெழும் பாலுணர்வு பண்பாட்டு அம்சங்களால் கட்டுப்படுத்தப்படும் போது ஒழுக்கப்போர்வைக்குள் நின்றுகொண்டு உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடிக்கொள்ள முனைபவர்களும் இவர்கள்தான்.... இங்கும் கூட கருத்து மாற்றத்தை ஏற்படுத்துவதில் அறிவுசார் கருத்தரங்குகள், பேச்சுக்கள், எழுத்து ஊடகங்கள் தோல்வியடைந்து போகின்றன.

அறிவை முதன்மைப்படுத்தும் பண்பினர்

வாழ்க்கைப் போக்கை அறிவுசார் ரீதியில் உற்றுணர்ந்து அதன் ஓட்டத்திற்கமைய வாழ முனையும் சிறுபகுதி பெண்கள் இவர்கள். உலகில் பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களை உலக இலக்கியங்கள் வாயிலாகத் தேடி அறிந்து அதை சமூகத்துக்கு  வெளிப்படுத்த நினைப்பவர்கள், அறிவியல் கண்கொண்டு நோக்கி அனைத்தையும் அறிவால் பகுத்து அதன் சாதகபாதகங்களை சமூகத்திற்கு எடுத்துக்காட்ட முனைபவர்கள், ஒரு பெண்ணின் இயலாற்றல் எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டு அதனைச் செயற்படுத்தும் நோக்கில் சமூகத்திலிருந்து அன்னியப்பட்டுப் போய் நிற்பவர்கள், தனது அறிவுடமையை மூலதனமாக வைத்து சமூகத்தில் தளம் பதிக்க நினைத்து புரியாத மொழியில் இலக்கியம் படைக்க முனைபவர்கள், யதார்த்தம் சரியாகப் புரிந்தாலும் கட்டுக்கோப்புக்களைக் களைந்தெறிந்து தனித்து நடமாடும் வல்லமை இழந்தவர்கள், கைவிட்டுப்போன கணவனை, கைகால் இழந்தவனை தனியே நின்று குடும்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றவர்கள், எமது கலாச்சாரம், சமூகச்சூழல் என்பவற்றுக்குள் நின்றுகொண்டு தாம் பெற்ற அறிவைப் பகுத்தாராய முனையாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில் அதை அப்படியே இங்கு பிரதிபலிக்க முயன்று தமது இனப் பெண்களின் ஏன் ஆண்களின் கேலிக்கும் இலக்காகின்றவர்கள் என இவர்கள் பலவகைப்படுவர்.

தமிழ்ப் பெண் சமூகத்தின் பண்புரு மாதிரிகள்

மாற்றம் நாடாப் பண்பு

'பட்டினி கிடந்தாலும் நல்லநாள் பெருநாளில் நாலுபேர் 'நாக்கு வளைக்காமல்' நல்லதாய் உடுத்துக் கொண்டு நிற்கவேண்டும்; வாயைக்கட்டி வயிற்றைக் கட்டியாவது நகைநட்டுச் சேர்க்க வேண்டும்; குடிகாரனோ, கூத்தியார் வீட்டுக்குப் போறவனோ, மாப்பிள்ளை எவனாக இருந்தாலும் இருப்பதை வித்துச் சுட்டாவது பிள்ளையைக் 'கரை' சேர்க்க வேண்டும்; ஆழமாய்ப் படித்து அதிகமாய் உழைத்தாலும், அடியுதை வாங்கிக்கொண்டு கணவனுடனேயே இருக்கவேண்டும்' என்ற சிந்தனைகள் ஆழமாய் புரையோடிப் போயிருக்கும் தமிழ்ப்; பெண்ணில் ஏற்படும் மாற்றம் சாதாரணமாக நோக்கப்படக்கூடியதல்ல. அறியாமையில் உழல்பவர்களை அறிவுசார் நடவடிக்கையால் மாற்ற முனையலாம். அதிகம்  படித்துவிட்டும் தன்னைச் சுற்றி விலங்குகளைத் தானே போட்டுக் கொள்பவளை கருத்தரங்குகளோ, கண்டனப் பேரணிகளோ மாற்றுவதென்பது இலேசானதொன்றல்ல. போதனைகள் தமிழ்ப் பெண்ணிடம் எடுபடுவதை விட அடுத்தவரின் கோலங்கள் எடுபடுவது அதிகம். இதற்கமையவே சமூகத்தில் பெண்களின் இருப்புநிலை பற்றிய தேடலையும் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது.

பெண்ணுரிமைச் சிறைக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும் பண்பு

தனக்கெனத் தனித்துவ வரலாற்றையும் உயர்ந்த பண்பாட்டையும் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பெண்கள்; ஏனைய பெண்களுடன் ஒப்பிடுமிடத்து வெளிப்படையான உரிமை மறுப்புகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பினும், அறிவுசார் ரீதியில் ஆண்களுக்கு இணையாக வளர்ந்திருப்பினும் பிற்போக்குத்தனங்கள் மற்றும் மூடப் பழக்கவழக்கங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடுவது தமிழ்ச்சமூகத்தின் பாமரப் பெண்ணுக்கு மட்டுமன்றி படித்த பெண்ணுக்கும் முடியவில்லை. ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ்ப் பெண்களை விடவும் ஈழத்துத் தமிழ்;ப் பெண்கள் சுதந்திரம் உடையவர்கள் என்ற கருத்துநிலை பலரிடையேயும் காணப்படுகிறது. கருவில் இருக்கும் போதே ஆணா பெண்ணா என்று கண்டுபிடித்து பெண்ணாயின் அதனை அழித்துவிட நிர்ப்பந்திக்கும் கணவனோ, அல்லது சாப்பாட்டில், வாழ்க்கை வசதிகளில், கல்வியறிவில் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அப்பாக்களோ, அதுவுமன்றி திருமணம் செய்த பின்பும் அடிக்கொருதரம் பணம் கேட்டு அனுப்பும் மாமியார்களோ, அண்ணாவிடம் கோள்மூட்டிக் கொடுத்து அண்ணிக்கு அடிவாங்கிக் கொடுக்கும் மைத்துனிகளோ தமிழ்ச் சமூகத்தில் மிகக் குறைவு என்பதைப் பார்க்கும் போது அப்படி ஒரு கருத்து நிலை உண்மைதான் என்ற மயக்கநிலை இருக்கத்தான் செய்யும். இலவசக் கல்வி, சம வாய்ப்பு, சட்டத்தின் ஆதரவு போன்றவற்றால் ஏனைய தமிழ்ப் பெண்களுடன் ஒப்பிடுமிடத்து வெளிப்படையான உரிமை மறுப்புகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் எனினும் உலகிலுள்ள ஏனைய சமூகங்களிலுள்ளதைப் போன்று  பிற்போக்குத்தனங்களின் ஆக்கிரமிப்புக்குள்  பல நூற்றாண்டுகள் சிக்குப்பட்டிருப்பவர்களாகவே இவர்கள் இனங்காணப்படுகின்றனர்.

ஒடுக்குமுறைச் சிறைக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும் பண்பு

ஒரு இனத்துக்குள்ளேயே பிரதேச வேறுபாடும், சாதி, மத, வர்க்கம், பால் என்ற அடையாளங்களுடன் பெண் என வரும்போது புறத்தோற்ற அம்சங்களும் முக்கியம் பெற்றுவிடுகின்றன. இந்த அடையாளங்களின் வலைப்பின்னலுக்குள்ளே நின்றுகொண்டு தான் பெண்ணொடுக்குமுறை என்ற அம்சத்தையும் கருத்தில் கொள்ள முடியும். குடும்பம், சமூகம், அரசு என்ற மூன்று வலுவான நிறுவனங்களின் கட்டமைப்புக்குள் நின்று கொண்டு மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்த அடையாளங்களின் நேரடியான, மறைமுகமான தாக்கங்களுக்கு உட்பட்டவளாகவே இன்றைய பெண்ணின் விம்பத்தை பார்க்க முடிகிறது. குடும்பம், சமூகம், அரசு என்ற இந்த மூன்று வலுவான சட்டங்களும் உலகின் எந்தவொரு பெண்ணையும் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. இந்தச் சிறைக்குள் நின்றுகொண்டே தான், தாம் வாழும் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சூழலுக்கூடாக மத, சாதிய, வர்க்க, பால் ஒடுக்கு முறைகளின் தீவிரத் தன்மையோ, மிதவாதத் தன்மையோ பெண் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக பாகிஸ்தானிய, பங்களாதேசிய முஸ்லிம் பெண்ணொருத்தி மதரீதியான ஒடுக்குமுறைக்கு உட்படும் தாக்கமளவுக்கு இலங்கை இந்திய முஸ்லிம் பெண்கள் உட்படுவதில்லை. உயர்சாதிப் பெண்ணளவுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண், பால் ஒடுக்குமுறைக்கு உட்படுவதில்லை.
இலகுவான எடுத்துக்காட்டு ஒன்றின் மூலம் பத்திரிகை விளம்பர பாணியில் இந்த முக்கோண கூண்டொன்றிற்குள் சிறைப்பட்டிருக்கும் பெண்ணை அடையாளப்படுத்திப் பார்க்கலாம்.

வன்னிப் பிரதேசத்தில் ஒட்டங்;குளம் என்னும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான 30 வயது இந்துக் கூலிப்பெண்.
'இந்தப்பெண் மதுபோதையில் வந்து அடித்து நொருக்கும் கணவனைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. பிள்ளைகளுக்கு ஒரு வயிற்றுக் கஞ்சிக்காக நாள் முழுதும் மாவிடித்தோ, தோட்டவேலை செய்தோ உழைக்க வேண்டியிருக்கிறது. தனது சாதிக்குள்ளேயே 'திடீர்' பணக்காரராகித் தம்மை ஒதுக்கும் தமது உறவினரின் புறக்கணிப்பைத் தாங்க வேண்டியிருக்கிறது. உயர்சாதியின் எடுபிடியாகித் தமது உழைப்பை உறுஞ்சும்; தன் சாதிச் சண்டியரையும், குறைந்த கூலியில் தமது உழைப்பை சுரண்டும் அதேசமயம் பாலியல் ரீதியாக சுரண்டும் தமது முதலாளியையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பாடசாலையில் ஓரங்கட்டப்பட்டு முறிந்த மனதுடன் வரும் பிள்ளைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் தமிழ்ச்சமூகம் முன்னெடுத்துவரும் போராட்ட வாழ்வியலால் மோசமடைந்திருக்கும் வறுமை, பசி, பட்டினி, இடம்பெயர்வு, பொருளாதாரத் தடை என்பவற்றுடன் இராணுவ ஆக்கிரமிப்பு அபாயம் வருமிடத்து பாலியல் ரீதியாகவும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது'.

பெண்ணிய ஆளுமைப் பண்பு

இத்தனை ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்கொண்ட போதும் கூட இந்தப்பெண் படித்த உயர்சாதிப் பெண்ணொருத்தியைவிடக் கூடுதலான சுதந்திரத்தை அனுபவிக்கின்றாள் என்பது தான். உயர்வர்க்கப் பெண்ணுக்கு இருப்பது போன்று கற்புடைமைக் கோட்பாடு, விதவைநிலை, சீதனப் பிரச்சினை போன்ற அம்சங்களின் பாதிப்பு இங்கு மிகக்குறைவு. தனித்;தியங்கும் ஆற்றல், முடிவெடுக்கும் ஆற்றல் இருப்பதைக்கொண்டு திருப்தியடையும் ஆற்றல், பாரிய பிரச்சனைகளையும் தாங்கி நிற்கும் ஆற்றல் இவளிடம் மிகவும் அதிகம். உழைப்பு, சுறுசுறுப்பு, நீண்ட ஆயுள் இவர்களின் சிறப்பம்சங்கள்.

'அந்த பெண்மணிக்கு வயது 65 இற்கு மேல் இருக்கும். ஆறும் ஆண்பிள்ளைகள். பிள்ளைகளிடம் கடமைப்படக்கூடாது என்ற சிந்தனையும் உடலில் சக்தியிருக்கும் வரை தனது உழைப்பில் தான் வாழவேண்டும் என்ற மனவுரமும் இணைந்து இந்தவயதிலும் மாவிடித்தல், வீடு மெழுகுதல் என்று தினமும் தேனீயின் சுறுசுறுப்புடன் ஓடித்திரிபவர். வேலை கிடைக்காத போது ஒரு சுருட்டும், ஒரு கோப்பை தேனீரும் உடலை ஆற்றும். கையில் கொஞ்சம் பணம் புரண்டால் பேரப்பிள்ளைகளுக்கு அது உடனே போய்விடும். எழுதப் படிக்கவோ, இன்றைய உழைப்பை சேமித்து வேலையில்லாதபோது பயன்படுத்தும் அறிவோ, ஆண் பிள்ளைகளைப் பெற்றபடியால்  உரிமையோடு சாப்பிடலாம்தானே என்ற எண்ணமோ அறவே கிடையாது. உயர் வர்க்;கப் பெண்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உண்டு.

நடத்தைசார் வன்முறையின் தாக்கத்தை குடும்ப வன்முறையூடாக மிகவும் மோசமாக அனுபவிப்பவர்கள் இவர்கள். அதேசமயம் பசி, பட்டினி, அறியாமை போன்ற அமைப்பியல் வன்முறையின் நேரடி இலக்கும் இவர்களே. ஆனால் அரச வன்முறை வடிவங்களில் ஒன்றான இடப்பெயர்வு நடுத்தர வர்க்கத்தினரை பாதித்த அளவுக்கு இவர்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். இத்தனை கால ஒடுக்குமுறைகளையும் தாமே விரும்பி ஏற்றுக்கொள்ளுமளவிற்கு அறியாமைக்குள் முடக்கப்பட்ட நடுத்தர வர்க்கப்பெண்கள் ஒடுக்குமுறையின் அழுத்தங்களில் தப்பிப் பிழைக்க முடியாமையின் வெளிப்பாடாக மரபுகளை மீறும் கட்டங்களில் அல்லது விழித்தெழும் கட்டங்களில் சாதி, பணம், படிப்பு, அந்தஸ்து என்பவற்றின் அடிப்படையில் துச்சமாக மதித்து கீழே தாம் தள்ளிய இந்த தாழ்த்தப்பட்ட  சமூகத்தினர் தம்மைவிடவும் சுதந்திர உணர்வுடன் வாழ்கின்றார்கள் என்பதையும், தனிச் சொத்துடைமை குறைந்த அல்லது அறவே இல்லாத இம்மக்கள்தான் ஆதிகால தாயுரிமைச் சமூக அமைப்பின் எச்சங்களை சுமந்து நிற்பவர்கள் என்பதையும் வியப்புடனே பார்க்க வேண்டியிருக்கிறது. இளவயதுத் திருமணங்கள், கட்டுப்பாடுகள் குறைந்த குடும்ப உறவுகள், குடும்பத் திட்டமிடலின்மை, ஆரோக்கியக்கேடு, சுகாதாரச் சீர்கேடு, அறியாமை போன்றவை பிரதான பண்புகளாக இருக்கும் இத்தகைய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமூகங்களில் படிப்பால், பணத்தால் முன்னுக்கு வருபவர்கள் தமது சமூகத்திலிருந்து மெல்ல விலகி உயர்மட்ட குடும்பங்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்ற கசப்பான யதார்த்தத்தை இங்கு உள்வாங்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமன்றி அப்படி வாழ்பவர்கள் மூலம் வெளிவரும் இலக்கியங்கள்கூட மீண்டும் ஆணாதிக்கச் சக்கரத்துள் நுழைந்து விடுகின்றன.

சாதியமைப்புடன் போராடி வாழும் பண்பு

இலங்கைத் தமிழ்ச் சமுகத்தின் நடுத்தரவர்க்கத்தினரில் பெரும்பாலானோர் நிலப்பிரபுத்துவ சிந்தனையும் முதலாளித்துவ வாழ்;நிலையும் கொண்டவர்கள். இதைச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டுமூலம் பார்க்க முடியும்.

'அந்த இளம் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். இருவருமே தொழில் பார்ப்பவர்கள். இடப்பெயர்வு தமது அந்தஸ்தின் வெளிப்பாடுகளை கணிசமாய் காட்டுவதற்கு தடங்கலாகிவிட்டதே என்ற மனப்புழுக்கம் கணிசமாக இருந்தாலுங்கூட முடிந்தவரை தமது வசதிகளை வெளிக்காட்ட முனைப்புடன் நிற்பவர்கள். இடப்பெயர்விற்கு முன்னரான தமது ஊரின் வாழ்நிலையில் தமது வீட்டில் தொழில் செய்பவர்கள் தமது தகப்பனாரைக் கண்டதும் தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி கொள்வர் என்று அடிக்கடி பெருமைப்படும் வர்க்கத்தினர் இவர்கள். குழந்தைகள்; பிறக்கும்வரை எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. பின்புதான் எல்லாமே தொடங்கியது. இருவருமே வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலைக்கு ஆள் தேவை. ஆரம்பத்தில் இருப்பதில் உயர்சாதியினரைத் தேடி அலைந்து களைத்துப்போய் இப்போது வேலைசெய்ய ஆள் கிடைத்தால் போதும் என்ற நிலை. போடும் உடுப்பு, சாப்பிடும் சாப்பாடு, இருப்பிடம் எல்லாம் வேலையாள் கைபட்டுத்தான் நகரும். வீட்டுப் பாவனைக்கு கிணற்றில் தண்ணீர் அள்ள வேலையாளுக்கு அனுமதி உண்டு. ஆனால் அவர் அதில் குளிப்பதற்கு அனுமதியில்லை. சமைப்பது, கறி ருசி பார்ப்பது, குழந்தைக்கு கையால் நன்கு பிசைந்து சோறு ஊட்டுவது அனைத்தும் அவர் பணி. ஆனால் சாப்பிடும் பாத்திரமும், குடிக்கும் பாத்திரமும் அவருக்கு புறம்பு.

உயர் நடுத்தர வர்க்கம் எனச் சொல்லிக்கொள்பவரின் வீட்டுக்கு வெளியே கூட்டுவதும், ஆடு, மாடு, கோழி பராமரிப்பதுவுமே ஒதுக்கப்பட்ட இந்த மக்களுக்கு இடப்பெயர்வின் பின்னரான வாழ்நிலை இவர்களின் வீட்டுக்குள்ளேயே எந்நேரமும் தங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதில் ஒரு முரண்நகை எதுவெனில் சாதித்தடிப்புமிக்க குடும்பத் தலைவனின் பெற்றோர் இருவரும் ஊரிலிருந்து வன்னிக்கு வந்த சமயம் வேலையாளின் கைவண்ணத்தில் உருவான சமையலை மௌனமாய் ஒரு கை பார்த்துவிட்டு எழும்பிப்போக வேண்டியிருந்தமை தான். அதேசமயம் வேலை செய்பவரின் உறவினர்கள் யாராவது இவரைச் சந்திக்க வந்தால் தீண்டாமையின் சகல பண்புகளுடனும் தான் அவர்கள் இன்றும் உபசரிக்கப்படுகின்றனர்.

இந்தச் சமூகப்பெண்களிடம் காணப்படும் மிகப்பெரும் பலவீனம் வாழ்வின் அரைப்பகுதி நல்ல மனைவியாக இருப்பதற்கான தயார்படுத்தல்களிலும் மீதிப்பகுதி தனது பெண் குழந்தைகளை தயார்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்வதுமேயாகும். இவர்களைப் பொறுத்து வாழ்க்கையே திருமணம். திருமணம் வாழ்வின் ஒரு அங்கம் மட்டும் அல்ல. பள்ளிப்படிப்புப் பெண்ணிலிருந்து பட்டதாரிப் பெண்வரை இதுதான்.

புதுப்புதுப் பாணிகளில் மாறிக்கொண்டிருக்கும் ஆடை அலங்காரங்களின் நவீன மாதிரிகளாய் நடமாடுவதற்கும், வீதி முழுவதையும் நிறைத்துக்கொண்டு சைக்கிள் சவாரி செய்வதற்கும், விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் தனியார் கல்விக் கூடங்களில் கற்கவும், விரும்பிய பாடநெறியை தெரிவு செய்வதற்கும் முழுச்சுதந்திரம் உடையவர்கள் இவர்கள். இத்தனை வாய்ப்புகளும் கிடைத்த போதிலும் இவர்களில் கணிசமானோர் பரீட்சையில் சித்தியடைவதற்கான நேர்த்தி, தொழில் வாய்ப்பு பெறுவதற்கான நேர்த்தி என்று கோவிலில் தவம் கிடப்பவர்கள். உடற்சுத்தி, இதய சுத்தி, சொல் சுத்தி மூன்றும் இறைவனைத் தொழ மிக அடிப்படையானவை என்ற மதநியமங்களை மறந்து கோவில் சுற்றாடலை களியாட்ட விழாவாக மாற்றும் வகையிலான ஆடை அலங்கார வகைகளுடன் நடமாடுபவர்களும் இவர்கள் தான். ஓப்பீட்டு ரீதியில் கணிசமானளவு ஆண்களைவிடப் பெண்களே அதிகம் படித்தவர்களாகவும் தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர்.

முடிவுரை

பெண்ணினத்தின் மிகமிகச் சிறுபகுதியினரே பெண்ணொடுக்குமுறை வடிவங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் அதேசமயம் பெரும்பகுதி பெண்ணினமோ இதுபற்றிய எந்தவொரு அறிவோ, உணர்வோ இன்றி ஒடுக்குமுறைகளுக்குப் பழக்கப்பட்டு வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவிப்பது கண்கூடாகத் தெரிகிறது. குவாட்டமாலாவைச் சேர்ந்த ஆ.டுரபயசனந என்பவரின் பின்வரும் கருத்து லத்தீன் அமெரிக்கப் பெண்களுக்கு மட்டுமன்றி எமது பெண்களுக்கும் பொருந்தும்.

'எமது சொந்த வரலாறு தொடர்பாகவோ எமது அடையாளம் தொடர்பாகவோ பெண்களாகிய எமக்கு அதிகம் தெரியாது. எம்மைப்பற்றி எமக்கே தெரியாது. எம்மைப்பற்றி அறியும் வழிவகைகளும் எமக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. யதார்த்த நிலையுடன் நாம் மோதும் கட்டங்களிளெல்லாம் பெண்கள் பற்றிய புராணக் கதைகளை நம்ப நாம் தலைப்படுகின்றோம். எம்மை நாம் தெளிவாகப் பார்ப்பதிலிருந்து தடுக்கப்படுகின்றோம். அடுத்தவர்களைப் பார்ப்பதிலேயே எமது முழுநேரத்தையும் நாம் செலவிடுகின்றோம். அடுத்தவர் நிழலிலேயே நாம் தொடர்ந்தும் வாழ்கின்றோம். அடுத்தவர் எம்மைப் பார்க்கும் முறையே எமது வாழ்வுக்குப் போதுமானது என எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.'

எமது மண்ணில் பெண்விடுதலை பற்றி சிந்திக்கும் பெண்ணோ, பெண்விடுதலையே தெரியாத பெண்ணோ எல்லோர் மனதின் மூலையிலும் இந்த உணர்வே நிறைந்திருக்கிறது என்பதை எம்மால் மறுக்க முடியாது.